பொருளாதார பின்னடைவின்போது மீட்சிக்கான வழி என்ன? | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார பின்னடைவின்போது மீட்சிக்கான வழி என்ன?

வர்த்தக சகடோட்டம் (business cycle) எனப்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாடுகளின் பொருளாதார செயற்பாடுகளில் மோசமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு காலப்பகுதியில் பொருளாதார விரிவாக்கங்களும் இன்னொரு காலப்பகுதியில் பொருளாதாரப் பின்னடைவுகளும் மாறி மாறி இடம் பெறுவது வர்த்தக சகடோட்டத்தின் முக்கிய பண்பாகும். சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் மேற்குலக வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரங்களில் இத்தகைய எற்ற இறக்கங்களை மிகத் தெளிவாக அவதானிக்க முடியும். இலங்கை போன்ற தொடர்ந்தும் மந்த நிலையில் இயங்கும் பொருளாதாரங்களில் இவற்றை அவதானிப்பது சற்று கடினமானதாக இருக்கும். வர்த்தக சகடோட்டங்கள் தெளிவான கால இடைவெளிகளில் மாறி மாறி ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை ஏற்படுவதற்கான காரணங்கள் உள்நாட்டிலும் தோன்றலாம் வெளிநாடுகளில் ஏற்படும் பெற்றோலியப்பொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் இவை உருவாகலாம். வர்த்தக சகடோட்டத்தின் விரிவாக்க காலத்தில் நாடுகளின் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். முதலீடுகள் அதிகரிக்கும். வெளியீடு அதிகரிக்கும். தொழில் துறை இலாபங்கள் உயரும். தொழில் வாய்ப்புகள் பெருகும். மக்களின் வருமானங்கள் விரிவாக்கம் காணும். வாழ்க்கத்தரம் உயரும். வறுமை தணியும்.

வாழ்க்கையில் மக்களின் திருப்தியடையும் நிலை உயரும். எனவே இதை ஒரு பூரிப்பு நிலை எனவும் கருதலாம். இவ்வாறான ஒரு நிலை தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற எதிர்பார்க்கையில் பொருளாதார முகவர்கள் தொடர்ந்தும் இயங்குவதால் பொருளாதாரத்தின் முழு இயலளவும் பயன்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக முதலீடுகளின் இலாப வீதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும்.

குறித்த காலத்தின் பொருளாதாரச் செழிப்பு நிலை முற்றுப் பெற்றதை இதன் மூலம் அறியும் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைக் குறைப்பதனால் பொருளாதாரச் செயற்பாடுகள் குறைவடைந்து பொருளாதாரம் பின்னடைவை நோக்கி நகரும். வெளியீடுகள் மந்தமடைந்து மக்களின் தொழில்வாய்ப்புகள் குறைவதால் வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டு மக்களின் கொள்வனவுச் சக்தி குறைவடையும். பொருள்கள் சேவைகள் மீதான கேள்வி குறைவடைவதனால் முதலீடுகளும் உற்பத்திகளும் மேலும் வீழ்ச்சியடையும்.

இது பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பொருளாதாரச் செயற்பாடுகள் மிகக்குறைந்த ஒரு நிலையினை எட்டிய பின்னர் மீண்டும் மிக மெதுவாக அவை பத்தூக்கம் பெற ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து அடுத்த செழிப்புக் காலத்தின் விரிவாக்கம் ஏற்படும்.  

பொருளாதாரச் செழிப்பின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடும் பொருளாதார முகவர்கள் அதனைத் தொடர்ந்துவரும் பின்டைவைப்பற்றிச் சிந்திக்காமல் செயற்படுவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரப் பின்னடைவின் போது அரசதுறையின் அபரிமிதமான தலையீட்டை வேண்டி நிற்கும் தனியார் துறையினர் செழிப்பின் போது அரச துறையின் தலையீட்டை வரவேற்பதில்லை.

ஆனால் வர்த்தக சகடோட்டத்தின் போது பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைத்து பொருளாதாரத்தின் நிலைபேற்றினைப் பேணும் பொருட்டு அரசாங்கம் பொருளாதாரத்தில் தலையீடு.

செய்யும். குறிப்பாக பொருளாதாரம் பின்னடையும் போது அல்லது மந்தத்தைச் சந்திக்கும் போது அதிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதையில் மீண்டும் நிறுத்தும் பொருட்டு அரசாங்கம் விரிவாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்தும். இதற்காக அரசாங்கம் பிரதானமாக தனது அரசிறைக்கொள்கையைப் பயன்படுத்தும்.

வரி அறவிடல் செலவீடுகளை மேற்கொள்ளல் என்பன இறைக் கொள்கையின் இரு பிரதான கருவிகளாகும்.

