வீழ்ச்சியிலிருந்து வேகமாக மீண்டெழுகிறது ஐ.தே.க! | தினகரன் வாரமஞ்சரி

வீழ்ச்சியிலிருந்து வேகமாக மீண்டெழுகிறது ஐ.தே.க!

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் கட்சி அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் வகிபாகம் முக்கியமானதாகும். சுமார் நானூறு வருடங்களாக ஏகாதிபத்தியவாதிகளின் அடிமைத்தனத்தில் இருந்த நம் தாய்நாட்டை விடுவித்து சுதந்திர நாடாக இலங்கையை உருவாக்குவதில் அன்றையஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்களின் பங்கு அளப்பரியதாகும்.

இதனை முன்னிலைப்படுத்தி தேசியத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி 76வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமை பெருமையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த சுமார் ஏழு தசாப்தங்களாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த கட்சிகளில் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சி விளங்குகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

நாட்டில் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் கொண்டுவரப்பட்ட கொள்கைத் திட்டங்கள் பலவற்றுக்கு உரிமை கோரக்கூடிய பெருமையைக் கொண்ட இந்தக் கட்சி தனது 76வது வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், அக்கட்சியிலிருந்து தெரிவான நான்காவது ஜனாதிபதியாகவும் விளங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மாநாடு நடைபெற்றிருந்தது.

கடந்த தசாப்தங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து அவ்வப்போது வீழ்ச்சி கண்டாலும் மீண்டும் ஏறுமுகம் கொடுத்த கட்சி என்ற வரலாற்றை ஐ.தே.க கொண்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எந்தவித உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படாத நிலையில், தேசியப் பட்டியல் ஊடாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று ஒரு சிறிது காலத்திலேயே பிரதமராகி, பின்னர் பதில் ஜனாதிபதியாகி, பின்னர் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க இடம்பிடித்தார்.

இது மாத்திரமன்றி, அவருடைய பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு ஐ.தே.க உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான ஆளுமைமிக்க தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்பொழுது மாத்திரமன்றி இதற்கு முன்னரும் பல்வேறு தலைமைத்துவ சவால்களைச் சந்தித்து மக்கள் மத்தியில் பிரபலமிழந்து மீண்டும் பதவிக்கு வந்த வரலாறு உண்டு. இதன் தொடர்ச்சியாகவே ஐ.தே.க மீண்டும் மீட்சி பெற்றிருக்கிறது என்று கூறலாம்.

மிகவும் சவாலான சூழலில் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சியையும் மீண்டும் பலமான நிலைக்குக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியிருப்பதை அக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.

'முன்பிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் மற்றும் ஜனாதிபதிகளைப்  போன்று பதவிகளை வழங்குவதற்கு இன்று என்னால் முடியாது. மக்கள் இன்று அழுத்தத்தில் உள்ளனர். சிலரால் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலை உள்ளது. பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாம் அனைவரும் நமது உழைப்பால் நிச்சயமாக இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்' என ஐ.தே.கவின் 76ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

வழமைக்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்களை இதில் குறிப்பிட்டுக் கூற முடியும்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், 'இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் என்ற வகையில் 22ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அதை  நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு மேலும் திருத்தப்பட்டுள்ளது. விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நீக்கப்பட  வேண்டும். அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களை இயற்றுவதற்கான  அதிகாரம் நீக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான மேலும் பல விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்ப நமது அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். 

இவை அனைத்தையும் விட முக்கியமானது 'தேசிய சபை உருவாக்குவதாகும். கட்சித் தலைவர்கள் குழு ஒன்றுகூடி ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்காக உடன்பாடு காண முடியும். தேசிய சபை தொடர்பில் இந்த வாரம்  இறுதி முடிவு காண எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அதனுடன் மேலும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.  பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உண்மையைக் கண்டறியும்  ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டம் ஒன்றை முன்வைக்க இருக்கிறோம்.

இளைஞர் பாராளுமன்றம் சட்டப்பூர்வமாக்கப்படும்.  மக்கள் சபை அமைப்பது தொடர்பில் எமது முன்னாள் சபாநாயகர்  கரு ஜயசூரிய  யோசனை ஒன்றை  முன்மொழிந்துள்ளதுடன், அந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டார்.

“2023  ஆம் ஆண்டில் இருந்து  2048ஆம் ஆண்டு வரை 25ஆண்டுகள் உள்ளன. இந்த  காலப்பகுதிக்குள்  சக்திவாய்ந்த மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவோம். அடுத்த ஆண்டு முதல் அதை தொடங்குவோம். அதன் பலனை காண நான் இருக்க மாட்டேன். ஆனால் இங்குள்ள இளைஞர்கள் சிறப்பாக  வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறேன்.

நமது கொள்கைகளை இரும்புச்சட்டத்தை போன்று வைத்திருப்போம். ஆட்சிகள் அமைச்சுக்கள் மாறும் போது மாறாத   கொள்கையை உருவாக்குவோம். இந்த கொள்கை கட்டமைப்பை 05  ஆண்டு திட்டங்களாகச்  செயல்படுத்துவோம்.

நாம் சிங்களவராக, தமிழராக, முஸ்லிம்களாக அல்லது வேறு எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, இது எமது தாய்நாடாகும்.  நாம் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளராக இருந்தாலும்  மொட்டுக் கட்சி,  மக்கள் விடுதலை முன்னணி, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதை மறக்கக் கூடாது. நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்றுவோம் எனவும் ஜனாதிபதி இங்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

அதேநேரம், ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் ரங்க பண்டார மற்றும் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேர்தன, உப தலைவர் ருவன் விஜயவர்த்தன உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்ள் பலரும் இங்கு உரையாற்றியிருந்தனர். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பலமான நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பது அவர்களின் உரைகள் மூலம் அழுத்திக் கூறப்பட்டிருந்தது.

“பல வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த போதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கான சுக்கான் கிடைக்கவில்லை. தற்பொழுது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி நாட்டை பலமான நிலைக்குக் கொண்டு செல்ல ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவார்” என்ற நம்பிக்கையை பாலித்த ரங்க பண்டார முன்வைத்தார்.

'இப்போது சுக்கான் உங்கள் கைக்கு வந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் உள்ளங்களை குணப்படுத்த நாம் போராட வேண்டும். நாம் அந்த போராட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பலமாக கட்டியெழுப்பிய கட்சியே தவிர நாட்டை பலவீனப்படுத்திய கட்சி அல்ல' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவானதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பாரியதொரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமது கட்சியைவிட்டுப் பிரிந்து சென்றவர்களை இணைத்து மீண்டும் பலமான கட்சியை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

சம்யுக்தன்

Comments