பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள்! | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள்!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணஅரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தநெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஸ்திரமான அரசியல்சூழலொன்று காணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுஅரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பாராளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடனும், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடனும் அது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் முன்மொழியப்பட்ட தேசியப் பேரவை அமைக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக 35பேரைக் கொண்ட தேசியப் பேரவையை அமைப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர். பிரதமர் தலைமையில் நடைபெற்ற மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இதற்காண இணக்கப்பாடு எட்டப்பட்டு இந்தத் தீர்மானம் தற்பொழுது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் உள்ளது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தரகால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டிற்கு வருவது, அமைச்சரவை அமைச்சர்கள், தேசியப் பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோருடன் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்வது போன்றவை தேசியப் பேரவையின் முக்கிய நோக்கங்களாக அமையும்.

அது மாத்திரமன்றி இந்தச் சபையானது துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துவங்களைக் கொண்டிருக்கும்.

தேசிய சபையின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், இதன் உறுப்பினர்களாகப் பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் மேற்படாதோர் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.

ஜனநாயகத்தின் தூண்கள் என வர்ணிக்கப்படும் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியன ஒன்றுக்கொன்று இணைப்புடன் செயற்பட வேண்டும். இவற்றுக்கிடையில் இணைப்புக்கள் காணப்பட்டாலும் ஒவ்வொன்றும் தமது தனித்துவத்தை இழக்காமல் இயங்குவதே நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

நிறைவேற்று அதிகாரம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களுடனும் சட்டவாக்கம் இணங்கிப் போகவேண்டிய கட்டாய தேவை இல்லை. இருந்தபோதும் சட்டவாக்கம் கூடி எடுக்கின்ற தீர்மானத்துடன் இணங்கிச் செல்ல வேண்டிய கடப்பாடு நிறைவேற்று அதிகாரத்துக்கு உள்ளது. இந்த அடிப்படையில் தற்போதைய நாட்டு நிலைமையை நோக்கினால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளது.

எனவே, சட்டவாக்கம் எனப்படும் பாராளுமன்றம் தன்னைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம், மேற்பார்வை போன்றவை பிரதான செயற்பாடுகளாகும். இதில் மேற்பார்வை அல்லது கண்காணிப்புப் பணிகளைப் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் தேசிய பேரவை இதனைப் பலப்படுத்துவதற்கான மற்றுமொரு நடைமுறையாகக் கருதப்படுகிறது.

நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்படும் தீர்மானங்கள் கடந்த காலங்களில் ஒரு சிலருடைய தனிப்பட்ட முடிவுகளுக்கு இணங்கி எடுக்கப்பட்டமையால் நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை நாம் அனைவரும் அறிந்ததொன்று. இந்தத் தவறுகளில் பெற்றுக் கொண்டவற்றைப் பாடமாகக் கருதி, எதிர்காலத்திலாவது இவ்வாறான பிழைகளைத் தவிர்த்துக் கொள்வது இன்றியமையாதது.

அது மாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் உதவியை நாடியிருப்பதால் கொள்கை ரீதியாக எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இனிமேலும் அக்கறை செலுத்துவது அவசியம். இதற்குப் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதற்குத் தேசியப் பேரவை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இது இவ்விதமிருக்க, பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது. கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் போது பாராளுமன்றத்தின் கடமைப் பொறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த போதும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இவற்றை இடைநிறுத்தியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் 17துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதாவது, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து இந்தக் குழுக்கள் ஆராயும். இந்தக் குழுக்களின் தலைவர்களாக எந்தவொரு பதவியையும் கொண்டிராத சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்படுவார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.

உதாரணமாகக் கூறுவதாயின் கல்வி அமைச்சு ஏதாவது ஒரு விடயம் குறித்து முடிவொன்றை எடுப்பதாயின் அது பற்றி முதலில் கல்விசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய வேண்டும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுனர்கள் உள்ளிட்ட தரப்பினரை அழைத்து ஆராய்ந்து அறிக்கையொன்றை அக்குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அப்போதிருந்த பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தது. அதில் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்பைப் பெற்றிருந்தன. எனவே, இதுபோன்ற குழுக்கள் பாராளுமன்றத்தை மேலும் பலுப்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பி.ஹர்ஷன்

Comments