பெரும்பாலான பஞ்சங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே! | தினகரன் வாரமஞ்சரி

பெரும்பாலான பஞ்சங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே!

1964இல் சீனப் பிரதமர் சூ என் லாய் கொழும்புக்கு விஜயம் செய்தபோது அவர் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் அரிசி இறப்பர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். சீனப் பிரதமருக்கருகே மூக்குக் கண்ணாடியுடன் காணப்படுபவர், பிரதமரின்செயலாளர் பிரட்மன் வீரக்கோன். ஸ்ரீமாவுக்கு பின்புறமாக கோட் அணிந்த பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க..

உலகின் பெரும்பாலான பசி, பட்டினி, பஞ்சங்கள் இயற்கையின் சீற்றத்தால் உருவானவை அல்ல என்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு உண்மை. அவை மனிதர்களால் உருவாக்கப்படுபவை என்பதை எழுபதுகளில் உணர்ந்தபோது மனிதர்கள் இவ்வளவு மோசமானவர்களாக இருக்க முடியுமா என்று கேள்வியே பலரிடமும் எழுந்தது. சூடான், எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உணவுக்கு அல்லாடும் தருணங்கள் உருவான போது வரட்சி அதற்கு காரணம் அல்ல; அந்நாடுகளை ஆண்ட ஆட்சியாளர்களே வறட்சியால் ஏற்பட்ட பஞ்ச நிலை வெகு மோசமானதற்குக் காரணம் என்பது தெரியவந்து.

ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான செய்கைகள், திட்டங்கள், தன்னை முதன்மைபடுத்தி ஆட்சி செய்ததால் நாடு இயக்கமற்று போதல், மக்களை முதன்மை படுத்தாத ஆட்சியாளர்கள் என்பன நாடுகளில் பஞ்சம் உக்கிரமடைய காரணமாயின.

உணவு பல நாடுகளில் பிரச்சினையாக இருந்திருக்கிறது. பிரதான காரணம், தொலைநோக்குப் பார்வையற்ற, தம்மை முதன்மைப்படுத்திக் கொண்ட ஆட்சியாளர்களின் எதேச்சதிகார முடிவுகள். ஆபிரிக்க நாடுகள் அடிப்படையில் வளம் மிகுந்தவை. கனிய வளம், எண்ணெய் வளம், தாதுக்களின் வளம் கொண்டவை. அதேசமயம் மழையற்ற வரட்சியான கால நிலை கொண்ட சஹாராவை அண்டிய புருண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, அங்கோலா போன்ற நாடுகள் வரட்சியால் பாதிக்கப்பட்டாலும் பல நாடுகளில் பஞ்சமும் பட்டினியும் ஏற்படுவதற்கு மனிதர்களே காரணம்.

கட்டுப்பாடற்ற சனத்தொகை வளர்ச்சி, யுத்தங்கள், அகதிகளாக இடம் பெயர்தல், இனங்களுக்கு இடையிலான முறுகள் நிலை, ஆட்சிக்கு வருபவர்கள் நிலவள, நீர்வள, சனத்தொகை முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கு பதிலாக தமக்கும் தமது குடும்பங்களுக்கும் செல்வத்தை நாட்டை சுரண்டுவதன் மூலம் சேர்ப்பது, அரசியல் காரணங்களுக்காக செல்வந்த நாடுகள் இத்தகைய பாதிக்கப்பட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது என்பனவற்றை மனிதன் உருவாக்கும் பஞ்சம் பட்டினி நிலைமைகளாகக் குறிப்பிட முடியும். பெரும்பாலும் இத்தகைய நாடுகளில் ஜனநாயகக் கோட்பாடுகள் நிலவுவது கிடையாது. ஜனநாயகம் ஒரு நாட்டில் இல்லை என்றால் மக்களின் கட்டுப்பாட்டில் தலைவர்கள் இல்லை என்பதுதானே அர்த்தம்! குழுக்களின் ஆட்சி, தனிமனிதனின் ஆட்சி என்பன அப்போதுதான் தலை விரித்தாடுகின்றன. ஆபிரிக்க நாடுகள் இயற்கை பொய்த்ததால் பஞ்சம், வறுமையில் வீழ்ந்ததை விட தனி நபர்கள் மற்றும் குழுக்களின் ஆட்சியால் சீரழிந்ததே அதிகம். சிம்பாப்வே ஒரு ஜனநாயக நாடுதான். ரொடீஷியா என்ற நாடே 1979ஏப்ரல் 18ம் திகதி சிம்பாப்வே என்ற பெயருடன் சுதந்திர நாடானது. அப்போது பிரதமரமான ரொபர்ட் முகாபே 2017வரை பதவியில் இருந்தார். அவர் நடத்திய தேர்தல்கள் அனைத்துமே நியாயமாக நடைபெற்றவை அல்ல. ஆனால், உணவுப் பிரச்சினையையும் இனவாதத்தையும் ஊக்குவித்து அதன் மூலம் வெற்றிகளை இலங்கை அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்டனதைப் போலவே, சிம்பாப்வேயில் வாழும் வெள்ளை இனத்தவர்களை உசுப்பேற்றியே தன் பதவியை 38வருடங்களாக நீடித்து வந்தார் முகாபே. அவர் பதவி விலகியபோது அவர் ஒரு பெரும் பில்லியனர். மக்கள் பரம ஏழைகள்.

