நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சிறந்ததொரு ஆரம்பம்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சிறந்ததொரு ஆரம்பம்!

கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வது உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட தேசியப் பேரவையின் முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

சபாநாயகரும், தேசியப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த 20ஆம் திகதி கொண்டுவந்த பிரேரணைக்கு அமைய தேசியப் பேரவையை அமைக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய கடந்த 23ஆம் திகதி இதற்கான உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தேசியப் பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தத் தீர்மானித்திருந்தனர். அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், சிசிர ஜயக்கொடி, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தேசியப் பேரவையானது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக 35உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 23உறுப்பினர்களின் பெயர்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தில் 15உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளவிருப்பதால் இதில் பங்கேற்க முடியாது என்பதை அறிவித்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

முதலாவது கூட்டத்தில் இரு உபகுழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்தியகால நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உபகுழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தரகால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டுக்கு வருவது, அமைச்சரவை அமைச்சர்கள், தேசியப் பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது போன்றவை தேசியப் பேரவையின் நோக்கங்களாக இருக்கும்.

அது மாத்திரமன்றி, தேசியப் பேரவையானது துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துவங்களைக் கொண்டிருக்கும்.

நாடு தொடர்பில் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்கள் குறித்து முன்னுரிமையுடன் ஆராய்வது இதன் நோக்கமாக இருக்கும். அது மாத்திரமன்றி போராட்டக்காரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்களையும் இது முன்னெடுக்கும்.

எந்தவொரு நபரையும் தேசியப் பேரவையின் முன்னிலையில் அழைத்து கருத்துக்களைக் கேட்பதற்கும், விசாரிப்பதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமை கூடுவதற்கு தேசியப் பேரவை தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது எனப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

இது சிறந்ததொரு ஆரம்பமாகும் என இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பலரும் கருத்தைத் தெரிவித்திருந்தனர். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசியப் பேரவை அமைந்துள்ளது எனலாம்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டே எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எனவே நாட்டின் சார்பில் கொள்கைகளைத் தயாரிக்கும் போது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களையும் செவிசாய்த்து குறிப்பாக துறைசம்பந்தப்பட்டவர்களையும் அதில் உள்வாங்கிக் கொண்டு செல்வது காலத்தின் தேவையாகும். இந்த அடிப்படை விடயங்களையும் அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு செயற்படுவது அனைருக்கும் நன்மையளிப்பதாக அமையும்.

பி.ஹர்ஷன்

Comments