ஒரு மாத காலப் பகுதிக்குள் 110 மில்லியன் டொலர் முதலீடு | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ஒரு மாத காலப் பகுதிக்குள் 110 மில்லியன் டொலர் முதலீடு

- அரசின் முடிவுக்காக காத்திருக்கும் புலம்பெயர் இலங்கையர்

- ஜனாதிபதி ரணில் புலம்பெயர் சமூகத்துக்கு விடுத்த  அழைப்புக்கு 'பைனஸ்' தனியார்  நிறுவனம் பச்சைக் கொடி 

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் இலங்கையர் முன்வந்துள்ளனர். 

இதன்படி சுவிற்சர்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் 05நாடுகளில் செயற்படும் பைனஸ் தனியார் நிறுவனம், அடுத்த 10நாட்களில் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வாழைச்சேனை காகித ஆலையிலும் அடுத்துவரும் 30நாட்களில் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை சோளப் பயிர்ச் செய்கை உள்ளிட்ட விவசாயத்துறையில் கிழக்கு மாகாணத்திலும் முதலீடு செய்வதற்குத் தயாராக இருப்பதாக நிறுவனத்தின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான சிவபாதம் விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையருக்கு விடுத்துள்ள அழைப்பு என்பன நம்பிக்கை தரக்கூடியவையாக உள்ளன. அதனடிப்படையிலேயே தாயகத்தில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டை மீளக்கட்டியெழுப்ப உதவுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்போடு தாயக உறவுகளுக்கு உதவும் முகமாக பைனஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தலைமை தாங்கிவருவதோடு அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். 

ஜனாதிபதியின் அழைப்பின் அடிப்படையில் தாயகத்தைக் கட்டியெழுப்ப முதலீடுகளை செய்து உதவுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதன் நிமித்தம் புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் உள்ளிட்ட எமது பிரதிநிதிகள் வாழைச்சேனை காகித ஆலையை கடந்த வாரப் பிற்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டனர். அதில் முதலீடு செய்வதற்கான எமது விருப்பத்தை நாம் தெரிவித்துள்ளோம். முதலீட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் அடுத்த 10நாட்களில் 10மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக உள்ளோம். இந்நாட்டுக்கு தேவையான காகிதாதிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி காணப்படுவது எமக்கு பெரும் பக்கபலமாக இருக்கிறது. 

அதேநேரம் அடுத்துவரும் 30நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 100மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். குறிப்பாக சோளப் பயிர்ச் செய்கை உள்ளிட்ட விவசாய துறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதனூடாக திரிபோஷா சத்துணவு, கோழித் தீவனம், மாட்டுத் தீவனம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும். அதன் பயனாக இவற்றின் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் பெருந்தொகை அந்நியச் செலாவணியை மீதப்படுத்திக் கொள்ளலாமென்றும் பைனஸ் தனியார் நிறுவனத் தலைவர் விக்கினேஷ்வரன் குறிப்பிட்டதாக வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டி கடதாசி தொழிற்சாலைகளின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத் நேற்று தினகரன் வாமஞ்சரிக்கு தெரிவித்தார். 

இதேவேளை அண்மையில் தாயகத்துக்கு வருகைதந்த பைனஸ் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் வகையில் மூன்று மில்லியன் ரூபாவை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்காவைச் சந்தித்துக் கையளித்துள்ளனர். தற்போது ஜேர்மன் நாட்டிலிருந்து தாயகம் வந்துள்ள பைனஸ் நிறுவனப் பிரதிநிதியான புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் மற்றும் பி. ஜோன் வசந்தபாலன் உள்ளிட்ட குழுவினர் நிதி மற்றும் வேலைத்திட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.டி சமரதுங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா சுந்தர உள்ளிட்டவர்களையும் சந்தித்துள்ளனர். 

இச்சந்திப்புக்களில் வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டி கடதாசி தொழிற்சாலைகளின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத், ரி.என்.எல் தனியார் தொலைக்காட்சி நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி சுதத் ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 

'இச்சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையிலும் அமைந்திருந்ததாக புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மர்லின் மரிக்கார் 

Comments