மக்களின் அலட்சியத்தால் காவுகொள்ளப்பட்ட பிஞ்சு | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் அலட்சியத்தால் காவுகொள்ளப்பட்ட பிஞ்சு

கடந்த சிலநாட்களாகப் பெய்த கடும் மழையையும் விட ஒட்டு மொத்த குருநாகல் பிரதேசத்தையுமே அழ வைத்த துன்பகரமான செய்தி ஒன்று கடந்த 05ம் திகதி திங்கட்கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்திற்குள் பரவியிருந்தது.  

குருநாகல் மலியதேவ மாதிரி வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 14வயதுடைய சஜித கிஹான் குணரத்ன என்ற மாணவன் கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பாடசாலை விட்டு தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நீர் நிரம்பியிருந்த வடிகானினுள் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்தார்.  

“இன்று என்னால் பாடசாலைக்குச் செல்ல முடியாது.... நான் பாட்டியுடன் விகாரைக்குச் செல்லப் போகிறேன்....” சஜித அன்றைய தினம் காலை வீட்டிலிருந்தவர்களுக்கு இவ்வாறு கூறினான், என்றுமில்லாதவாறு கடும் மழை அன்று காலை முதல் பெய்து கொண்டிருந்ததால் பாடசாலைக்குச் செல்வதற்கு தயக்கமாக இருந்த போதுதான் அவ்வாறு கூறினான்.

கடந்த காலங்களில் சரியான முறையில் பாடசாலை செல்ல முடியாமற்  போனமையினாலும், இன்றும் இரண்டு நாட்களில் பாடசாலை இரண்டாம் தவணை முடிவடைந்து விடுமுறை வழங்கப்பட இருந்ததாலும் சஜித அன்றைய தினம் சஜித பாடசாலை சென்றது சஜிதவின் தாய் சஜிதவுக்கு அவற்றை  விளக்கி கூறியதன் பின்னராகும். சஜித அன்று  பாடசாலை சென்றதும் கடும் மழைக்கு மத்தியிலாகும்.  

குருநாகல் மலியதேவ மாதிரி வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் கற்கும் சஜித, 14வயது மாணவனாக இருந்த போதிலும் அவர் இன்னமும் பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்வது தனது தாயுடனோ அல்லது பாட்டியுடனோதான். வழமைபோலவே அன்றைய தினம் (05ம் திகதி) சஜிதவின் பாட்டி சஜிதவை பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்காக வெளியேறி அரைவாசித் தூரத்திற்குச் சென்றிருந்த போதிலும் பாட்டியால் தொடர்ந்தும் அவ்வீதியில்  செல்ல முடியாது போனது. காரணம் ஆறு அடி கூட அகலம் இல்லாத அவ்வீதியை வெள்ள நீர் முற்றாக மூடியிருந்தது.  

தனது பாட்டி வரும் வரைக்கும் காத்திருக்காத சஜித, பாடசாலையிலிருந்து வெளியேறி அங்கிருந்து சுமார் 500மீற்றர் தூரத்தைக் கடந்து தனது வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமானான். ஆனால் அவனது பயணம்  முற்றுப்பெறவில்லை. சஜித அவ்வாறு வீட்டை நோக்கி நடந்து சென்றது வீதியில் வலது பக்கத்திலாகும். வீட்டுக்கு  சில யார்கள் தூரத்தில் அமைந்துள்ள முச்சந்தியில்  மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை வாகனத்திற்கு சஜித  விலகி இடம் கொடுத்தது  மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வீதியின் ஒரு பக்கத்திற்குச் சென்றேயாகும்.  வீதிக்கு அருகில் நீர்  அதிக வேகத்தில் செல்லும் வடிகான் இருப்பதை சஜித அறிந்திருக்கவில்லை. அந்த வீதியும் மிகவும் குறுகலானது 

திடீரென கால் வழுக்கி வடிகானினுள் சஜித விழும் காட்சியை ஒருவருமே காணவில்லையா என்பது இன்னமும் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே உள்ளது. மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்தும் “சிசு செரிய” பாடசாலை சேவை வாகனச் சாரதியாவது சஜித வடிகானினுள் வீழ்வதைக் கண்டிருந்தால் சஜிதவுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது. வடிகானினுள் வீழ்ந்த சஜித  பெரிய கானினுள்  அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். உள் வீதி ஒன்றிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

சஜித நீரில் அடித்துச் செல்லப்பட்டாலும், அவரது பாடசாலை புத்தகப் பை நீரில் மிதப்பதைக் கண்டவர்கள் சஜித வடிகானினுள் வீழ்ந்திருக்கலாம் என நினைத்த அச்சமடைந்தனர். இச்சம்பவம் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து பெருமளவான மக்கள் அந்நேரத்தில் பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் அவ்விடத்தில் ஒன்று கூடினர்.  

சஜிதவை அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து வந்த சஜிதவின் பாட்டி, தனது பயணத்தைத் தொடர முடியாதளவுக்கு வடிகான்கள் நீரால் நிரம்பி வீதியையும் நீர் முற்றாக மூடியிருந்தது. இந்நேரத்தில்தான் வடிகானினுள் மாணவர் ஒருவர் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என மக்கள் கூக்குரலிட்ட சத்தத்தைக் கேட்ட சஜிதவின் பாட்டியும் சம்பவ இடத்தை நோக்கி பதட்டத்துடன் அழுது கொண்டே ஓடிச் செல்கிறார். எனினும் சஜித அவ்விடத்தில் இருக்கவில்லை.  

சில வருடங்களுக்கு முன்னர் அகலமானதாக  இருந்த வடிகான் தற்போது சிறியதாக ஆகிப் போயிருந்தாலும் நீர் மிகவும் வேகமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. சஜிதவைத் தேடுவதற்காக வடிகானினுள் இறங்கிய சிலர் நீரில்  நீந்திச் சென்று சஜிதவைத் தேடிக் கொண்டிருந்த போது  இன்னும் சிலர் வீதிக்கு குறுக்காக காணப்படும் சிறிய கானினுள் சஜித சிக்கிக் கொண்டிருக்கலாம் எனக் கூறினர். எனினும் சஜித உண்மையிலேயே அவ்வாறு கானுக்குள்  சிக்கிக் கொண்டிருக்காரா எனத் தேடுவதற்கு அவ்விடத்தில் கூடியவர்களால் முடியாது போனது. காரணம் நீர் அடித்துக் கொண்டு செல்லும் வடிகானின் மறு பக்க வடிகானை மூடி கொங்கிரீட் போடப்பட்டிருந்ததாகும்.  

இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸாரும், அவ்விடத்திற்கு வந்த இராணுவ வீரர்களும் சஜிதைத் தேடுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டனர். பிரதேசவாசிகளுடன் நகர சபை ஊழியர்களும் ஒன்று சேர்ந்து இரண்டு பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி கொங்கிரீட் தட்டினை உடைத்து விட்டு சஜிதவைத் தேடினர். ஆனால் அந்தக் கானுக்குள் தண்ணீர் விநியோகத்திற்காக பொருத்தப்பட்டிருந்த குழாய்க்கு அருகில் சஜித சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டான்.

சஜிதவை மீட்டெடுத்த அங்கு கூடியிருந்தவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மிகத் துரிதமாக சஜிதவை குருநாகல் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.  தீயணைக்கும் இராணுவப் படையின் கெப் வாகனத்தில் சஜிதவைக் கொண்டு சென்றனர்.  அந்நேரம் சஜித வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையிலான பெரும் போராட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்ததை பெரும்பாலும் அனைவரும் அறிந்து கொண்டிருந்தனர்.  

குருநாகல் போதனா வைத்தியசாலை அமைந்திருப்பது சஜித இந்த விபத்திற்கு முகங்கொடுத்த இடத்திலிருந்து சுமார் 700, 800மீற்றர் தொலைவிலாகும். சஜித அங்கு எடுத்துச் செல்லப்பட்ட நேரம் குருநாகல் வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்களும் சஜிதவின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சிகிச்சையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் ஆயத்த நிலையிலேயே இருந்தனர்.  

 சஜிதவின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வைத்தியசாலையின் வைத்தியர்கள் எடுக்காத முயற்சிகள் இல்லை. எனினும் அந்த முயற்சிகள் யாவுமே பயனற்றுப் போயின.  

இதனால்  ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் குருநாகல் உள்ளுராட்சி மன்றத்தினை நோக்கியும், அரச அதிகாரிகளை நோக்கியும் மாத்திரம் விரலை நீட்டவில்லை. இரண்டு அடிகளால் தமது காணிகளை விசாலப்படுத்திக் கொள்வதற்குத்     துடிக்கும் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் சில நபர்களையும் நோக்கியே   அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சட்டவிரோத மதிலினால்   வீதிகள் குறுகி, மழை நீர் வழிந்தோடக்கூடிய வடிகான்கள் மூடப்பட்டு சின்னஞ்சிறு மாணவன் தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தில் வாழும் பலரும் குற்றம்சாட்டினர்.

நகரை அண்மித்த அனைத்து கட்டிட நிர்மாணங்களும் அனர்த்த முகாமைத்துவ கொள்கைகளுக்கு அமைவாகவே அமைக்கப்பட வேண்டும் என்ற  போதிலும், அதற்கு அப்பால் சென்று அரசியல் நெருக்கங்கள், இலஞ்சம், பணக் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிற்கு அடிபணிந்து செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று சஜிதவின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.  

இது தொடர்பில் அனேக சமூக செயற்பாட்டாளர்கள், கற்றவர்கள் என பலரும் சமூக வளைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். இது அவ்வாறான கருத்துக்களில் ஒன்றாகும்,  

“வீதிகளைப் போடுகிறார்கள். வடிகால்களை அமைப்பதில்லை.... வடிகால்களை நிர்மாணிக்கின்றாாகள், covering slab இல்லை. covering slab போட்டால் அவை உறுதியானதாக இல்லை.  

TO க்களை இப்பிரதேசத்திலேயே காண முடியாது. அனர்த்தங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் தொலைபேசி அழைப்புக்கும் பதில் தருவதில்லை. இதேபோன்று மற்றொரு பெரும் துயரம் இடம்பெறுவதற்கு முன்னர் செயலில் இறங்க வேண்டும்...” 

மகனுக்கு ஏற்பட்ட  துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சஜிதவின் தாய் அழுது புரண்டார்.   அழுது புலம்பிய தந்தையைப் பார்த்த அங்கிருந்த அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.  

குமாரி திசாநாயக்கா
தமிழில்:- எம். எஸ். முஸப்பிர் 
(புத்தளம் விசேட நிருபர்) 

Comments