தமிழ் மக்களின் தனித்துவ அலைவரிசையாக நேத்ரா அலைவரிசையை மாற்றியமைப்பேன்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களின் தனித்துவ அலைவரிசையாக நேத்ரா அலைவரிசையை மாற்றியமைப்பேன்!

தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழர் வாழ்வியலுக்கும் நான் அந்நியமானவன் அல்லன்!

தொலைக்காட்சித் துறையில் 30வருட அனுபவம் கொண்டவர். நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், செய்தியாசிரியர் உள்ளிட்ட பதவி நிலைகளில் பணியாற்றித் தற்போது நேத்ரா அலைவரிசையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பத்திரிகையாளராகப் பணியை ஆரம்பித்த நிலார் என். காசிம், கவிஞர், கலைஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மாத்திரமன்றி, இலங்கை இலக்கியத் துறையில் நிலையான ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். விசேடமாக சிங்கள மொழியில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட முதல் சிறுபான்மைக் குடிமகன். தமிழ் இலக்கியத்தைச் சிங்களத்திற்குக் கொண்டுசென்ற பெருமகன்!

சிங்களத்தில் தற்போது பிரபலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் உட்பட சுமார் 700இற்கும் அதிகமான பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதி கலை, இலக்கியப் பணியாற்றி வருபவர். ஹரிகரன் இலங்கை வந்து பாடிய பிரபலமான சிங்களப் பாடலை இயற்றியவர். ஆஷா போஸ்லே இலங்கை வந்து பாடிய பாடலை எழுதியவர். சிங்கள பாடல் துறையில் இவருக்கெனத் தனியான ஓர் அத்தியாயத்தை எழுதச்செய்தவர். இவர் நேத்ரா பணிப்பாளராக மனம் திறக்கிறார் இப்படி......

‘நேத்ரா அலைவரிசை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நிரந்தரப் பணிப்பாளர் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. உதவிப் பணிப்பாளர்களாக ரவீந்திரன், எம். என். ராஜா ஆகியோர் கடமையாற்றினார்கள். பதில் பணிப்பாளர்களாக சிங்கள அதிகாரிகள் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கணிசமான சேவையை ஆற்றியிருக்கிறார்கள். தமிழ்ப்பிரிவு இருந்த காலத்திலிருந்து ஓர் அனுபவமிக்கவராக விஸ்வநாதன் விளங்குகிறார். அவர்களுக்குப் பின்னர் சிங்கள உத்தியோகத்தர்கள் காலத்திற்குக் காலம் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். இவ்வாறு மூன்று நான்கு பேர் பணியாற்றியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகக் கொரோனா பரவலுடன் சகல அலைவரிசைகளும் வீழ்ச்சியடைந்தன. அதனால், ஐ, நேத்ரா ஆகிய இரண்டு அலைவரிசைகளையும் முற்றிலும் கல்வி ஒளிபரப்புக்காக வழங்குவதெனக் கூட்டுத்தாபன நிர்வாகம் முடிவு செய்தது. அந்தக் காலப்பகுதி அவ்வாறே கடந்து சென்றது, எந்த நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை. அதற்காகக் கல்வி அமைச்சின் அனுசரணை கிடைக்கப்பெற்றது. பின்னர், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதால், கல்வி ஒளிபரப்பை நிறுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டது. அப்போது அலைவரிசையை மறுசீரமைத்து மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அதற்குப் பொருத்தமான ஒருவரை, வர்த்தக விளம்பரத்துறையை வென்றெடுக்கக்கூடிய ஒருவரை பணிப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் எனக்கிருக்கும் அனுபவம், சிரேஷ்டத்தன்மை, இலக்கிய ஆளுமை போன்றவற்றைக் கருத்திற்கொண்டு, என்னை இந்தப் பதவியில் நியமிப்பதெனக் கூட்டுத்தாபன நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, பணிப்பாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தில் சுமார் முப்பது ஆண்டுகளாக நான் கடமையாற்றிக்கொண்டிருக்கிறேன்.

