ரியல் எஸ்டேட் வணிகத்துறையில் பெரும் சரிவை சந்தித்துள்ள சீனா! | தினகரன் வாரமஞ்சரி

ரியல் எஸ்டேட் வணிகத்துறையில் பெரும் சரிவை சந்தித்துள்ள சீனா!

சீனா 2022ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் சீனாவின் 'ரியல் எஸ்டேட்' துறை மிகப்பெரிய சிக்கலில் உள்ளது மட்டுமல்லாமல் 50இற்கும் அதிகமான சீன நகரங்களில் 100இற்கும் அதிகமாக ரியல் எஸ்டேட் திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் வீட்டுக் கடனுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்த முடியாது என அறிவித்துள்ளனர். இதனால் சீனா முழுவதும் இருக்கும் வங்கிகள் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

சீனா-வின் உற்பத்தி மிகப்பெரிய அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. சீனாவின் மார்ச் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டில் இருந்து 1.4சதவீதம் சரிந்து ஜூன் காலாண்டில் 2.6சதவீதமாக இருந்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் காலாண்டில் அதிகப்படியான காலம் உலகின் பரபரப்பான துறைமுகத் தளமான ஷாங்காய் மற்றும் பிற உற்பத்தி நிலையங்கள் முடங்கினது. இதன் வாயிலாகவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்டன.

சீனாவின் பொருளாதாரம் இவ்வருடத்தின் முதல் பாதியில் வெறும் 2.5சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 30வருடத்தில் இல்லாத மோசமான நிலையை எதிர்கொண்டது.இக்காலகட்டத்தில் சீன நுகர்வோர் சந்தை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை

எதிர்கொண்டது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் மேலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் முக்கிய வணிகமான ரியல் எஸ்டேட் வணிகமானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவைத் தொடர்ந்து சீனாவில் கடும் மின்வெட்டு, ரியல் எஸ்டேட் துறை சரிவு  என பல காரணிகளுக்கு மத்தியில், உற்பத்தியும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில்  தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சீனாவின் நுகர்வு பெரும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவினைக் கண்ட நிலையில், இரண்டாம் பாதியிலாவது பொருளாதாரம் மேம்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மார்கன் ஸ்டான்லி, ப்ளூம்பெர்க், பார்க்லேஸ் பி.எல்.சி உள்ளிட்ட சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், சீனா மெதுவான வளர்ச்சியினையே கண்டு வருகின்றது. ஆக அதன் வளர்ச்சி வீதம் குறையலாம் எனக் கணித்துள்ளன.

பார்க்லேஸ் கணிப்பின்படி நடப்பு ஆண்டில் 2.6%ஆக வளர்ச்சி காணலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 3.1%ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தொழிற்துறை உற்பத்தி, சில்லறை விற்பனை, முதலீடு என பலவும் செப்டம்பரில் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அதோடு வீட்டுச் சந்தையும் சரிவிலேயே காணப்படுகிறது. நுகர்வோர் செலவினங்களும் குறைந்துள்ளன. இந்தநெருக்கடியான காலகட்டத்திலும், சீன மத்திய வங்கி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பதற்காக ஷங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கத்தை நீண்ட காலம் அமுல்படுத்தியிருந்தனர். நீண்டதொரு பொது முடக்கத்துக்கு பின்னர் கடந்த மே மாதம்தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது, தொழில்நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நிலையான மீட்பு நடந்து வருவதாக சீனா கூறியது.ஆனால் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.6சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

சீனாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அங்கு எதிர்காலத்தில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சீனாவின் உற்பத்திப் பொருட்களுக்கு உலக சந்தையில் மதிப்பு கிடையாது. சீன உற்பத்திகள்

தரமற்றவை என்பதே ஏனைய நாடுகளின் கருத்தாகும். இந்நிலையில் உற்பத்தித் துறையை  அடிப்படையாகக் கொண்ட சீனாவின் உற்பத்தி மாதிரியை கண்மூடித்தனமாக இந்தியா பின்பற்றக்  கூடாது என்ற அபிப்பிராயம் இந்திய மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக சேவைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு அனைத்து வளங்களையும் இந்தியா பயன்படுத்துவதை விட, சேவைத் துறையில் கவனம் செலுத்துவது விவேகமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பாதையைப் பின்பற்றுவதில் பிரச்சினை என்னவெனில், சீனா ஏற்கனவே மேற்கத்திய  நாடுகளின் உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவை உருவாக்கியுள்ளது. இந்தியா அதே பாதையில்  செல்ல முயன்றால் அதுவும் இன்னும் பின்னடைவைத்தான் கொடுக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இது சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட என்கிறார்கள் இந்திய பொருளாதார நிபுணர்கள்.

இவ்வாறான நிலையில் சீனாவின் 'பெல்ட் ரோட்' திட்டத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்திய அரசு முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'முத்தரப்பு வளர்ச்சிக் கழகம் (TDC)' என்ற புதிய நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்.சாரங்கன்

Comments