கந்தப்பளை ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தோட்டத்தில் மாறுபட்ட வடிவங்களில் உருவெடுத்துள்ள அட்டூழியங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கந்தப்பளை ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தோட்டத்தில் மாறுபட்ட வடிவங்களில் உருவெடுத்துள்ள அட்டூழியங்கள்

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நேரும் அட்டூழியங்கள் இன்று மாறுப்பட்ட வடிவங்களில்  உருவெடுத்துள்ளதாக தோன்றுகிறது. தோட்ட தொழிலாளர்களை பலவந்தமான சுய விலகலை ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தோட்ட நிர்வாகம் ஆரவாரமில்லாமல் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தப்பளை ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தோட்டத்தில் பணியாற்றும் (45) வயதுக்கு குறைந்த தொழிலாளர்களை தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சேவைக்கால பணத்தை பெற்று செல்லுமாறு தோட்ட நிர்வாகம் பலவந்தப்படுத்துவதாக வலப்பனை பிரதேச சபையின் ஹைபொரஸ்ட் வட்டார இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உறுப்பினர் பழனி சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,.

ஹைபொரஸ்ட்  இலக்கம் 03பிரிவு தோட்டம் 140ஹெக்டையரில் தரமான தேயிலை பயிரிடப்பட்ட  தோட்டமாகும்.

காலனித்துவ ஆட்சியில் வெள்ளையர்களால் ஹைபொரஸ்ட் தோட்டத்தில் சிறந்த விளைச்சலை தரக்கூடிய உயர்தர தேயிலை பயிரிடப்பட்டு சிறப்பாக விளங்கிய தோட்டம் என்ற பெயர் இன்றும் மாறாமல் காணப்படுகிறது.

காலப்போக்கில் அரசாங்கம் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்று பராமரித்த போதும் கூட இத்தோட்டத்தில் தேயிலை விளைச்சல் குறைந்ததாக சரித்திரமில்லை.

அன்று இத்தோட்டத்தில் 500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் இத்தோட்டத்தை தனியார் கம்பனிகள் பொறுப்பேற்று சிறிது காலம் சிறப்பாக கொண்டு நடத்திய போதும் இன்று இத் தோட்டத்தின் நிலை  முற்றாக மாற்றம் பெற்றுள்ளது.

இருப்பினும் 500க்கு அதிகமாக தொழிலாளர்கள் பணியாற்றிய இந்த தோட்டத்தில் நிர்வாக கெடுப்பிடி,வருமான குறைவு காரணமாக தொழிலில் இருந்து விலகிய  நிலையில் இப்போது இத் தோட்டத்தை முகாமைத்துவம் செய்து வரும் தோட்ட நிர்வாகம் இத் தோட்டத்தில் காணப்பட்ட 140ஹக்டேயர் தேயிலை நிலத்தை 88தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது. இவ்வாறு பிரித்து வழங்கிய தேயிலை மரங்களை தொழிலாளர்கள் பராமரித்து அதில் பறிக்கப்படும் தேயிலையை  நிர்வாகம் பெற்று வந்தது.

அதேநேரத்தில் தேயிலை நிலங்கள் பிரிக்கப்பட்டதால் பராமரிப்பு செலவை ஈடுசெய்ய முடியாத தொழிலாளர்கள் பலர் தேயிலை நிலங்களை கைவிட்டு நாளாந்த வருமானத்திற்கென மாற்று தொழிலை தேடி சென்றதால் இப்போது 52தொழிலாளர்கள் மாத்திரமே தேயிலை தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் ஏராளமான தேயிலை நிலங்கள் காடாகியுள்ளன. ஆனால் தற்போது தேயிலை தொழிலை நம்பி தமக்கு வழங்கப்பட்ட தேயிலை நிலத்தை பராமரித்து கொழுந்து பறித்து வரும் 52தொழிலாளர்களில் 42வயது தொடக்கம் 45வயதுக்குட்பட்ட 25தொழிலாளர்களை தொழிலில் இருந்து விலகி தமக்கான சேவைக்கால பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தோட்ட நிர்வாகம் பலவந்தப்படுத்துகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  தொழிலாளர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் கெடுபிடிகளால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளுக்கு தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

அதேநேரத்தில் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம் வயது குறைந்த தொழிலாளர்களை பலவந்தமாக பணி விலக பணித்து வரும் செயற்பாட்டை எதிர்த்து சகல தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டு தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

ராகலை ரமேஸ்

Comments