அடுத்த தேர்தலை இலக்கு வைத்து புதிதாக உருவாகும் கூட்டணிகள்! | தினகரன் வாரமஞ்சரி

அடுத்த தேர்தலை இலக்கு வைத்து புதிதாக உருவாகும் கூட்டணிகள்!

நாடு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும்நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணிகள்மற்றும் கட்சிகளுக்கிடையிலான மறுசீரமைப்புக்கள்குறித்த பரபரப்புக்களும் அதிகரித்துள்ளன. மக்களின் எதிர்ப்புக்காரணமாக பதவியை விட்டு விலகி வெளிநாடு சென்றிருந்தமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடுதிரும்பியிருக்கும் சூழ்நிலையில், பல அரசியல் கட்சிகள்அடுத்ததொரு தேர்தலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பி சுமார் ஒருவாரமாகும் நிலையில், அவர் இதுவரை நேரடியான அரசியலில் ஈடுபாடு காண்பிக்கவில்லை. நாடு திரும்பிய அவரை வரவேற்க பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் விமான நிலையம் சென்றிருந்ததுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக வீட்டுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேநேரம், அரசியல் கட்சிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் வருடாந்த மாநாடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தன. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி நாட்டுக்கு வழங்கும் புதிய தலைமைத்துவத்துடன் கட்சியும் பலமான நிலைக்குச் செல்லும் என்ற நம்பிக்கை அக்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் சுதந்திரக் கட்சியும் தனது வருடாந்த மாநாட்டை அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்தியிருந்தது.

சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னராகக் கூடிய மத்திய குழு கட்சியின் யாப்பை மாற்றி தலைவருக்கு அதிகாரத்தைக் கூட்டியிருந்தது. அதாவது கட்சியின் விருப்பத்துக்கு மாறாக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தலைவருக்குக் காணப்படும் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், இதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், 'எமக்குப் பிழைத்தது எங்கே' என்ற தொனிப்பொருளில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்வுகளை பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது. இதில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாவட்ட ரீதியில் உள்ள கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். கட்சியின் மாநாட்டில் புதிய பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

கட்சிகள் இவ்வாறு தம்மைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், புதிய கூட்டணிகளும் உதயமாகியுள்ளன. ‘மேலவை இலங்கைக் கூட்டணி’ என்ற புதிய கூட்டணி உருவாகியுள்ளது. பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்று பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் இணைந்து இக்கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. எதிர்காலத்தில் நடக்கக் கூடிய தேர்தலை இலக்கு வைத்தே இந்தக் கூட்டணி உதயமாகியுள்ளது.

இது இவ்விதமிருக்க பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று தற்பொழுது எதிர்க்கட்சியில் அமைந்துள்ள மற்றுமொரு குழுவும் உருவாகியுள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13உறுப்பினர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

பொதுஜன பெரமுனவின் தலைவராகச் செயற்பட்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளட்டவர்கள் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய வியத்மக அமைப்பின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே இதில் அங்கம் வகிக்கின்றனர்.  எதிர்காலத்தில் இவர்களும் தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அலுவலகமும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திறந்து வைத்திருந்தார். இந்நிகழ்வில் பாராளுமன்றத்தில் சுயாதீனமடைந்துள்ள அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும், 43ஆவது படையணிக்குத் தலைமை வகிக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுபக்கத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 37இராஜாங்க அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை பதவியேற்றிருந்தனர். பொதுஜன பெரமுனவில் கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களுக்கே மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் இணையப் போவதில்லையென சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்குக் கூறியிருந்தாலும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூவர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர். ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ள நிலையில், மேலும் மூவர் இராஜாங்க அமைச்சர்களாகியுள்ளனர்.

இது தவிரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாகப் பாராளுமன்றத்துக்கு நுழைந்து இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட டயனா கமகே, அரவிந்த குமார் ஆகியோருடன் கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்களுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அடுத்துவரும் பொதுத் தேர்தலொன்றுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளன. இருந்தபோதும் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் தேர்தலொன்றுக்குச் செல்வது எந்தளவுக்குச் சாத்தியமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இராஜாங்க அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில், தேர்தல் குறித்த ஏற்பாடுகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

Comments