நான் இந்தத் தொலைக்காட்சிக் கலாசாரத்தில், சிங்கள மொழியில் ஒரு பணிப்பாளராக, செய்தி ஆசிரியராக, தொகுப்பாளராக, செய்திப் பிரிவின் பணிப்பாளராக இந்த முப்பது ஆண்டுகளில் கடமையாற்றியிருக்கிறேன். இவற்றின் அனுபவங்களுடன் சந்தைப்படுத்தல் பிரிவிலும் ஒரு பிரதிப் பணிப்பாளராக சிலகாலம் பணியாற்றினேன். நேத்ரா பொறுப்பை எனக்கு வழங்கியபோது, இல்லாமற்போயிருந்த அந்த அலைவரிசையை மீளக் கட்டியெழுப்புவதுதான் பாரிய பணியாகவிருந்தது. ஏனெனில், எமது தமிழ் தயாரிப்பாளர்கள் ஒவ்வோர் இடத்திலும் சிதறியிருந்தார்கள். அவர்களது திறமைகளும் படைப்பாற்றல்களும் பயன்படுத்திக்கொள்ளப் பட்டிருக்கவில்லை.

முன்பு எமக்கிருந்த கலையக வசதிகள் எல்லாம் இல்லாமற்போயிருந்தன. எனவே, முதலில் அனைத்துத் தயாரிப்பாளர்களையும் ஓரணியில் இணைத்துக்கொள்ள வேண்டிய தேவையிருந்தது. எனது முதல் பணியாக அதனைச் செய்தேன். அதன்பிறகு தேவையான வளங்களை ஏற்படுத்திக்கொடுத்தேன். எனினும், சகல அரச நிறுவனங்களுக்குமிருந்த செலவுக் கட்டுப்பாடு எனும் சவால் எமக்கும் இருந்தது. இருந்தபோதிலும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குத் தமக்கென ஒரு தனி அலைவரிசை உண்டு என்கின்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், நேரலை, செய்தி, நடப்புவிவகாரம் முதற்கொண்டு நிகழ்ச்சிகளை வடிவமைக்கக்கூடியதாகவிருந்தது.

காலையில் பத்திரிகைக் கண்ணோட்டம் முதல் இரவு செய்தியறிக்கை, நாடகங்கள் வரை நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க முடிந்தது. இதனால், ஒருசில மாதங்களிலேயே தமக்கென ஒரு தனியலைவரிசை உண்டு என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவானது. இதன் மூலம் தமிழ் புத்திஜீவிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மக்களின் குரலுக்கும் அவர்களின் கலை, இலக்கிய, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் வாழ்வியல் இதில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதன்போது விஸ்வநாதன் போன்றோர் என்னைப் பாராட்டினார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வர்த்தகத்துறையை வெற்றிகொள்வது எவ்வாறு என்ற சவால் எமக்கு ஏற்பட்டது. நான் எனக்கிருந்த அனுபவத்தைக்கொண்டு சிறந்த திட்டமொன்றை வகுத்து நிர்வாகத்திடம் சமர்ப்பித்து ஒப்புதலையும் பெற்றுக் கொண்டேன். எனினும், கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற எனக்கு ஆறு மாத காலத்தில் நிறுவனத் தலைவர்கள் இருவருடனும் பணிப்பாளர் நாயகங்கள் இருவருடனும் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் இருந்த தலைவருடன் கலந்துரையாடி இணக்கத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும்போது புதியவர் வந்தார். அவருக்கு விடயத்தை ஆரம்பத்திலிருந்து தெளிவுபடுத்தி செயற்படுத்துவதற்குக் காலம் தேவைப்பட்டது. எவ்வாறெனினும், எமது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றோம். அந்த வகையில் எமது அலைவரிசையை முன்னணிக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தேசிய அலைவரிசையைவிடவும் நேத்ராவை மிக வேகமாக முன்னேற்றி எமது இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம்.

இப்போது எமது தயாரிப்பாளர்கள் முன்னரைவிட மிகவும் திருப்தியுடன் பணியாற்றுகிறார்கள். எதிர்பார்ப்புகளுடன் கடமையாற்றுகிறார்கள். ஆதலால், நாங்கள் சரியான ஒரு பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம் என்று சொல்ல முடியும். எனவே, எதிர்காலத்திலுள்ள சவால்களை வெற்றிகொள்வது பெரும் கடினமில்லை என்று திடமாக நம்புகிறோம்.’

தற்போதைய தமிழ் நிகழ்ச்சிகளில் உங்களுக்குத் திருப்தியடையக்கூடிய நிலைமை காணப்படுகிறதா?

முன்பு நேத்ரா பிரிவு என்று இருந்தது. இதனை ஒரு பிரிவாக அன்றித் தனியான ஓர் அலைவரிசையாகக் கருதுமாறு நான் நிர்வாகத்திற்குக் கூறியிருக்கின்றேன். கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இதில் ஐந்துவீதமானவர்கள்கூட நேத்ராவில் இல்லை. இதன் வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், சுயாதீனமான ஓர் அலைவரிசைக்குரிய அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றேன். எனது இந்தக் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.  கடந்த காலத்தில் குறைபாடுகள் நடந்திருக்கலாம், அதனைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. அடுத்தது, நாடகங்களைப் பொறுத்தவரை இலங்கையர்கள் பெரும்பாலும் இந்திய நாடகங்களில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள். அந்த மனோபாவத்திலிருந்தும் மோகத்திலிருந்தும் எமது ரசிகர்களை விடுவிக்கும் வகையில் ரூபவாஹினி நாடகங்களைத் தயாரித்த சந்தர்ப்பங்களும் உண்டு.

தயாரிப்பு செலவினம் காரணமாகத் தொடர்ந்து அதனை முன்னெடுக்க முடியாதுபோய்விட்டது. எனவே, இந்திய படைப்புகளுடன் கலந்தே நாம் ஒளிபரப்பு செய்ய வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில், இலங்கை வாழ் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஊடகங்களில் பரந்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வாழ்வியல், கலை, கலாசாரம் போன்றவற்றுக்குக் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆகவே, அரச ஊடகம் என்ற வகையில் அவற்றுக்குக் கூடுதல் இடத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. எனினும், இதற்காகத் தற்போது திறைசேரியினால் எந்த நிதியொதுக்கீடும் கிடையாது. ஆகவே, நாங்கள் சுயமாகப் பயணிக்க வேண்டிய நிலையில், வர்த்தக சந்தையை வெற்றிகொள்ளும் சவாலுக்கும் முகங்கொடுத்தேயாகவேண்டும். கம்பியில் நடக்கும் இந்தச் சவாலை நிச்சயம் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் நாடகத்துறைக்குப் புத்தூக்கம் அளிப்பதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதி மக்களின் வாழ்வியல், கலை, கலாசாரங்களை உள்வாங்குவதற்கும் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கின்றோம்.

நேத்ராவை சிங்கள அதிகாரிகள் மேற்பார்வை செய்ததாகச் சொன்னீர்கள். நீங்களும் சிங்கள மொழியில் கல்வி கற்றதுடன் சிங்கள இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றவர். எனவே, ஒரு தமிழ் அலைவரிசையை வழிநடத்துவது உங்களுக்கு சவாலாக இல்லையா?

நிச்சயமாக இல்லை. நான் சாதார முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன். எமது பெற்றோர் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்கள். நான் சிங்கள மொழியில் பயின்றாலும், எனது உடன்பிறப்புகள் தமிழில் கற்றார்கள். மாமாமார் தமிழ் ஆசிரியர்கள். இந்தப் பின்புலத்தைக் கொண்ட நான் தமிழையும் கற்றிருக்கின்றேன்.

