61 ஆயிரம் பயனாளர்களில் பெருந்தோட்டம் உள்ளடங்குமா?; இல்லையேல் மாற்று ஏற்பாடு உள்ளதா? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

61 ஆயிரம் பயனாளர்களில் பெருந்தோட்டம் உள்ளடங்குமா?; இல்லையேல் மாற்று ஏற்பாடு உள்ளதா?

மண்ணெண்ணெய் விலைஅதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியதன் மூலம் பெருந்தோட்ட சமூகம்கண்டுகொள்ளப்படாதோ எனும் கவலை எழுவது தவிர்க்க இயலாததே. இதைச் சரிசெய்வதுபோலவே இ.தொ.கா. பொதுச்  செயலாளரும் நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான் இதுபற்றிதாம் ஜனாதிபதியோடு பேசியிருப்பதாகவும் அவர் ஆவண செய்ய உறுதியளித்திருப்பதாகவும்தெரிவித்துள்ளார்  

அரசாங்கம் 2022ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 61ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் 4மாதங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்தே இந்த 61ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. அப்படி தெரிவு செய்யப்படும் குடும்பங்களின் பட்டியலில் பெருந்தோட்ட சமூகம் உள்வாங்கப்படுமா என்னும் கேள்வி எழவே செய்கின்றது. ஏனெனில் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கும் மீனவ குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறியிருக்கின்றார். அது எவ்வாறான நிவாரணம் என்பது குறித்து அவர் பிரஸ்தாபிக்கவில்லை. 

61ஆயிரம் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்குள் பெருந்தோட்ட மக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் 4மாதங்களுக்கு தொடர்ந்து 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமாயின் அது வரவேற்புக்குரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்படும் சம்பளம்பெறும் தொழிலாளர் பட்டியலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதாவது தமது அன்றாட வாழ்க்கைச் செலவுப் புள்ளியை மையப்படுத்தி சம்பளம் நிர்ணயம் செய்யப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள். எனவே இவர்களை குறைந்த ஆதாயம் பெறுவோராக கணிப்பது எங்ஙனம் என்பது சிலரது வாதம். 

அதேநேரம் பெருந்தோட்ட சமூகம் இன்னும் தேசிய ரீதியிலான பொது வேலைத்திட்டங்களின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அவர்களுக்கான சகல தேவைகளும் தோட்ட கட்டமைப்பை மையப்படுத்தியே தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக வீடமைப்புத் திட்டம், சுகாதார சேவைகள், வேலைவாய்ப்பு விவகாரங்கள், அரசு சார்பிலான அனர்த்த நிவாரணங்களைக் குறிப்பிடலாம். இவை யாவும் அரச பொது சேவைக்குள் உள்ளடக்கப்படாமையே பின்னடைவுக்கான அடிப்படை காரணம். 

அதன் பின்னணியிலேயே ஜனாதிபதி தமது வரவு செலவுத்திட்ட உரையில் பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரண உதவி பற்றி தனியாகவே குறிப்பட நேர்ந்தது. இதேவேளை மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியதன் மூலம் பெருந்தோட்ட சமூகம் கண்டுக் கொள்ளப்படாதோ எனும் கவலை எழுவது தவிர்க்க இயலாததே. இதைச் சரிசெய்வது போலவே இ.தொ.கா. பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இதுபற்றி தாம் ஜனாதிபதியோடு பேசியிருப்பதாகவும் அவர் ஆவண செய்ய உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பொதுவாக பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனும் ஜனாதிபதியின் வாக்குறுதி எந்த அடிப்படையில் நிறைவேற்றப்படப் போகிறது என்று அறிந்துகொள்ளும் ஆவல் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்படவே செய்யும். எது எப்படியாயினும் வருமானம் குறைந்தோருக்கு வழங்கப்போவதாக அறிவித்திருக்கும் 4மாதங்களுக்கான மாதாந்தம் 10ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அவசியம் இருக்கவே செய்கின்றது.  

குறைவான வேலை நாட்கள், அதிகரித்து வரும் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, மண்ணெண்ணெய் விலையேற்றம், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் எதிர்நோக்கும் சவால்கள், குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, சுகாதார நெருக்கடி போன்ற பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டு...    உதாரணத்துக்கு வருமானம் குறைந்த பிற சமூகத்தவர்கள் சமூர்த்தி பயனாளிகளாக மாதந்த உதவி பெறுகிறார்கள். ஆனால் பெருந்தோட்ட மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. 

அவர்கள் தமது வேதனத்தை மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் தனியொரு மனிதனின் மாதாந்த செலவினம் 11ஆயிரத்திலிருந்து 12ஆயிரமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆனால் இவ்வாறான ஒரு தொகையை நான்கு அல்லது ஐந்து அங்கத்தினர்களைக் கொண்ட தமது குடும்பத்துக்காக பயன்படுத்தியாக வேண்டிய கட்டாய நிலைமையே பெருந்தோட்டங்களில் காணப்படுகின்றது. இதனால்தான் தற்போது வழங்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத் தொகையான தினசரி 1000ரூபாய் போதுமானதல்ல என்னும் கருத்தியல் மேலோங்கி நிற்கின்றது. 

இதேவேளை மேலதிக நிரந்தர வருமானத்துக்கான வழிவகைகள் உருவாக்கப்படாமையினால் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படவே செய்கின்றது. குறிப்பாக உபரி வருமானத்துக்காக விவசாய முயற்சிகளை மேற்கொள்ள முனைந்தாலும் அதனை ஊக்குவிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவுமே காணப்படுவதாக இல்லை. முக்கியமாக விவசாயத் தேவைகளை விரிவுப்படுத்தக்கூடிய வகையில் நில வசதி கிடைப்பது இல்லை. கடும் உழைப்பைக் காணிக்கையாக்கத் தயாராக இருந்தும் ஏணியாக இருந்து இவர்களை ஏற்றிவிடத்தான் எவருமே இல்லை.  

ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட அறிவிப்பில் பயன்படுத்தப்படாத காணிகளை இளைய சமூகத்துக்கு பகிர்ந்தளித்து விவசாய முயற்சிகளை முடக்கி விடுவது பற்றியும் கூறியுள்ளார். இதன்பேரில் பலரது பார்வையும் பெருந்தோட்ட தரிசுக்காணிகள் மீதே படியும். எனவே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விழைவது பெருந்தோட்ட தரிசு காணி விநியோகம் இடம்பெறும் பட்சத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். உடனடியாக சொந்தமாக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. காலவரையறைக்குட்பட்ட ஒப்பந்த அடிப்படையில் வழங்கினாலே போதும். இதேநேரம் நன்றாக விளைச்சல் தரக்கூடிய காணிகளைக்கூட தமக்கு வேண்டியவர்களுக்கு சொந்தமாகவோ குத்தகைக்கோ கொடுக்கும் நடவடிக்கைகளில் தோட்ட கம்பனிகள் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. காணிகளை அரசுடமையாக்கி அதனைப் பகிரும் முயற்சிக்கு தடைபோடும் தார்மீக உரிமை கம்பனி தரப்புக்குக் கிடையாது என்பதே பலரதும் கருத்து. 

இந்த தரிசு காணி விவகாரத்தில் இனவாதம் மேலோங்கிட இடமளிக்க கூடாது. தவிர வெளியார் தோட்டப் பிரதேசங்களில் பெருமளவு கால் பதிக்கும் பின்புலத்தில் அமைதியின்மைக்கே வழிகோலும். ஏலவே கிராமத்தவர்கள் சிலர் அத்துமீறி தோட்டக் காணிகளை கபளீகரம் செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 

இதையெல்லாம் கண்டும் காணாததும் போல வாளாவிருக்கின்றது கம்பனி தரப்பு. ஆனால் பெருந்தோட்ட மக்கள் தமது விவசாய முயற்சிகளுக்காக அல்லது கால்நடை வளர்ப்புக்காக தோட்டக் காணிகளை பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க கம்பனி நிர்வாகம் தயங்குவதே இல்லை. இவ்வாறான காரியங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துவது நல்லது. பெருந்தோட்ட சமூகம் தேயிலைத்துறை மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதுபோல விவசாய உற்பத்திகள் மூலம் பசுமைப் புரட்சியை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தவும் முடியும்.  

பெருந்தோட்டத்துறை சமூகத்தை ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களில் அரசாங்கம் வெளிப்படையானதும் வினைத்திறன் மிக்கதுமான கொள்கையை கடைப்பிடிப்பதே உகந்தது. ஏனெனில் அவர்களும் இந்நாட்டு ஏனைய சமூகங்களைப் போல சமதையான அந்தஸ்துடனும் கெளரவத்துடனும் வாழவேண்டியவர்களே!   

பன். பாலா  

Comments