இலங்கை முறையாக ஆளப்படவில்லை என்பதை இந்நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

1947இல் இந்நாடு சுதந்திரம் அடைந்தபோது இந் நாட்டின் உணவுக்கு பிரச்சினை இருந்தது. அதாவது எமது பிரதான உணவான அரிசிக்கு ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னர் நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறவு அடைந்திருந்ததாகவும் அரிசி உற்பத்தியில் ஆங்கிலேயர் அக்கறை கொள்ளாமல் இறக்குமதி செய்வதில் ஈடுபட்டதால் அரிசி உற்பத்தி குறைவடைந்ததாகவும் தகவல்கள் உள்ளன. இதில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உதாசீனம் செய்யப்பட்ட அரிசி உற்பத்தி அதன் பின்னர், எழுபது ஆண்டுகளின் பின்னரும் தன்னிறைவை எட்ட முடியாமற் போனதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு இந்நாட்டை ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை.

அரிசி இலங்கை அரசியலுக்குள் வந்தது இப்படித்தான். மக்கள் தொகை 1950களில் குறைவாக இருந்த போதிலும் உள்ளூரில் போதிய அரிசி உற்பத்தி செய்யப்படவில்லை. அதே சமயம் மூவேளையும் சோறு சாப்பிட மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலரும் வயிறு நிறைய சோறு சாப்பிட வேண்டியிருந்தது. வயிறாற சோறு சாப்பிடாவிட்டால் தூக்கம் வருவதில்லை என இன்றைக்கும் பலர் சொல்லத்தான் செய்கிறார்கள். எனவே குறைந்த விலைக்கு அரிசியை கிடைக்கச் செய்து மூவேளையும் அரிசிச்சோறு சாப்பிடத்தராத அரசை மக்கள் பதவியில் அமர்த்தத்தயாராக இல்லை என்பதை அன்றைய அரசியல் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்ததால் அவர்கள் அரிசி அரசியலை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தனர். அது இரண்டு கொத்து அரிசியை 25சதத்துக்கு அல்லது இலவசமாக வழங்கவே ஆட்சியாளர்களை அல்லது அரசியல் கட்சிகளைத் தூண்டியது. அதிக விலைக்கு அரிசியை இறக்குமதி செய்து மிகக் குறைந்த விலைக்கு, வாக்கு வங்கிகளை பேணும் நோக்கத்தோடு, ஆட்சியாளர்கள் அரிசியை வழங்கி வந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு அரிசி உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

1965இல் பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்க, நாட்டில் நெல் உற்பத்தியை விஸ்தரிக்க வேண்டும் என்பதில் விசாலமான திட்டங்களை நடைமுறைப்படுத்திய டீ.எஸ்.சேனாநாயக்கவின் மகன். 1953ஹர்த்தாலில் பாதிக்கப்பட்டவர். எனவே விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய அவர், பசுமைப் புரட்சி என்ற பெயரில் விவசாயப்புரட்சிக்கு வித்திட்டார். இளைஞர்களை உள்ளடக்கிய விவசாய படையை உருவாக்கினார். விவசாய உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு டின்மீன் தயாரிப்பு தொழிற்சாலை பேசாலையில் நிறுவப்பட்டது.

1970இல் மாவோ பண்டாரநாயக்க மாபெரும் வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் டட்லியின் விவசாயத் திட்டங்கள் கைவிடப்பட்டன. விவசாயப் படை ஐ.தே.க காரர்களின் படை என்று சொல்லப்பட்டு கலைக்கப்பட்டது. அவர் காலத்தில் காணி சுவீகரிப்பு, பெருந்தோட்ட சுவீகரிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டதை விரிவாக இத் தொடரில் வாசித்திருப்பீர்கள். ஏற்கனவே நீடித்துக் கொண்டிருந்த அரிசி இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி உற்பத்தி தொடர்பில் முறையான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் அவற்றைப்  பாதிக்கக் கூடிய விஷயங்களில் அரசு நாட்டம் செலுத்தியதாலும், எதிர்பாராத ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்க வேண்டியிருந்ததாலும், இலங்கைக்கு உதவக் கூடிய நாடுகளுடன் நல்லறவு கொள்ளத் தவறியதாலும் ஒரு அரிசி, மா, தட்டுப்பாட்டை இந்நாடு சந்திக்க நேர்ந்தது.

எனினும் மாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் மக்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். தரிசு காணிகளில் மரவள்ளி, காய்கறிகள் என்பன விளைவிக்கப்பட்டன. பல சிறு கைத்தொழில் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டன. இவை மிகச் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த ஒத்தாசையாக இருந்தது.

வடக்கில் விவசாயம் செழித்தது. சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற உணர்வு மக்களிடைய ஏற்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் அச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பொருளாதாரத் திறனுடன் இருக்கவில்லை. எனவே பாணும், அரிசியும் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லையே; இறக்குமதி பொருட்களை நுகர்ந்து எவ்வளவு காலமாயிற்று என்ற மக்களின் ஆதங்கத்தை அன்றைய அரசினால் தீர்க்கமுடியவில்லை. அதை ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க நன்கு பயன்படுத்திக் கொண்டது.

ஜே.ஆர். 1977இல் மிக முக்கியமான திருப்புமுனை முடிவுகளை மேற்கொண்டார். நாட்டை திறந்த பொருளாதாரத்துக்கு திறந்து விட்டார்.

வெளிநாட்டு பொருட்களும் முதலீடுகளும் உள்ளே வந்தன. துரித மகாவலித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. புதிய பாராளுமன்றம் உருவானதோடு ஜனாதிபதி முறையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பு சட்டம் உருவானது. எல்லாம் சரிதான் ஆனால்,

முன்னைய அரசு காலத்தில் இலங்கையில் உருவான சுதேச கைத் தொழில்கள் போதிய கவனத்தைப் பெறத் தவறின. இறக்குமதி பொருட்களின் தரம் மற்றும் விலைக்கு முன்னால் சுதேச உற்பத்திகளால் நிற்க முடியவில்லை என்பதால் அவை நசிந்து போயின.

தற்போது மற்றொரு பொருளாதார மற்றும் உணவு நெருக்கடிக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

பயிரிடுங்கள் என்ற கோஷம் வானளாவக் கேட்கிறது. போஷாக்கு குறைபாடு பெருமளவில் ஏற்பட்டு வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.

இவை 1970காலப் பகுதியை மீண்டும் நினைவு படுத்துவதாக உள்ளது. 48ஆண்டுகளின் பின்னரும் இரவில் விழுந்த குழிக்குள் பகலிலும் நாம் விழுந்திருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது.

நாம் மீண்டும் எழுவதற்கான பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டுவரத்தான் போகிறோம்.

ஆனால் அந்தப் பாதை உறுதியான பொருளாதாரத்தை நோக்கி மட்டுமே இந் நாட்டை இட்டுச் செல்ல வேண்டுமே தவிர மற்றொரு படுகுழிக்குள் அல்ல என்பதில் மிக உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.  (அரிசி அரசியல் முற்றுப் பெற்றது)

அருள் சத்தியநாதன்

Comments