அதேநேரம், இலங்கையில் சிங்களத்தில் விசேட பட்டம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினன் என்றால் அது நான்தான் என்று பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். சிங்களத்தில் முதுமாணிப்பட்டப் படிப்பை மேற்கொண்டதுடன் சிங்களத்தில் நீண்டதூரம் பயணித்தேன். தமிழை மாத்திரமன்றித் தமிழ் இலக்கியமும் கற்றிருக்கிறேன். உதாரணமாகச் சொல்வதானால், இலங்கையில் தமிழ்க் கவிதை இலக்கியத்தை முதன் முதலில் சிங்களத்திற்குக் கொண்டு சென்றது நானே. எம். ஏ. நுஃமான், ராமலிங்கம், சபா ஜெயராசா, யேசுராசா, புதுவை ரத்தினதுரை, சிவசேகரம், ஷம்ஸ், சோலைக்கிளி முதலானோரின் கவிதைகளைச் சிங்களத்தில் மொழியாக்கம் செய்திருக்கின்றேன்.

இலங்கைத் தமிழ்க் கவிதையின் அடையாளம் என்று ஜெயபாலனின் நூலை மொழியாக்கம் செய்திருக்கின்றேன். இஃது முதலாவது ஓர் ஆய்வு நூல். சாதாரண ஒரு தட்டெழுத்தாளர் மொழிபெயர்ப்பதற்கும் இலக்கியத்தை மொழியாக்கம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. மொழி ஆளுமை இல்லாமல் மொழியாக்கம் செய்ய முடியாது. தமிழ் சிறுகதைகளை சிங்களத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கின்றேன். அயலவர்களின் இலக்கியம் என்று தமிழ் இலக்கியத்தைச் சிங்களத்தில் எழுதியிருக்கின்றேன். கடந்த 30ஆண்டுகளில் சிங்கள மாற்றுக் கருத்துப் பத்திரிகைகளில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். ஆகவே, தமிழ் இலக்கியம், தமிழ் கலை, கலாசாரம் போன்றவற்றுக்கு நான் அந்நியன் அல்லன். அவற்றோடு பின்னிப் பிணைந்தே வாழ்கிறேன். மற்றையது, நான் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இணைவதற்கு முன்னர் மனித உரிமை அமைப்பொன்றில் பணியாற்றினேன். சிவில், மனித உரிமை செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டிருக்கின்றேன். 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவிக்கு வந்தபோது வடக்கிற்குச் சென்ற முதலாவது தூதுக்குழுவில் நானும் இடம்பெற்றிருக்கின்றேன். வாசுதேவ நாணாயக்கார தலைமையிலான அந்தத் தூதுக்குழுவே 1983இற்குப் பின்னர் பூநகரி ஊடாக வடக்கிற்குச் சென்ற முதலாவது குழு. 17பேர் கொண்ட அந்தக் குழுவில் பங்கேற்ற நான் அப்போதிருந்தே மக்கள் நலன்சார் செயற்பாடுகளில் பங்கெடுத்திருக்கின்றேன். எனவே, இங்குப் பணியாற்றிய ஏனைய சிங்கள அதிகாரிகளைவிடத் தேவையான தகுதி எனக்கிருக்கிறது. நான் ஓர் அந்நியன் இல்லை. தொலைக்காட்சித் துறையில், கல்வித்துறையில், இலக்கியத்துறையில், சிவில் செயற்பாடுகளில் எனது தகுதியைப் பூர்த்தி செய்திருக்கின்றேன். நான் எழுதிய இரண்டாம் மொழி தமிழ் பாடப்புத்தகம், நாட்டிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்தத் தமிழ், சிங்கள இலக்கிய நிலா!

ஜீவிதன்

Comments