வரிவிதிப்புகள் இல்லத்தரசிகளுக்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் | தினகரன் வாரமஞ்சரி

வரிவிதிப்புகள் இல்லத்தரசிகளுக்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும்

சீ.வி.கே. சிவஞானம் -வடமாகாண சபை அவைத் தலைவர்

அரச உத்தியோகத்தர்கள் 60வயதில் ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற திட்டத்தை பொருளாதார ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் மனித வள ரீதியாக பார்க்கின்ற பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு முன்னாள் அரச அதிகாரி என்ற ரீதியில் வரவேற்கின்றேன். தொழில்நுட்ப ரீதியானவர்களை தவிர, ஏனையோர் ஓய்வுபெற வேண்டும் என்பதும் முன்பே இருந்த நிலை... அதை அரசியல் காரணங்களுக்காக மாற்றிக் கொண்டார்கள். சிலருடைய செயல்களால் தன்மையினால் பதவியுயர்வுகள் தடுக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.. தனிப்பட்ட ரீதியில் மிகவும் வரவேற்கிறேன். பொது சேவைக்கு நல்லதொரு விடயம்.

அதேவேளை, இந்த வரவுசெலவு திட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. குறிப்பாக, துன்பப்படுகின்ற மக்களுக்கு மூச்சு விடக் கூடிய நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை இந்த வரவுசெலவு திட்டம்.

ஆனால் சில சில திட்டங்கள் முன்னேற்றமாக இருந்தாலும், எந்தளவிற்கு நிறைவேற்றப்படுமென்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, மக்கள் சார்ந்து, அவர்களுக்கு எந்தவிதத்திலும் நிவாரணம் அளிக்கக்கூடிய எந்த ஏற்பாடும் இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இல்லை. சில சில முன்னேற்றகரமான சிந்தனைகள் இழையோடினாலும் கூட, அவை எந்தளவிற்கு நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்குறியும் இருக்கிறது.

பெரியளவில் வரவேற்க கூடியதாக இல்லை. கஷ்டப்படுகின்ற, துன்பப்படுகின்ற மக்களுக்கு நிவாரணமாக அமையாத இந்த வரவு செலவு திட்டத்தை ஏற்கக்கூடியதாக என்னால் பார்க்க முடியவில்லை.

ஏற்கனவே வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை அதுவே எமது நிலையான முடிவு.

நாடு தற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இந்த வரவு செலவுத் திட்டம் தந்திருப்பதாகத் தெரிகின்ற போதிலும், அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரியானது, மேலோட்டமாகப் பார்க்கும்போது, வர்த்தக நிறுவனங்களையும், அல்லது நேரடி வரி செலத்துபவர்களுக்கான வரியைத் தருவதாகத்தான் தெரிகின்றது. ஆனாலும் வற் வரி மறைமுகமாக கீழ்மட்ட மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

வற் வரியை அதிகரிக்கும்போது அதன் சுமை நுகர்வோர் மத்தியிலேயே தாக்கம் செலுத்தும். இதில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிக்கும், அதேவேளை உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மேலோட்டமாகப் பார்த்தால் நாட்டிலுள்ள கடன் சுமையைத் தீர்ப்பதற்கு, வரியைப் பெற்று, ஒரு சுமுக நிலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும்கூட அது பெரும்பாலும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டில் உற்பத்திகளும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பெரிதும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களை இது பாதிக்கும். எனகண்டிசமூகஅபிவிருத்திநிறுவனத்தின் பணிப்பாளரும் சமூக ஆய்வு எழுத்தாளருமானபெரியசாமி முத்துலிங்கம் தெரிவிக்கிறார்.

இதன் தாக்கம் உடனடியாக தெரியாமல் போனாலும் காலப்போக்கில் நமது இளைஞர்கள் எதிர்காலம் மற்றும் அவர்களின் உள்ளீட்டு வீதங்கள் குறையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் எதிர்கால உள்நாட்டு முதலீடுகள் குறையும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதில் முற்றிலும் உடன்பாடு இல்லை, வளர்ந்து வரும் நாடான இலங்கையில் இதுபோன்ற நடவடிக்கைகள் இளைஞர்களை மேலும் வரிச்சுமைக்குள்ளாக்கும். எனமட்டக்களப்பைச் சேர்ந்த சமூகசேவையாளரும், பஃவ்ரல் அமைப்பு திட்ட முகாமையாளருமான பிரசன்யா பாக்கியசெல்வம் தெரிவிக்கின்றார்.

பெண்களுக்கு பொருளாதார விமோசனமளிக்கும் வரவு செலவுத் திட்டமாக அமைவதுதான் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யும். நாட்டில் பாதிப்பங்கிற்கு மேற்பட்டோர் பெண்களாக இருக்கும் நிலையில் எந்தவொரு செயற்றிட்டமும் பெண்களை கருத்திற் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.

அதனால் இடைக்காலத்துக்குரியதாக இருந்தாலும் நிரந்தரமானதாக இருந்தாலும் பெண்களுக்கு பொருளாதார விமோசனமளிக்கும் வரவு செலவுத் திட்டமாக அமைவதுதான் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யும்.

மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரிந்து நாட்டுக்கு அந்நிய செலவாணியை அனுப்பும் பெண்கள், தேயிலை இறப்பர், கொக்கோ, கோப்பி, உட்பட ஏற்றுமதிப் பயிர்கள் தோட்டத்துறையில் பணிபுரியும் பெண்கள், ஆடைத் தொழில்துறையில் பணிபுரியும் பெண்கள் உட்பட நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பாக பல துறைகளில் பெண்கள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள்.

எனவே, இத்தகைய பெண் தொழிலாளர், படையினருக்கு விமோசனமளிக்கும் வரவு செலவுத் திட்டமே நாட்டுக்கு நல்லதைத் தேடித் தரும். வரிகளை அதிகரிப்பதன் மூலம் பெண்களின் வாழ்க்கைச் சுமையே அதிகரிக்கும். அது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும். என சமூக செயற்பாட்டாளர்ஹபீப் முஹம்மது பாத்திமாசர்மிலா தெரிவிக்கின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களினதும், அரசியல் தலைவர்களினதும், ஸ்திரமற்ற போக்கே காரணமாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதிகளவு நிலப்பரப்பரப்பு, கடல்வளம், வனவளம் என அதிகவளங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இது தமிழர்களுடைய பூர்வீகம் என்பதனால்தான் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் பாரிய அளவில் அபிவிருத்திகளைச் செய்திருக்கவில்லை.ஓரளவுக்கேனும் செயற்பட்ட காகித ஆலை, சிமெந்து தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை, கரும்புத் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு அதற்கு ஈடான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு அன்னியச் செலவாணி அதிகளவு தேவைப்பட்டது. ஆனாலும் இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகையால் சுற்றுலாத்துறையை ஈர்க்க முடிந்திருந்தது. ஆனாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட செலவுகளுக்கு அதிகளவு கடன்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது தற்சார்பபு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் வரவேற்றகத்தக்கதாக இருந்தாலும், அது நாட்டின் பொருளாதாரத்தில் இன்னும் தாக்கம் செலுத்தும். நாட்டில் உற்பத்தியை பெருக்க வேண்டும், சந்தை வாய்ப்பை மேம்படுத்த வேண்டும்.

எனவே கிராமப்புற உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தல் வேண்டும். இதற்கு இந்த வரவு செலவுத்திட்டம் உறுதுணையாக இருக்க வேண்டும், எனசிவில் செயற்பாட்டாளரான எஸ்.சிவயோகநாதன் கூறுகின்றார்.

இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நலன்புரி சேவை வழங்கும் நாடாகவே தன்னை நிலை நிறுத்திக் வந்துள்ளது. அதனால் நாடும் மக்களும் வெளிநாடுகளிடமிருந்தும் சர்வதேச கொடையாளி நிறுவனங்களிடமிருந்தும் எப்பொழுதும் எதிர்பார்ப்பவர்களாகவும் கையேந்துபவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு நிலையும் சீரான முகாமைத்துவம் இல்லாததும் ஊழலுமே தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தோற்றுவாயாக உள்ளன. அரசுகளின் கொள்கையற்ற தன்மை நாட்டையும், நாட்டு மக்களையும் இந்தளவுக்கு அதல பாதாள பொருளாதார வங்குறோத்து நிலைமைக்குள் தள்ளியுள்ளது.

அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட மக்களே தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. மண்ணெண்ணெய் விலையேற்றமானது அடிமட்ட மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. குடிசைக் கைத்தொழில் செய்வோர் மலையக தோட்டத் தொழிலாள மக்கள், மீனவர்கள், விவசாயிகள் எல்லோரையும் மண்ணெண்ணெய் விலையேற்றம் முற்றாகப் பாதித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்டம் மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட அடிமட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக இருந்திருக்க வேண்டும்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் வருமானம் குறைவாகவும் செலவுத் தொகை பன்மடங்கு அதிகரித்ததாகவும் உள்ள நிலையில்,பொருளாதார அபிவிருத்தியை நாடும் நாட்டு மக்களும் எவ்வாறு அடைந்து கொள்ளப்போகின்றோம் என்பதே விடை காண முடியாத கேள்வியாகவுள்ளது.

இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டக்தின் ஊடாக, பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்கள் நிவாரணங்களை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு அடிமட்ட மக்களையே மேலும் மேலும் பாதிப்படைய வைத்துள்ளது. மக்கள் நொந்து போயுள்ளார்கள். மக்கள் மேலும் மேலும் கஷ்டத்துடனேயே காலம் கழிக்க வேண்டியுள்ளது.

எந்த அரசாங்கம் வந்தாலும் ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்காத வரை இந்த நாட்டுக்கு எந்த விமோசனமும் இருக்காது. என சமூக ஆய்வாளர் ஹுஸைன்  தெரிவிக்கின்றார்.

மக்களின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்ற போது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செலவேண்டியதும், நாட்டு மக்கள் வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் இன்னல்களுக்குட்படுத்துவதை குறைக்க வேண்டியதும், அரசின் தலையாய கடமையாகும்.

எனவே இது ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டமாக அமைந்தாலும், மக்களைப் பாதிக்காத வகையில் அவற்றை நடைமுறைப் படுத்தி அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கின்றபோதுதான் அதனை உச்சப் பயன்களை மக்கள் பெறுவார்கள்.

வ.சக்திவேல்,  சுமித்தி தங்கராசா

Comments