இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்வுக்கு குழு | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்வுக்கு குழு

தகவல்கள் சேகரிப்புக்காக யாழ். மாவட்ட செயலகத்தில்  விசேட பிரிவொன்றும் அமைப்பு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷவின் வழிகாட்டுதலின் கீழ் இழப்பீட்டு அலுவலகத்துடன் இணைந்ததாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டமாக குழு அமைக்கப்பட்டுள்ளது.  

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவின் தலைமையிலேயே விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் நபர்களின் தேவையான ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும்.   பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம், ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், இழப்பீட்டு அலுவலக பிரதிநிதிகள் இந்த குழுவில் அடங்குவர்.  

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான இழப்பீட்டு அலுவலகம் 2018ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீட்டு அலுவலகச் சட்டத்திற்கமைய நிறுவப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கூடாக அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.  

இச்செயற்பாட்டை இலகுபடுத்தும் வகையில் நீதி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய அவ்வாறான தகவல்களை சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த விசேட குழுவின் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றதோடு அதில் இணைந்து கொண்ட இழப்பீடு அலுவலக பணிப்பாளர் நாயகம் நசிமா அஹமட் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் குழுக் கூட்டத்தில், அகதிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சிகளான குடியுரிமை பெறுவதில் உள்ள தாமதம், பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் தாமதம், நாடு திரும்பும்போது விதிக்கப்படும் அபராதம், மீண்டும் காணிகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரதான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.   வெளிநாட்டுப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கான (அகதிகளான பெற்றோரின் குழந்தைகள்) உரிமைகள் மற்றும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்காமை மற்றும் இந்திய நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அங்கீகாரத் தகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன.  

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிற சேவைகளை அணுகக்கூடிய வகையில் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யக் கூடிய அனைத்து இடங்களிலும் எளிய பொறிமுறையை உருவாக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.  

ஆவணங்கள் தொடர்பான ஆதரவை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றையும் ஏற்பாடு செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.  

அத்துடன் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகங்களால் தற்போது கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.  

இந்தியாவிலிருந்து ஏற்கனவே வருகை தந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடவும் எதிர்காலத்தில் நாட்டுக்கு வருகைதர விரும்பும் அகதிகளை அழைத்து வரும் செயல்முறையை எளிதாக்குவது தொடர்பில் ஆராயவும் இக்குழு தொடர்ந்தும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments