எட்டா உயரத்து பேரரசியானாலும் சாமானியன் இதயம் தொட்ட அன்னை | தினகரன் வாரமஞ்சரி

எட்டா உயரத்து பேரரசியானாலும் சாமானியன் இதயம் தொட்ட அன்னை

- முழு உலகையும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவின் மகாராணியாக இருந்தவர் என்பதும் உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் பெரும்பாலோர் இரண்டாம் எலிசபெத் மகாராணியைத் தவிர வேறு எந்த பிரிட்டிஷ் மன்னரையோ அரசியையோ அறிந்திருக்கவில்லை என்பதும் இந்த உலகளாவிய சோகத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம். இதனால்தான் அவரது மரணத்தின் எதிரொலியானது உலகளாவியதாக இருந்தது.

பெரும்பாலும் ஒரு முக்கிய நபரின் மரணத்துக்காக உலகம் ஒரு பெருமூச்சுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடும். ஆனால் வியாழனன்று பிரித்தானியாவின் மகாராணியார் இரண்டாவது எலிசபெத் இறந்தார் எனும் செய்திக்கான எதிர்வினையானது வித்தியாசமாகவும் மிகவும் இதயபூர்வமானதாகவும் இருந்தது. அதில் மன்னராட்சிக்கான எதிர்ப்பினைக் காண இயலவில்லை.

பிரித்தானியாவிற்கு அப்பால் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையிலும் ஏதோவொரு விதத்தில் மகாராணியார் தாக்கத்தைச் செலுத்தியிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அவர் தனது 25வது வயதில் அரியணை ஏறினார். ஐரோப்பா மீண்டும் போரையும் ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளும் காலகட்டத்தில் அவர் இறந்திருக்கிறார்.

பொதுமக்களின் வாழ்விலிருந்து தனிமைப்பட்டு மிகவும் கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய அரச வாழ்க்கை பற்றிய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்தாலும் பிரித்தானியாவின் மரபு மாற்றம், பிரித்தானியாவை பன்முக கலாசார அதிக மதச்சார்பற்ற சமூகமாக மாற்றுதல் மற்றும் பிரிட்டிஷ் பேரரசை பிரிட்டிஷ் கொமன்வெல்த் ஆகக் குறைத்தல், பிரிட்டனை பெரிய சக்தி என்ற நிலையில் இருந்து. மாற்றுவது என்பன மாகாராணியாரின் சாதகமான மாற்றங்களாக உலகெங்கிலும் நினைவு கூரப்படுகின்றது.

பல வழிகளில் மகாராணியாரின் குடும்ப பிரச்சினைகள், அவரது மகன் இளவரசர் அன்ட்ரூவைச் சுற்றியுள்ள ஊழல்கள் மற்றும் அவரது பேரன் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுடன் அரச குடும்பத்தின் பொது முறிவு போன்றவை மகாராணியாரை தனது மக்களுடன் நெருக்கமாக்கியது. நன்மையோ தீமையோ அவர் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக மதிக்கப்பட்டார் . உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது பெரிய குடும்பத்தின் வாழ்க்கை, காதல்கள், விவாகரத்துகள் மற்றும் துன்பங்களைத் தங்களுக்கு நேர்ந்தது போல் கருதியது, அவரது மாய செல்வாக்கின் வலிமையால் நிகழ்ந்ததுதான்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உக்ரைனை ஆக்கிரமிப்பதன் மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய போரைத் தொடக்கியுள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்றாம் சார்ல்ஸ் மன்னருக்கு தனது அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார். "இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை எதிர்கொள்ளும் தைரியத்தையும் விடாமுயற்சியையும் நான் வேண்டுகிறேன்." என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸை வாழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு ராணி இறந்தார். - அவர் முதலில் சந்தித்த பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில். மொத்தம் 15பிரிட்டிஷ் பிரதமர்களுடன் அவர் பணியாற்றியிருக்கிறார். அனேகமாக எந்தப் பிரதமரும் அவருடன் முரண்பட்டதாக செய்திகள் இல்லை.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் வடிவமைக்கப்பட்ட கரீபியனில் மகாராணியாரின் மரணம் முரண்பட்ட உணர்ச்சிகளைத் தோற்றுவித்துள்ளது. ஜமெய்க்காவின் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் உலகத் தலைவர்களுடன் இணைந்து அரச குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

ஆனால் மற்றவர்களுக்கு ராணியின் மரணம் பிராந்தியத்தின் காலனித்துவம் சார்ந்த கடந்தகால நினைவுகளையும் மற்றும் அடிமை வர்த்தகத்தின் கொடுமைகளையும் நினைவூட்டுவதாக இருந்தது.

எனினும் எலிஸபெத் மகாராணியார் அடிமை வர்த்தகம் மற்றும் நாடு பிடிக்கும் காலனித்துவத்துடன் நேரடி சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர் இரண்டாம் மகாயுத்தத்தின் பின்னர் பதவியேற்கும் போது அவை முடிந்து போனவையாக இருந்தன. பேரரசின் வீழ்ச்சிக் காலத்தின் ஆரம்பம் என்று கூட அவர் காலத்தைச் சொல்லலாம். விக்டோரியா கட்டி எழுப்பிய பேரரசு சிதையத் தொடங்கியிருந்தது.

அரச குடும்பத்து அரியணைக்கான வாரிசுகள்

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அரசராகியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி 73வயதில் தான் வந்தடைந்திருக்கிறது.

அவர் மூன்றாம் சார்ள்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ள்ஸ் தான், இரண்டாம் சார்ள்ஸ் மன்னர் 1660முதல் 1685வரை ஆட்சி செய்த பின்னர் இப்போதுதான் மற்றொரு சார்ள்ஸ் மூன்றாவது என்ற பட்டத்துடன் அரியணை ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம் இரண்டாம் எலிசபெத் தான், பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் அரியணையில் ஆட்சி செய்தவர். உலக அளவில் அதிக காலம் ஆட்சி செய்த அரசர் பிரெஞ்சு மன்னன் 14ம் லூயி. இவர் 72ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார். அந்த வரிசையில் மகாராணியார் இரண்டாம் இடத்தை வகிக்கிறார். இவரது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகள்.

ராணி மற்றும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்

பிரிட்டனை 70ஆண்டுகளாக ஆட்சி செய்த ராணி, கடந்த ராணியாக இருந்தார். செப்டம்பர் 8, 2022அன்று மரணமடைந்தபோது அவருக்கு வயது 96.

1926ஆம் ஆண்டு பிறந்த இளவரசி எலிசபெத், 1952ஆம் ஆண்டு தனது தந்தையான ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறியவர். அவர் 1947ஆம் ஆண்டு கிரேக்கத்தை தாய் நாடாகக் கொண்ட செல்ஸ்விக் சொன்டர் பேர்க் என்ற ஜெர்மனிய பெயரைக் கொண்டவரை திருமணம் செய்தார். அவரது கிரேக்க அடையாளத்தை மறைக்கும் வகையில் மவுண் பேட்டன் என்ற ஆங்கிலப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. அவரது அன்னையரின் பெட்டன் பேர்க் என்ற நாமத்துக்கு இணையான பெயர் இது. திருமணத்தின் பின்னர் எடின்பரோ கோமகன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இளவரசர் ஃபிலிப் 1921இல் பிறந்தவர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் கடற்படையில் பணியாற்றியவர். அவர் ஒருவர் தான் பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் கணவர். 22,000-க்கும் மேற்பட்ட தனிபட்ட செயல்பாடுகளை மேற்கொண்டவர், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் ஏப்ரல் 9, 2021அன்று மரணமடைந்தார். மிகச் சாதுவான இராணியின் கணவர் என்ற பெயர் இவருக்குண்டு. பிரசித்தி பெற்ற பெண்மணிகளின் கணவர்மார் சாதுவாகத்தான் இருந்தாக வேண்டும்.

​சார்ள்ஸ் அரசரானார்

பிறப்பு: 1948ராணியின் மூத்த மகன்.

முன்னாள் வேல்ஸ் இளவரசர். லேடி டயானா ஸ்பென்சரை மணந்தவர். ஜூலை 29, 1981டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். அவர்களுக்கு வில்லியம், ஹரி என்று இரண்டு பிள்ளைகள். பிறகு, அவர்களுக்கு இடையே 1996-இல் திருமண முறிவு ஏற்பட்டது. ஓகஸ்ட் 31, 1997அன்று, இளவரசி டயானா பாரிஸில் நிகழ்ந்த கார் விபத்தில் மரணமடைந்தார். அது இன்றைக்கும் மர்மமான மரணம் தான்.

அவர் ஏப்ரல் 9, 2005ம் திகதி தன் நீண்டகால நண்பியான கமில்லா பார்க்கர் பவுல்ஸை மணந்தார். இவர் விவாகரத்தான பெண்மணி என்பது இன்றைக்கும் குறைபாடாகவே பார்க்கப்படுகிறது.

இளவரசர் வில்லியம், கார்ன்வால் மற்றும் கேம்பிரிட்ஜின் கோமகன்

பிறப்பு: 1982

இளவரசர் வில்லியம் தற்போதைய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி டயானாவின் மூத்த மகன். இப்போது அவர் அரியணை வாரிசு வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.

அவரது தாயார் உயிரிழந்தபோது அவருக்கு 15வயது. அவர் செயின்ட் எண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் கற்றபோது தனது வருங்கால மனைவி கேத்தரின் மிடில்டனை சந்தித்தார். அவர்கள் 2011-இல் திருமணம் செய்துகொண்டனர்.

அவரது 21வது பிறந்தநாளில், உத்தியோகபூர்வ சந்தர்ப்பங்களில் ராணியின் பக்கம் நிற்கக்கூடிய நாட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஜூலை 2013இல் முதல் குழந்தையாக ஜோர்ஜ் மற்றும் 2015இல் இரண்டாவதாக சார்லோட் மற்றும் மூன்றாவதாக 2018இல் லூயி ஆகிய மூவர் பிறந்தனர்.

வடக்கு வேல்ஸில் அமைந்துள்ள விமானப் படைத்தளத்தில் மீட்பு விமானியாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதற்கு முன்பு, இளவரசர் வில்லியம் ராணுவம்,ரோயல் கடற்படை மற்றும் விமானப் படையில் பயிற்சி பெற்றார். அவர் தனது அரச கடமைகளுடன் கிழக்கு எங்கிலியன் விமான ஆம்புலன்ஸில் துணை விமானியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். ராணி மற்றும் எடின்பரோ கோமகன் சார்பாக அதிக அரச பணிகளை மேற்கொள்வதற்காக அவர் 2017ஜூலையில் அந்தப் பதவியை விட்டு விலகினார்.

அரியணையின் வாரிசாக, அவரது முக்கிய கடமைகள், அரசி மற்றும் அவரது அரச கடமைகளில் ஆதரிப்பதாகும்.

கோர்ன்வால் மற்றும் கேம்பிரிட்ஜின் இளவரசர் ஜோர்ஜ்

பிறப்பு: 2013

கோர்ன்வால் மற்றும் கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ், 22ஜூலை 2013அன்று லண்டனிலுள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் பிறந்தார்..

இளவரசர் ஜோர்ஜ் அதாவது வில்லியத்தின் மூத்த மகன். தனது தந்தைக்குப் பிறகு அரியணைக்கான இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கோர்ன்வோல் மற்றும் கேம்பிரிட்ஜின் இளவரசி சார்லட்

பிறப்பு: 2015

இளவரசி கேத்தரின் அதாவது வில்லியத்தின் மனைவி 2015ஆம் ஆண்டு பெற்றெடுத்த பெண் குழந்தையின் பெயர் ஷார்லோட் எலிசபெத் டயானா என்பதாகும்.

அவர் தனது தந்தை, மூத்த சகோதரரைத் தொடர்ந்து அரியணை வாரிசாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வாசுகி

Comments