தடுமாற்றமும் பலம் தரலாம்! | தினகரன் வாரமஞ்சரி

தடுமாற்றமும் பலம் தரலாம்!

ஆப்கானிஸ்தானிடம் முதல் இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது மத்திய வரிசை வீரர்கள் கரைசேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அவர்களும் கைவிட்டார்கள்.

கடைசியில் இலங்கை அணி 105ஓட்டங்களுக்கு சுருண்டபோது 100ஐ தாண்டிவிட்டோம் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பார்கள் என்று கனவு கண்டோம். ஆனால் துடுப்பாட்ட வீரர்களே பரவாயில்லை என்பது போல் ஆப்கான் வீரர்கள் கண்டமேனிக்கு விளாச அந்த அணி 9.5ஓவர்களை மிச்சம் வைத்து வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு அடுத்து பங்களாதேஷுடனான போட்டி ஆசிய கிண்ணத்தின் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறுவதற்கான நொக் அவுட் ஆட்டமாகவே மாறிவிட்டது. இதில் இலங்கை, பங்களாதேஷின் வாய்ச்சண்டை வேறு.

ஆப்கானை விட பங்களாதேஷ் தமக்கு பெரிய சவால் இல்லை என்று இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க கூற, “களத்தில் பார்ப்போம்” என்று பங்களாதேஷ் சகலதுறை வீரர் மஹதி ஹசன் பதிலளித்ததோடு மோதல் முடியவில்லை. பங்களாதேஷ் பயிற்சியாளர் காலித் மஹ்மூதின் பேச்சும் இன்னும் சீண்டி விடுவது போல இருந்தது.

“அப்படியான ஒன்றை தசுன் சானக்க கூறியது ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஷகிப் மற்றும் முஸ்தபிசுர் தவிர பங்களாதேஷிடம் (உலகத் தரம் வாய்ந்த) பந்துவீச்சாளர்கள் இல்லை என்று அவர் கூறியதை நான் கேட்டேன். உண்மையில், இலங்கை அணியில் (உலகத் தரம் வாய்ந்த) ஒரு பந்துவீச்சாளரைக் கூட நான் காணவில்லை” என்றார் மஹ்மூத்.

இந்தப் பேச்சால் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கும் கோபம் வந்துவிட்டது.

“களத்தில் பந்துவீச்சாளர்கள் தமது திறமையைக் காட்டுவதற்கும் துடுப்பாட்ட வீரர்கள் தாம் யார் என்பதைக் காட்டுவதற்குமான நேரமாக இது உள்ளது” என்று மஹேல தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இலங்கை–பங்களாதேஷ் இடையிலான முறுகல் என்பது கடந்த ஒருசில ஆண்டுகளாக இருந்து வருகிறது. போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தும்போதும், வெற்றிபெறும்போதும் எதிரணியை கோபப்படுத்தும் அளவும் பங்களாதேஷ் வீரர்களின் மிகையான கொண்டாட்டம் 2018இல் இலங்கையில் நடந்த சுதந்திரக் கிண்ணப் போட்டியில் உச்சம் பெற்றது. அதுவே இரு அணிகளின் பூசலுக்கும் அடிப்படையாக இருந்தது.

குறிப்பாக நஸ்முல் இஸ்லாமின் “பாம்பு ஆட்டம்” பங்களாதேஷ் ரசிகர்களை தவிர யாருக்கும் ஒத்துப்போகவில்லை. கடைசியில் பங்களாதேஷ் அணி தோற்கும்போதெல்லாம் எதிரணிகள் பாம்பு ஆட்டம் ஆட ஆரம்பித்தன.

இந்தப் பணிப்போர் ஒருபக்கம் இருக்க இலங்கை, பங்களாதேஷ் போட்டியும் அதற்கே உரிய பரபரப்போடு நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 183ஓட்டங்களை பெற்று வெற்றி நிச்சயம் என்று குதூகலிக்க இலங்கை அணி அதனைத் துரத்தி வெற்றிபெற்றதோடு, சாமிக்க கருணாரத்னவின் பாம்பு ஆட்டமும் நடைபெற்றது.

ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி தடுமாற்றத்துடனேயே சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறியது. ஆப்கானுடனான போட்டியில் இலங்கை அணியின் பலவீனம் அனைத்தும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தது. பங்களாதேஷ் போட்டியில் இலங்கையின் பந்துவீச்சு வரிசை எதிரணிக்கு சவாலாக இருக்கவில்லை.

குசல் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, சரித்த அசலங்க, பானுக்க ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக்க என்று துடுப்பாட்ட வரிசை எதிரணிக்கு சவால் கொடுக்கக் கூடியதாகவே இருக்கிறது. பங்களாதேஷ் போட்டியில் அது தெளிவாகத் தெரிந்தது.

என்றாலும் துடுப்பாட்ட வரிசையில் நிலைத் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிசை ஆரம்ப வீரராக களமிறக்கியபோது ஆரம்ப வீரரான தனுஷ்க குணதிலக்கவை மத்திவரிசையில் இறக்கி சோதிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணியில் ஏற்கனவே மத்திய வரிசை வீரர் ஒருவராக தனஞ்சய டி சில்வா இருக்கிறார்.

ஆப்கானுடனான போட்டியில் இந்தப் பரீட்சாத்த முயற்சி தோற்றபோது பங்களாதேஷுடனான போட்டியிலாவது மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் குணதிலக்க மீண்டும் சோபிக்கத் தவறினார்.

அதேபோன்று ஆட்டத்தின் போக்கை கருத்தில் கொள்ளாமல் இடதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டமிழந்தால் பதிலாக இடதுகை வீரரும் வலதுகை வீரர் ஒருவர் ஆட்டமிழந்தால் வலதுகை வீரரும் களமிறக்கப்படும் போக்கும் கிரிக்கெட் உலகில் காலாவதியான போட்டித் தந்திரம். இதனை இலங்கை அணி கருத்தில் கொள்ள வேண்டும்.

என்றாலும் பந்துவீச்சில் இலங்கை அணியில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க சமாளித்து விடுவார். ஆனால் வேகப்பந்து வீச்சில் அப்படியான ஒருவர் இல்லை.

துஷ்மன்த சமீர, கசுன் ராஜித்த, பினுர பெர்னாண்டோ, லஹிர குமார என அனைத்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் காயத்தில் உள்ளார்கள். அதிலும் மணிக்கு 140கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக் கூடிய சமீர அல்லது லஹிரு குமார இருவரில் ஒருவர் அணியில் இருந்தாலேயே அணி முழுமை பெறும்.

பதிலுக்கு இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் டி20சர்வதேச கிரிக்கெட்டுக்கு புது முகங்களான டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரன மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரை வைத்துத் தான் எதிரணியை வேகத்தில் பயம் காட்டவேண்டி இருக்கிறது.

இதில் அசித பெர்னாண்டோவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் இருக்கிறது. பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் அவர் தனது 4ஓவர்களுக்கும் 51ஓட்டங்களை விட்டுக்கொடுத்தபோதும் அவரது பந்துவீச்சு பாணி நம்பிக்கை தருகிறது.

இலங்கை அணி சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆரம்ப சுற்றில் இருந்த தடுமாற்றம் என்பது உற்சாகத்தை கொடுக்கும் ஒன்று. ஆனால் அது தனது பலவீனங்களை அறிந்து அதனை சரி செய்வதற்கான நல்ல வாய்ப்பு. இலங்கை அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் ஆசிய கிண்ணத்தை முத்தமிடலாம்.

Comments