அடுத்த தமிழாராய்ச்சி மாநாடு எங்கே நடைபெறும்? | தினகரன் வாரமஞ்சரி

அடுத்த தமிழாராய்ச்சி மாநாடு எங்கே நடைபெறும்?

சார்ஜா என்கிறது ஒரு தரப்பு :
சிங்கப்பூர் என்கிறது மறுதரப்பு...
ஏட்டிக்கு போட்டி : தமிரறிஞர்களோ குழப்பத்தில்!

பதினொன்றாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் என்பது முதலில் வந்த  தகவல். பின்னர் மற்றொரு குழுவினர் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  சிங்கப்பூரில் நடைபெறும் என்ற அறிவிப்பை  விடுத்தனர். இரண்டு அறிவிப்புகள் ஒரே மாநாடு தொடர்பாக வெளியானதும் எந்த மாநாடு உண்மையான மாநாடு என்ற  குழப்பம் தமிழறிஞர்கள் மத்தியில் எழுந்தது. இக்குழப்பத்திற்கு மத்தியில் மற்றொரு இலங்கை அமைப்பு திடீரென தோன்றி,  இம்மாநாடு பற்றி விமர்சனங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

1964ஆம் ஆண்டு ஜனவரியின் ஆரம்பத்தில் புதுடில்லியில் நடந்த 26-ஆவது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடு  கொண்டவர்கள் மற்றும்  மாநாட்டில் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும்  பேராசிரியர் வ. ஐ.  சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச்  ஜனவரி 7ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே  புதுடில்லியில் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தனர்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து  தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்களால் நடத்தப்படும் உலக மாநாடு ஆகும். தவத்திரு  தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு, டில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், இரண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தனிநாயக அடிகளாரால் நடத்தப்பட்டது. 1961- – 70காலப்பகுதியில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வியாய்வுகள் துறையின் தலைவராக விளங்கினார் அடிகள். அவர் ஏற்கனவே தனது 'தமிழ்  கல்ச்சர்' எனும் காலாண்டு இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு  ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு  பிரம்மாண்டமான  முறையிலே முதல் மாநாட்டை கோலாலம்பூரில் 1966ஏப்ரல் 16-23திகதிகளில் எட்டு நாட்களாக நடத்தினார்.  இந்த மாநாட்டில்  அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

1967இல் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சி. என். அண்ணாதுரை  தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டில்  தி.மு.க அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக  இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968ஆம் ஆண்டு ஜனவரி 3-–10-ஆம்  நாட்களில் (எட்டு நாட்கள்) சென்னையிலே நடந்தது.

பேராசிரியர்  ஜீன் பிலியோசா பாரிஸ் நகரில் மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970-இல் நடத்தினார்.  முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் இடையே பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல்  நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970ஜனவரி 15-–18 (நான்கு நாட்கள்) காலப்பகுதியில்  நடைபெற்றது. இம்மூன்று மாநாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதாக திட்டமிட்டபடி நடைபெற்றன.

1972ல் நான்காவது மாநாடு இலங்கையில் நடைபெற இருந்த போதும் அது 1974ம் ஆண்டிலேயே நடைபெற்றது. இதற்கு  காரணம்1970ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு      எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து எழுந்திருந்தது. அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச்  சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு  சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும்  மாநாட்டை யாழ்ப்பாணத்தில்  நடத்துவதற்குப் பேராசிரியர்  சு.வித்தியானந்தன்  தலைமையிலான குழு தீர்மானித்து அதன்படி  1974சனவரி 3-9காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும்  நிறைவேறிய மறுநாள், ஜனவரி 10-ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில்  காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11பேர் கொல்லப்பட்ட துரதிஷ்டமான சம்பவம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற 4மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு,  5-ஆவது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற  நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச்  செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது.

ஐந்தாவது மாநாடு 8ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ஆம் ஆண்டு ஜனவரி 4-–10இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் 5  ஆண்டுகளுக்குப் பிறகு கோலாலம்பூரில் 6-ஆவது மாநாடு 1987நவம்பர் 15-19இலும், ஆபிரிக்காவில் மொரீசியசிஸ் 7-ஆவது  மாநாடு 1989டிசம்பர் 1-8-இல் நடைபெற்றது. அதன் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு  தஞ்சாவூரில் 1995ஜனவரி 1-5-இல் நடைபெற்றது.

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010இல் தமிழ்  நாட்டின் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர்  மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009  செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்[2]. எனினும்  உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம்  தமிழக  அரசின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது.

ஆனால் தனது ஆட்சிக் காலத்தல் தமிழுக்கு ஒரு பிரமாண்டமான விழா எடுத்தேயாக வேண்டும் என்ற இலட்சியத்தைக்  கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி தான் எதிர்நோக்கியிருக்கும் சிக்கலைத் தீர்க்கும் ஒரு வழியாக, அப்போது தமிழுக்கு  மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியிருந்தால் அம் நாட்டை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று  அறிவிக்கப்பட்டது. மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010ஜூலையில் கோவையில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் பலர்  கலந்து கொண்டதோடு நானும் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து கலந்து கொண்டேன்.

அதிகாரபூர்வமான 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015ஜனவரி 29முதல் பிப்ரவரி 1வரை மலேசியத் தலைநகரான  கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத்  தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை  ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம்  சேர்த்தல்" என்பதாகும். இம் மாநாட்டிலும் ஓர் ஆய்வாளனாக எனது ஆய்வுக் கட்டுரை தெரிவு செய்யப்பட்டிருந்தது.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019ஜீலை 3முதல் 7வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில்   நடத்தப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய  அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.

இதன் பின் 11வது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழ் நாட்டில் நடத்தவுள்ளதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்  அறிவித்தார். இதற்கான ஒப்புதலை உலக தமிழாராச்சி மன்ற தலைவர் பேராசிரியர் டான்ஸ்ரீ. த. மாரிமுத்துவிடம்   கோரியிருந்தார். இதேவேளை பாரதிய ஜனதா கட்சி தமிழ் நாட்டில் உறுதியாக காலூன்றுவதற்கு பிரம்மப் பிரயத்தனத்தில்  இருப்பதால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு 11வது உலகத் தமிழாராச்சி மாநாட்டினை  நடத்தவுள்ளதாகவும் பிரதமர் மோடி இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் பா.ஜ.க தரப்பில் மற்றொரு அறிவிப்பு  வெளியாகியது. இந்திய அரசியலமைப்பின் படி வெளிநாட்டு கொள்கைகளுக்கு பொறுப்பு மத்திய அரசு. எனவே, சர்வதேச  மாநாடு ஒன்றினை நடாத்த மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்.

அவ்வாறானால் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் சர்வதேச மா நாடுகள் எவ்வாறு  தமிழகத்தில் நடத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? (தொடரும்)

அலசலும் ஆய்வும் : 
ஆர். மகேஸ்வரன்
பேராதனை பல்கலை நூலகர்

Comments