பாலர் பாடசாலைகளில் இலவச காலை உணவு | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பாலர் பாடசாலைகளில் இலவச காலை உணவு

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலைநேர உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதமாகும்போது நாட்டிலிருக்கும் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

சிறுவர்களின் போஷாக்கின்மை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

காலை நேர இலவச உணவு வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கான திட்டத்தை தயாரித்திருக்கின்றோம். ஏனெனில் தாய்ப்பாலுக்கு பின்னர் குழந்தைகள் பாலர் பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதன்போது அவர்களுக்கு போஷாக்கு கிடைக்க வேண்டும்.

அத்துடன் பிள்ளைகளின் ஆரம்பம் தாயின் கருவறையாகும். அதனால் கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்குணவுக்காக 10மாதங்களுக்கு 20ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படுகின்றது.

அந்த தொகைக்கு மேலும் 250ரூபா சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குழந்தைகள் போஷாக்கு குறைபாடு இல்லாத குழந்தைகளாக பிறப்பதற்கு தாய் கர்ப்ப காலத்தில் போஷாக்கான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனாலேயே கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு பொதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோமென்றார்.

Comments