மலையகக் கட்சிகள் சர்வகட்சி ஆட்சியில் இணையலாமா, வேண்டாமா? | தினகரன் வாரமஞ்சரி

மலையகக் கட்சிகள் சர்வகட்சி ஆட்சியில் இணையலாமா, வேண்டாமா?

நாட்டை இப் பொருளாதார புதைச் சேற்றில் இருந்து மீட்கும் வகையில் சகல அரசியல் கட்சிகளும் இணைகின்ற சர்வகட்சி ஆட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் அழைப்புக்கு மலையக் கட்சிகள் சாதகமாக பதிலை அளித்தால் என்ன என்ற கேள்விக்கு மூன்று மலையக பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றைத் தொகுத்து தருகிறோம்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேலை அணுகி இதுபற்றிக் கேட்டோம்.  

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.  

இஸ்லாமியர்கள், பெரும்பான்மை சிங்களவர்கள்  தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அமைச்சு பொறுப்புக்களைப் பெற்று தமது சமூகங்களைச் சார்ந்த மக்களுக்கு பாரிய சேவைகளை செய்து வருகின்றனர்.  

அவர்கள் பெற்றுக் கொள்கின்ற பல்வேறு அமைச்சுகள் சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய அமைச்சுக்களாக இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மலையகப் பிரதிநிதிகள், கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தாலும் தேசிய அரசு ஒன்றில் இணைவதில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை களைந்து முடிந்தளவு அதிகமான அமைச்சுகளைப் பெற்று மலையக சமூகத்தின் குறைபாடுகளை நீக்கும் வகையில் முன்வர இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.  

அவ்வாறு அவர்கள் பெறுகின்ற அமைச்சுகளில் இருந்து இந்த மக்களுக்கு எல்லாவித சேவைகளும் கிடைக்க வேண்டும். குறைந்தது மூன்று அல்லது நான்கு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்களை மலையக தலைமைத்துவங்கள் பெறவேண்டும் என்பது என் விருப்பம்.  

எனவே, நான் அந்தக் கட்சி இந்தக் கட்சி என அடையாளப்படுத்தாது கட்சிப் பேதங்களை மறந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று இந்த அரசாங்கத்தை வலுப்படுத்தி மக்களின் குறைபாடுகளை நீக்க ஒன்றுபடுவது காலத்தின் தேவை என்கிறார் இவர்.  

மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர். இராஜாராமிடம் சர்வகட்சி அரசு தொடர்பாகக் கேட்டோம்.  

"அமைச்சுப் பதவிகள் வழங்குவது ஒரு கண்துடைப்பாகும். அமைச்சு பதவி வழங்குவதால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறாது" என்றார் ஒரே போடாக! 

நாட்டில் அமைச்சுப் பதவிகள் வழங்குவதைவிட நாட்டில் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் தங்களது தொழிலை இழந்து இரவும் பகலுமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதை நிறுத்த முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ஆட்சிமுறை நிலைத்ததில்லை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் இத்தகைய ஆட்சியை விரட்ட முடியும் என்பதை கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் ஒரு எடுத்துக்காட்டு.  

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தங்களது ஆட்சிப் பதவிகளை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்களை அரசாங்கம் அடக்கி ஒடுக்க முடியாது. இளைஞர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டில் அமைச்சர்களுக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமென இரண்டு இருக்க முடியாது.  

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு பெற்றுத்தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பதிலாக அமைச்சுப் பதவி வழங்குவதாலோ அமைச்சு பதவிகள் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதாலோ நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.  

எனவே,  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை என்பது இராஜாராமின் கருத்தாக இருக்கிறது.

இந்த நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோர் சமூக அமைப்புகளின் தடையை நீக்கி அவர்களுக்கென காரியாலயம் அமைத்து அவர்களை அழைக்கும் இந்த அரசாங்கம் மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

ஏனெனில் கடந்த 200வருடங்களாக தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு டொலர் வருமானம் பெற்றுக்கொடுத்து வரும் மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள தயங்கக்கூடாது. இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

நாடு முடக்கப்பட்டிருந்தபோது பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி வழமைபோல் நடைபெற்றதன் மூலம் அந்நிய செலாவணி வருமானம் உறுதி செய்யப்பட்டது. எனினும் தோட்டத் தொழிலாளர்களை இரண்டாம் பிரஜைகளாகவே பார்க்கும் மனப்பான்மை அப்படியேதான் நீடிக்கிறது. ஏனையோருக்கு போலல்லாது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்படுவதில்லை. தோட்டத் தொழிலாளர் சமூகத்தை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திப்பதில்லை.  

மலையக பெருந்தோட்ட சமூகத்தை இந்த நாட்டில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் உழைக்கும் இயந்திரமாகவும் தேர்தல்களில் வாக்களிக்கும் இயந்திரமாகவும் பயன்படுத்துகிறார்களே தவிர அவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. எனவே மலையக சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கூறி முடித்தார் ராஜாராம்.  

அடுத்ததாக,  நாம் சந்தித்தது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தை.  

அண்மையில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதிகள் எவரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவில்லை என்று கவலை வெளியிட்டார்.  

எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு எமது மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

இயற்கை அனர்த்தத்தால் நாவலப்பிட்டி பிரதேச தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானதோடு உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இந்த மக்களை மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிடாமல் நாட்டு மக்களைப் பற்றியும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வரும் சீனா கப்பலைப்பற்றியும் பேசிவருகிறார்கள். இதனை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.  

மேலும் ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இனிமேலாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தொழில் உரிமையைப்பற்றி தோட்ட நிர்வாகங்களிடம் தொழிற்சங்கங்கள் பேசுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

இன்று இந்த நாட்டில் என்றுமில்லாதவாறு வாழ்க்கைச் செலவு தொழிலாளர்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. கோதுமை மாவை அதிகம் உபயோகிக்கும் இச் சமூகம் கிலோ மாவின் விலை 350என உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ப சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

உணவிற்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவை மானிய விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தோட்டங்களிலும் கூட்டுறவு சங்க கடைகள் அதை்து மானிய விலையில் மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை மா வழங்குவதுடன் உணவுப் பொருட்களையும் நியாய விலையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

நகரங்களில் சதொச நிறுவனம் மூலம் நியாய விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது போல தோட்டப் பகுதியில் கூட்டுறவு சங்கக்கடைகள் அமைத்து தொழிலாளர்களுக்கு நியாய விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் தோட்டங்களில் கூட்டுறவு சங்க கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு ஒரு தலைமைத்துவம் இல்லாத வேளையில் துணிந்து நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைத்து கட்சி தலைமைகளும் ஆதரவு வழங்கி அவர் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.    

நூரளையூரான்

Comments