சவால்களின் மத்தியிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதென்ற உறுதிப்பாட்டில் இலங்கை! | தினகரன் வாரமஞ்சரி

சவால்களின் மத்தியிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதென்ற உறுதிப்பாட்டில் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் தற்பொழுது நடைபெற்று  வருகிறது. இதில் இலங்கை விவகாரம் குறித்த  கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

  46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முன்னேற்றங்கள் மற்றும் அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இம்முறை முன்வைக்கப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பச்லெட்டுக்குப் பதிலாக பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப் அறிக்கையை சமர்ப்பித்தார். நாடு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நாடு தழுவிய ரீதியில் பல மாதங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றமை குறித்து அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

 மனித உரிமை மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்களைப் புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தண்டனையிலிருந்து தப்பித்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்குத் தேவையான ஆழமான நிறுவன ரீதியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

யுத்தம் முடிவடைந்து 13வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக காணமல் போனவர்களின் உறவுகள் அன்புக்குரியவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்வதிலும், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலும் இலங்கை தொடர்ச்சியாகத் தவறி வருவதாக அவர் விமர்சித்திருந்தார்.

சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அரசியல் தடைகளை உருவாக்கி, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளில் அமர்த்தியிருந்தமையைச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு மாற்று உத்திகளைப் பின்பற்றுமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருந்தபோதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்படும் சில விடயங்கள் நாட்டின் இறைமையை மீறும் வகையில் இருப்பதால், அவற்றை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் சார்பில் இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுயாதீன நிறுவனங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தொடர்ச்சியான ஆதரவும் வளங்களும் வழங்கப்படுவதாக வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இலங்கையின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரியின் வரையறைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.

மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை நினைவுகூர்ந்த அமைச்சர், அரசாங்கத்தின்  உடனடி அக்கறை பொருளாதார மீட்சியாக இருக்கும் அதேவேளை, இலங்கை மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும் சமமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக மீண்டும் வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் வெளிநாட்டிலுள்ள இலங்கை சமூகத்துடனான உரையாடலை விரிவுபடுத்துதல் மற்றும் அவர்களை அணுகுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணிசமான திருத்தங்கள், சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் விரிவான தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் அங்கு அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 'கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக உள்ளது. பல உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையும் 46/1தீர்மானத்தை எதிர்த்துள்ளதுடன், அதன் சட்டபூர்வமான தன்மை மற்றும் நோக்கங்களுடன் அடிப்படையில் உடன்படவில்லை.

தீர்மானத்தின் உள்ளடக்கம், குறிப்பாக அதன் செயற்பாட்டுப் பந்தி 06, இலங்கை மக்களின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளை மீறுவதாகக் குறிப்பிட்டு நாங்கள் அதனை தொடர்ச்சியாக எடுத்துரைத்துள்ளோம்.

மீண்டுமொருமுறை, தீர்மானம் தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் மற்றும் அது தொடர்பாக உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது 'பொருளாதாரக் குற்றங்கள்' குறித்து விரிவாகக் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. இந்த வார்த்தையின் தெளிவின்மைக்கு அப்பால், அத்தகைய குறிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மீறுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட விதத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர சர்வதேசத்தின் எந்தவொரு பொறிமுறைக்கும் இடமளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்பதையும் அமைச்சர் திட்டவட்டமாக மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்தும் பல நாடுகள் தமது கரிசனையை வெளியிட்டிருந்தன. இலங்கையின் நட்பு நாடான இந்தியா 13ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியிருந்ததுடன், இலங்கையின் முன்னேற்றங்கள் பற்றியும் சுட்டிக்காட்டத் தவறியிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு பிரேரணையொன்றும் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பான வரைபில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்து அதனை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பிரேரணையைக் கொண்டுவரவுள்ள பிரதான நாடுகளின் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட ஊழலை விசாரித்து, வழக்குத் தொடுப்பதன் மூலம் இவ்வாறான நிலைமைகள் மீண்டும் நடைபெறாது தவிர்ப்பதற்கு சுதந்திரமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முயற்சிகளுக்கு உதவவும் ஆதரவளிக்கவும் தயாராக இருப்பதாகவும் அந்நாடுகள் கூறியுள்ளன.

இந்தக் குழுவில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், கனடா உட்பட ஏனைய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம், அதிகரித்த உணவுப் பாதுகாப்பின்மை, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துகள், வீட்டு வருமான வீழ்ச்சி, தினசரி ஊதியம் பெறுவோர் உட்பட மிகவும் பின்தங்கிய மற்றும் பின்தங்கிய தனிநபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியுள்ளது.    முன்னெப்போதும் இல்லாதளவு மோசமான நிலையை நாடு எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை மேலும் அழுத்தத்துக்கு உட்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கக் கூடாது. கடந்த காலங்களிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருந்தபோதும் தற்பொழுது புதிய ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் பொருளாதார மீட்சியுடன் தொடர்புடைய மறுசீரமைப்புக்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்படும் முன்னெடுப்புக்களுக்குப் போதியளவு அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அது மாத்திரமன்றி ஒரு நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி அதனை மேலும் மேலும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தும் வகையில் சர்வதேச சமூகம் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்காது.

அமைச்சர் அலி சப்ரி கூறியதைப் போன்று, இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருக்கும் அதேநேரம், தொடர்ந்தும் பல முயற்சிகளை மேற்கொண்டே வருகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் சிறந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதே நல்லிணக்கத்தை விரும்புகின்ற நாட்டு மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

சம்யுக்தன்

Comments