பண்ணையில் ஒரு மிருகம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பண்ணையில் ஒரு மிருகம்

ந்நாவலைக் கையில் எடுத்த போதே அதன் அட்டைப்பட வடிவமைப்பு யாரையும் கவரக் கூடிய விதத்தில் இருந்ததை உடனடியாக அவதானிக்க முடிந்ததது. வாசகர்களை இந்நாவலின் கருப்பொருளை அறியத்தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஓவியமும் அதன் தலைப்பும் தனித்துவத்துடன் விளங்கி, நாவலின் இறுதி வரையும் எந்தத் தொய்வும் இன்றி இந்நாவலை இழுத்துச் செல்கின்றது என்றால் மிகையாகாது.  

இந்நாவலானது, இதன் ஆசிரியர் தாயகத்தின் போர்காலச் சூழலில் இருந்து வெளியேறி 1980களின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவில் பண்ணை ஒன்றில் கால்நடை வைத்தியராகப் பணி புரிந்த காலப்பகுதியில் அவருக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வின் புனைவல்லாத, நிஜமான சம்பவங்களை அடிப்டையாகக் கொண்ட கருத்துச்செறிவோடு எழுதப்பட்டிருப்பதால், வாசிக்கும் ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்து, வாசகர்களுக்கு தான் பணி புரிந்த பண்ணையையும் அதனோடு தொடர்பான மாந்தர்களையும் அவர் தம் வாழ்வியலையும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திப் போக முடிந்திருக்கிறது.  

இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கும் இக்கதையின் மாந்தர்களும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகக் கட்டுமானங்களும் அவர்கள் அதன் வழியே அனுபவித்த சவால்களும் சஞ்சலங்களும், வர்க்க வேறுபாடுகளும், சாதீய ஒடுக்குமுறைகளும், ஆண் பெண் சமத்துவமற்ற தன்மைகளும் இந்நாவலின் உரையாடல்கள் வழியே தெளிவாகவும், எள்ளல் கலந்த நகைச்சுவை இழையோடலோடும் இலகுவான மொழி நடையில் வெளிப்படுகிறது.  

இதன் உரையாடல்கள் பலவும் வர்க்க வேறுபாடுகள், சாதீய நிலைப்பாடுகள் நிலை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கும் வழி சமைத்திருக்கிறது. இலங்கையில், அதாவது நொயல் நடேசனின் தாயகத்தில் கூட தமிழகத்துக்குச் சற்றும் குறையாத சாதீய கட்டமைப்புகளும் அதன் வழி சார்ந்த வலிகளும் விரவிக் கிடந்தாலும், அன்றாட கிராமத்து பண்ணை வாழ்வில் சாதி குறித்த பிளவுகள் கொடூரமாக வெளிப்படுத்தப்படும் போது, கதை சொல்லியாகிய நாவலாசிரியர் அதனைப் பல தளங்களிலும் நின்று, துல்லியமாக வெளிப்படுத்திப் போகிறார்..  

இந்நாவல் முழுவதும் கதை சொல்லியான நாவலாசிரியர் இப்பண்ணையின் அழகையும் அதன் நடைமுறை சட்டதிட்டங்களையும் வெகுவாக ரசித்து, அதனை மற்றவர்களும் ரசித்து வசிக்கும்படிக்கு தத்ரூபமாக எழுதியிருப்பதால் வாசகர்கள் தம்மையும் பண்ணையோடு இணைந்து எடுத்துச் செல்ல ஏதுவாக கதையின் ஓட்டம் அமைந்திருக்கிறது.  

இந்த நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ள பத்து அத்தியாயங்களில் ஒன்று அங்கு பண்ணையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் மூன்று சிறுவர்கள் பற்றியது. வறுமையும், சரியான குடும்ப அமைப்பும் பாதுகாப்புமின்றி மிகக் குறைந்த ஊழியத்தில் வேலை பார்க்கும் இச்சிறுவர்களின் பாதுகாப்புக் குறித்து, இந்நாவலாசிரியர் தனது வதிவிட உரிமை சார்ந்த சட்ட திட்டங்களால் தானும் எதுவும் செய்ய முடியாதிருப்பது பெரும் துயரமாகிறது.  

மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்க்கும் ராசு, ராமு, சுப்பு என்னும் மூன்று பதின்ம வயது ஆண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியில் நடந்த வன்புணர்வு குறித்து பையன்கள் என்ற அத்தியாயம் பேசிக் செல்கிறது. எந்த விதமான விடுமுறையோ அல்லது ஓய்வோ இன்றி, அந்தப் பண்ணையில் அவர்கள் தொடர்ச்சியான கடும் உடல் உழைப்பைக் கொடுப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். வறுமையின் நிமித்தம் தமது விளையாட்டு பருவத்தையும், கல்வியையும் தொலைத்தது மாத்திரமன்றி பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாகியிருக்கும் இச்சிறுவர்கள் எதிர்காலத்தில் தம்மை எல்லா விதத்திலும் குரூரமாக வதைத்த இந்தச் சமூகத்தை எவ்வாறு நோக்குவார்கள், அவர்களும் அதே போல தம்மைச் சுற்றியிருக்கும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யக்கூடுமோ என்கின்ற வினாக்களையும் நாவலாசிரியர் வெளிப்படுத்தினாலும் அவரால் பெரிதாக ஒரு மாற்றத்தையும் அங்கு தோற்றுவிக்க முடியாதவாறு அவரது கையறு நிலை ஓங்கி நிற்கிறது.  

பெண்களினதும் பெண் குழந்தைகளினதும் பாலியல் ரீதியான வன்முறைகளை அதிகமாகப் பேசியும் கேட்டும் பழகிய எமக்கு ஆண் குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகம் பேசப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.  

இந்தியாவில் மட்டுமல்ல எந்தத் தேசத்திலும் குழந்தைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை.  

இங்கு பிரித்தானியாவில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் வாயிலாக குழந்தைகள் பாதுகாப்புச் சட்டமும், அதனைச் சரிவரப் பேணுவதற்காக ஆசிரியர் பயிற்சியும் கடுமையாக நடைமுறையிலுள்ளன. பிரித்தானியாவில் பயிற்றப்பட்ட ஆசிரியையாக பணி புரியும் என்னைப் போன்றவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் இக்குற்றத்தை இழைத்தவர் மேல் ஆத்திரத்தையும் தோற்றுவிப்பது இயல்பானதென்றே தோன்றுகிறது.  

இங்கிலாந்து கல்வித்துறையே இங்கு குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான கொள்கைகள், சட்டம், சட்டரீதியான வழிகாட்டுதல்களை தலையாய கடமையாகக் கொண்டுள்ளது. இங்கு அதனோடு இணைந்து சேவை புரிபவர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு நகரங்களிலுமுள்ள நகரசபைகளும் அதன் பாடசாலைகளுமே. ஒரு ஆசிரியரே ஒரு குழந்தையைப் பாதுகாக்கும் படிமுறையில் முதன்மையானவராய் இருக்கிறார். இதற்கான தொடர்ச்சியான பயிற்சிகள் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

இவ்வாறான சட்டநடைமுறைகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் செயற்படுத்தப்படும் போது இவ்வாறான குழந்தைகள் பாலியல் வன்முறைகள் கணிசமான அளவு குறையலாம் என்றே தோன்றுகிறது. இதற்கு அந்நாட்டு அரசுகள் தமது சட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும் அல்லது புதிதாக சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். இந்நாவலில் இப்படியான ஆண் குழந்தைகளின் பாலியல் வன்முறையைப் பேசிச் செல்வது இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மெச்சத் தக்கதொன்றாகவே பார்க்க வேண்டும்.  