வரிகளைக் குறைத்து அரசாங்கத்தின் செலவீடுகளை அதிகரிப்பது விரிவாக்க இறைக்கொள்கை எனப்படும். அதன் போது அரசாங்கத்தின் வரிவருவாய்களை விட செலவுகள் உயர்வாக இருக்கும்.

குறைநிலை வரவு செலவுத்திட்டம் எனக்குறிப்பிடப்படுவதும் இதனைத்தான். பொருளாதாரம் பின்னடைவில் அல்லது மந்தத்தில் உள்ளபோது அதிலிருந்து மீட்சியடைய அரசாங்கம் அரசாங்க செலவீடுகளை அதிகரிப்பதுடன் வரிகளைக் குறைக்கும்.

அதேவேளை அரச துறையில் அதிகளவு ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதன் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். அரசாங்கம் செலவு செய்யும் போது அவை மக்களுக்கு வருமானமாக அமைவதனால் மக்களின் கொள்வனவு சக்தி அதிகரிப்பதனால் பொருள்கள் சேவைகளுக்கு கேள்வி அதிகரிக்கும். இவ்வாறு கேள்வி அதிகரிப்பதனால் தனியார் முதலீட்டாளர்களின் இலாபம் உயரும் இது தனியார் முதலீடுகளை அதிகரிக்கும். முதலீட்டு அதிகரிப்பு தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதுடன் உற்பத்தியையும் மக்களின் வருமானங்களையும் அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரப்பின்னடைவும் மந்தமும் நீங்கி பொருளாதாரம் விரிவாக்கத்ததை நோக்கி நகரும்.

இவ்வாறு அரசாங்கம் குறைநிலை வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பற்றாக்குறையினை நிதிப்படுத்த வேண்டும். இதற்காகக் கடன் பெறவேண்டும்.

அதனால் ஒரு புறம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். மறுபுறம் அரசாங்கம் வங்கிகளிடமிருந்து கடன் பெறும் போது நாட்டின் பணநிரம்பல் அதிகரிக்கும். மத்தியவங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் பற்றாக்குறையை நிதிப்படுத்தினாலும் பணவீக்கம் அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கும் போது அதனை ஈடு செய்யும் வகையில் நாட்டின் வட்டிவீதங்களை அதிகரிக்க நேரிடும். வட்டிவீத அதிகரிப்பு தனியார் முதலீடுகளைக் குறைத்து விடுவதால் அரசாங்கம் எதிர்பார்க்கும் பொருளாதார விரிவாக்கத்தை அடைய முடியாது.  

அதேவேளை சுருங்கிய பொருளாதாரத்தை மீட்க ஓரிரு வருடங்கள் விரிவாக்க இறைக்கொள்கையைப் பயன்படுத்தவதில் தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாகவே ஒருநாடு பற்றாக்குறை வரவு செலவுதிட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்துச் சென்று கடன் பொறியில் தள்ளி விடும்.

அதிலிருந்து மீட்சியடைவது இலகுவான காரியமல்ல. அது மட்டுமன்றி இலங்கையில் போன்று பிரபல அரசியலில் (popular politics) அலப்பறை காட்டும் நாடுகளின் அரசாங்கங்கள் தமது அரசியல் தேவைகளுக்காக கனவுத்திட்டங்களை உருவாக்கி அவற்றுக்காக கடன் வாங்கி செலவழிக்க பற்றாக்குறைப்பாதீட்டை நடைமுறைப்படுத்துவதுண்டு.

பாதீட்டுத் தேவைகளுக்காக பெறப்படும் கடன்களில் ஒருபகுதியை கபளீகரம் செய்து தமது சொந்தத்தேவைகளை நிறைவேற்றவும் வழிகள் இருப்பதனால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.  

பற்றறியில் மின்வலு இல்லையேல் மோட்டார் சைக்கிளை செல்ப் ஸ்டார்ட் செய்ய முடியாது.

அதன் கிக்கை உதைத்து ஸ்டார்ட் செய்வது போன்றதே பொருளாதார மந்தத்தின் போது பற்றாக்குறை வரவு - செலவு திட்டத்தைப் பயன்படுத்துவது. ஆனால் அதனையே தொடர்ந்தும் பயன்படுத்துவது ஏற்கெனவே ஸ்டார்ட்டில் உள்ள மோட்டார் சைக்கிளின் கிக்கை தொடர்தும் உதைத்துக் கொண்டிருப்பதைப் போன்றது.

இப்போது இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருப்பது நின்று போன மோட்டார் சைக்கிளின் கிக்கை உதைத்து ஸ்டார்ட் செய்யாமல் அதைக் கழற்றிவிட்டு வேறெங்கோ உதைத்துக் கொண்டிருப்பதைப் போன்றது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அதன் விளைவுகள் புரியும்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments