
ஊழியர்களை ஊக்குவித்து, ஈடுபாட்டைப் பேணும் நோக்குடன், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது பன்நோக்கு பொழுது போக்கு நிலையத்தை, கட்டான, பொத்தோடே பகுதியில் அண்மையில் நிறுவியுள்ளது.
SLT-MOBITEL இன் உரிமையாண்மையின் கீழான பகுதியில் இந்த பொழுது போக்கு நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ஏக்கர் பகுதியில் அதிகாரிகளுக்கான தங்குமிடப்பகுதி மற்றும் 40பேர்ச் பகுதியில் பரந்த விளையாட்டு மைதானம் ஆகிய இரு பகுதிகளை இந்த நிலையம் கொண்டுள்ளது. 1.75ஏக்கர் பகுதியில் சிற்றூழியர்களுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டுள்ளது. முன்னர் இந்தப் பகுதி, SLT அதிகாரிகளின் தங்குமிடமாக காணப்பட்டதுடன், தொற்றுப் பரவல் காலப்பகுதியில் ஊழியர்களுக்கான கொவிட் சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையத்தின் அறிமுக நிகழ்வில் குழும தவிசாளர் ரொஹான் பெர்னாண்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க (SLT), சந்திக விதாரென – பிரதம நிறைவேற்று அதிகாரி (மொபிடெல்) மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தரம் வாய்ந்த பொழுது போக்கு அம்சங்கள், அனுபவங்கள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொடுத்து, சமூகமாக வளர்ச்சியை எய்தும் நோக்கில் SLT-MOBITEL, பன்நோக்கு பொழுது போக்கு நிலையத்தை ஊழியர்களுக்கு பரந்தளவு சேவைகளை உள்ளடக்கியதாக, எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.