இனி மேற்கொண்டு இந்நாவலில் வருகின்ற கதையைத் தொடர்ந்தோமானால் பண்ணைக்கு ஒரு கால்நடை மருத்துவராக நாவலாசிரியர் வருவதற்கு முன்னரே பண்ணையில் இறந்து போன ஒரு இளம் பெண்ணின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது தற்செயலா என்ற பலத்த கேள்வியுடன் அவரின் பண்ணை வாழ்வையும் தன் பணியையும் அப்பண்ணையில் கொண்டு செல்ல வேண்டியதாயிருக்கிறது.  

அப்பெண்ணின் மரணம் குறித்த மர்மத்துக்கும் அவள் வேலை பார்த்த அந்த பண்ணையில் தொடர்ந்தும் வேலை பார்க்கும் கதை மாந்தர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஒரு பரபரப்பை இந்நாவலின் சம்பவங்கள் ஏற்படுத்திச் செல்கின்றன.  

புனைவில்லா இந்நாவலில், எதற்காக நாவலாசிரியர் ஒரு அமானுஷ்யமான ஒரு பெண்ணின் ஆவியை, அதுவும் அப்பண்ணையில் இறந்த கற்பகத்தின் ஆவியை மிக இயல்பாக உலாவ விடுகிறார் என்பது இறுதிவரை ஒரு புதிராகவே இருக்கின்றது.  

அந்தப் பெண் கற்பகம் இப்பண்ணையில் தான் இறக்க முன்பும் இறப்பின் பின்பும் நடந்த நடக்கின்ற விடயங்களை கால்நடை வைத்தியருக்குச் சொல்லிச் செல்வது அதீதமான கற்பனையா அல்லது மாயா யதார்த்தம் என்ற போர்வையா என்பதும் வாசகர்களுக்கு , புனைவில்லாத இந்நாவலின் கதைக்கரு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக கற்பகம், அப்பண்ணையில் வசிக்கின்ற ஒரு பசுவிற்கு கர்ப்பம் தரிக்கும் வேளை வந்துவிட்டதை கதை சொல்லியான கால் நடை மருத்துவருக்கு சொல்லுவதும், அவர் அதை உறுதிப்படுத்துவது உட்பட தன் கொலை, கொலையாளி பற்றிய சில விடயங்களை கூறுவது போலான சில சம்பவங்கள் நாவலின் புனைவல்லாத கதைக்கருவின் நம்பகத்தன்மையை கேள்விக்குப்படுத்துவதாய் உள்ளது. ஒரு கட்டத்தில், நாவலின் இறுதிப் பகுதியில் கதை சொல்லியான நாவலாசிரியர் இந்தக் கொலை பற்றி காவல்துறை மீண்டும் தலையிட்டு ஆராய்ந்து குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஒரு கடிதம் காவல்துறைக்கு எழுதுவதாக இருக்கிறது.

எந்த ஆதாரமுமில்லாது, வெறும் ஆவி வந்து பேசியதிலிருந்தும் அது சொல்வதை நம்புவதிலிருந்துமே நாவலாசிரியர் இந்தக் கொலை விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கேட்பதை, காவல்துறை நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியானதாகவும் இங்கு தெரியவில்லை.  

இருந்த போதிலும் நம்மில் பலருக்கு சில அதிசயிக்கத்தக்க, புரிந்து கொள்ள முடியாத சில விடயங்கள், அமானுஷமான சம்பவங்கள் நடந்திருக்கலாம். அவற்றைப் பற்றி எவருடனும் வெளிப்படையாகப் பேசுவதற்கு எம்மில் பலருக்குத் தயக்கம் ஏற்படுவதுண்டு. கடவுள் மறுப்பாளர்கள் உட்பட பலரும் இவ்விடயத்தில் தம் அதிருப்தியைத் தெரிவிக்கவும் இடமுண்டு. இவ்வேளையில் நாவலாசிரியர் தனக்குச் சரியெனப் பட்ட கருத்தை அப்படியே வாசகர்களுக்குத் தந்திருப்பது பாராட்டத் தக்கது.  

பூங்கோதை
பிரித்தானியாவிலிருந்து

Comments