இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சிய பேராசிரியர் கைலாசபதி | தினகரன் வாரமஞ்சரி

இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சிய பேராசிரியர் கைலாசபதி

“இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சியவர் என்ற ரீதியில் பேராசிரியர் க. கைலாசபதி முக்கியத்துவம் பெறுகிறார். அவரது திறனாய்வுப் போக்குகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் (1) தமிழ் இலக்கியப்பரப்பில் ஏறத்தாழ எல்லாக்காலகட்ட இலக்கியங்களையும் - சங்ககாலம் தொடக்கம் இக்காலம்வரை கருத்தில் கொண்டு ஆய்வில் ஈடுபட்டார் (2) மார்க்சிய அறிவியல் தளத்தில் நின்று தமிழ் இலக்கியங்களையும் அவற்றின் சமுதாயச் சூழலையும் காலகட்டங்களாக வகைப்படுத்தினார் (3) இலக்கியத்தில் சமூகவியல் நோக்கிற்கு அழுத்தம் கொடுத்தார்.(4) ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மேற்கொண்டார் (5) இலக்கியங்களை வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்கினார் (6) ஈழத்தில் தேசிய இலக்கியம் என்னும் கருதுகோளை முன்வைத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தார். இவ்வாறு இலக்கியம், இலக்கியத் திறனாய்வுத் துறைகளில் அவரின் பங்களிப்பு மகத்தானது என்பதை மறக்கமுடியாது. தமிழில் மார்க்சிய அடிப்படையிலான பார்வையை ஒரு திட்டப்பாங்கான முறையில் தமிழ் நூல்பரப்பு முழுவதையும் கருத்தில் கொண்டு கட்டமைத்து வெளியிட முற்பட்டவர்களுள் முதல்வர் என்று கைலாசபதியைக் கூறலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார் கலாநிதி முல்லைமணி வே. சுப்பிரமணியம். (ஞானம் ஒக்ரோபர் 2003பக்:21) 

பேராசிரியர் கைலாசபதி மலேசியா கோலாலம்பூரில் 05-.04.-1933இல் கனகசபாபதி தில்லைநாயகி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை மலேசியாவில் பெற்ற இவர் 1945இல் இலங்கை வந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் பயின்றவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழும் மேலைத்தேய வரலாறும் ஆகியவற்றைப் பாடமாகக் கொண்டு இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957இல் பெற்றார். அக்காலத்தில் பெயர்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது. 

பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ்பெற்ற “லேக்ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந்நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. தினகரன் பத்திரிகையில் பொறுப்பாசிரியராக 1957முதல் 1961வரை பணியாற்றினார். அக்காலத்தில் தினகரனை ஓர் இலக்கிய இதழாக ஆற்றிய பெருமை பேராசியருக்கே உரியது. 

பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித் துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 

பின்னர் இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றினார். 

பேராசிரியர் 1964இல் மாணிக்க இடைக்காடரின் மகள் சர்வமங்களத்தைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு சுமங்களா, பவித்திரா ஆகியோர் புதல்விகளாவர். 

1974ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக 19ஜூலை 1974இல் நியமனம் பெற்றார். 31, ஜூலை 1977வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார். 

கைலாசபதி பல்கலைக்கழகத்தில் இருக்கும்போதே முற்போக்கு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1956இல் இலங்கையில் ஒரு பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உதவியுடன் தேசிய மத்தியதர வர்க்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இடதுசாரிக் கொள்கைகளை அரசாங்கம் ஆதரித்தது. இடதுசாரிக் கருத்துகள் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றன. இக்கால கட்டத்திலேதான் கைலாசபதியும் ஒரு பட்டதாரியாக சமூகத்தில் காலடி எடுத்து வைக்கிறார். இடதுசாரி இயக்கங்கள் தோன்றின. இதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஒன்றாகும். இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களை இவ்வியக்கம் ஆதரித்தது. மக்களுக்காக இலக்கியம் படைத்தார்கள். இலக்கியத்தில் ஓர் உத்வேகம் கிளம்பியது. முற்போக்கு எழுத்தாளர்களின் தத்துவமேதையாக விளங்கினார் கைலாசபதி. இவர், பல்கலைக்கழக விரிவுரையாளராக பதவியேற்றபின் பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் முற்போக்கு கருத்துக்களையும் எண்ணங்களையும் பரப்பினார். 

தமது கருத்துக்களைப்பரப்புவதற்கு தேசிய ஜனநாயக  முற்போக்குச் சக்திகளை அரவணைத்துச் செல்வது பேராசிரியரின் முக்கிய பண்புகளில் ஒன்றாகவிருந்தது. அவர் பத்திரிகையாளராகத் தொழிற்பட்ட காலத்திலும்சரி பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய காலத்திலும்சரி தன்னைச்சுற்றி ஓர் இலக்கியக் குழுவை அமைத்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்திவந்துள்ளார். 

