தேசிய சபை' 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு | தினகரன் வாரமஞ்சரி

தேசிய சபை' 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய சபை” என்ற பெயரிலான பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.   அன்றைய தினமே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடத்திய பின்னர் நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்தத் தேசிய சபை என்றழைக்கப்படும் பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவிருப்பதுடன், இதன் உறுப்பினர்களான பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) மேற்படாதோர் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.  

இந்த தேசிய சபை,, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும்,பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டுக்கு வருவதற்கும், 

அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த தேசிய சபையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.  

தேசிய சபையினூடாக துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துங்களைக் கொண்டிருக்கும். 

Comments