யாழ். பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ‘வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ‘வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்’

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர்நாயகம் வி. என். மதிஅழகன் எழுதிய ‘வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ என்ற கருவி நூலை ஊடக பட்டப்படிப்பு மாணவர்களின் உசாத்துணை நூல்களில் ஒன்றாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது.  

ஊடக கற்கைகள் துறை அதன் இளமாணிப் பட்டப்படிப்பு பாடவிதானத்தில் ‘வானொலித் தயாரிப்பும் முன்வைப்பும்’ (Radio Production and Presentation – General Degree (CMC 32013) and Honours Degree (CMCH 31023) பாட அலகின் வழி ‘வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ நூல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் அறிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் பல்பரிமாணம் கொண்ட வி. என். மதிஅழகன் அதில் தமது பொன்விழா ஆண்டில் பிரவேசித்துள்ள வேளையில் இந்த  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்தி வாசிப்புக்கென உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் செய்தி வாசிப்பாளரான வி. என். மதிஅழகன், வானொலி, தொலைக்காட்சி செய்தித்துறையில் அனுபவம் பெறுவதற்கு முன்னர் தினபதி, சிந்தாமணி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவில் செய்தி மற்றும் நடப்பு விவகாரத் தயாரிப்பாளாராக சேவையாற்றிய அனுபவம் மிக்கவர். கனேடிய ரி.வி.ஐ தொலைக்காட்சி நிறுவன செய்திப்பிரிவு ஆலோசகராகவும் விளங்கியவர்.

‘வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ நூல் இலங்கை ஒலி – ஒளிபரப்பு வரலாற்றில் வெளியான முதலாவது கருவி நூல் என துறைசார்ந்த விற்பன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Comments