பேராசிரியரின் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வு முயற்சிகளை நோக்குகின்றபோது, அவற்றினை அவர் வரலாற்று அடிப்படையிலும் சுமூகவியல் அடிப்படையிலுமே ஆய்வு செய்தார் என்பது புலனாகிறது. அவரது ஆய்வுப் போக்கின் அடிநாதமாக இயக்கவியல் பொருள் முதல்வாதக்கண்ணோட்டம் திகழ்ந்தது. பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும் நவீன இலக்கிய நோக்கும் பேராசிரியரிடம் தெளிவாகக் காணப்பட்டமையே அவரால் தமிழ் இலக்கிய வராலற்றின் மாற்றப் போக்கினை இனங்கண்டு ஆய்வு செய்யக் கூடியதாக இருந்தது. அவை சமகாலச் சமூகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதர்சனமாக அமைந்தன எனலாம். 

இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வு நூலாக வெளியிடப்பட்ட Tamil heroic Poetry என்ற நூல், பழந்தமிழ் இலக்கியம் பற்றிய மிக முக்கியமான நூலாகும். கைலாசபதியின் சாதனைகளில் சிகரமாகத் துலங்குவதுதான் Tamil Heroic Poetry – தமிழிலக்கியத்தில் வீரயுகப் பாடல்கள் என்ற ஆங்கிலநூல். இவ்வாய்வில் சங்கப் பாடல்களை பண்டைய கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்புநோக்கியுள்ளார். இந்த ஒப்புநோக்கின் ஊடாக சங்கப்பாடல்கள் எழுந்த காலப்பகுதியை தமிழரின் வீரயுகம் என்றும் அப்பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்றும் முடிவு செய்தார். வரலாற்றுப் பார்வை, வர்க்கச்சார்பு அழகியல் அக்கறை என்ற நிலைநின்று அவர் ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். 

கைலாசபதிக்கு முன் தமிழிலக்கியத்தை ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் இலக்கியத்தை ஒரு கலையாக்கம் என்ற வகையில் கண்டு அதன் அழகியற் கூறுகள், அவை வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்தும் அனுபவம், உணர்ச்சி என்பவற்றைப்பற்றிய கருத்தையே கொண்டிருந்தனர். கவிதையில் கற்பனை உத்தி நடை கட்டமைப்பு இலக்கிய வகைமைகள் என்பன பற்றிப் பேசுவதையே திறனாய்வின் செயற்பாடு என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். 

தமிழ்த்திறனாய்வில் அழகியலுக்கு நிகராக அரசியலுக்கு, உள்ளடக்கத்திற்கு முக்கியம் வழங்கப்படல்வேண்டும் என்ற கருத்தை பேராசிரியர் கைலாசபதி கொண்டிருந்தார். அதற்கமைய பண்டைய இலக்கியங்களை சமுதாய வரலாற்றுப் பகைப்புலத்தில் பொருத்திப்பார்க்க முற்பட்டார். தமிழிலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமுள்ள உறவை விஞ்ஞன ரீதியாக, தர்க்க ரீதியாக ஆய்வு செய்தவர்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறார் கைலாசபதி. கலை இலக்கியம் என்பவற்றின் சமுதாய உறவு நிலை, சமுதாய வரலாற்றியக்கத்தில் அவற்றின் பங்கு, படைப்பாளிகளின் வரலாற்றுப் பாத்திரம் என்பன தொடர்பாக அவர் ஆழமாகச் சிந்திப்பதற்கு அவருடைய மார்க்சியத் தளம்தான் காரணம். 

பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த பேராசிரியர், இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய முன்னோடியாகவும் திகழ்ந்தார். நவீன கால இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை பின்வருமாறு வகுத்துக் கூறலாம் (1) இலக்கியத்தில் தூய அழகியல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை (2) பண்டித வாதத்திற்கு எதிரான போராட்டத்தை, தேசிய இலக்கியக் கோட்பாட்டுத்தளத்தை நிறுவியமை (3) ஒப்பியல் நோக்கின் அடிப்படையில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தமை (4) மக்கள் இலக்கியத்துக்கான ஒரு புதிய தலைமுறையை உருவாக்கியமை ஆகியன பேராசிரியர் கைலாசபதி நவீன இலக்கியத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளாகத் திகழ்கின்றன. 

தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது.  

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது.  

பாரதிமீது மிகுந்த ஈடுபாடுகொண்டவராகத் திகழ்ந்த கைலாசபதி அவர்பற்றிய ஆய்விலும் அதிக அக்கறை செலுத்தினார். பாரதியியல்  என்ற சொல்லினைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவராகவும் கைலாசபதி விளங்கினார். 

மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ்பெற்ற இவர், 49வது வயதில் 1982டிசம்பர் மாதம் 6ஆம் திகதி காலமானார். 

 

Comments