மழை, வெள்ளம், அனர்த்தங்கள்... | தினகரன் வாரமஞ்சரி

மழை, வெள்ளம், அனர்த்தங்கள்...

சமூகத்துடன் ஒன்று கலந்து இயங்கும் இரு தரப்பு என்றால் அவை வர்த்தக சமூகம் கோவில் நிர்வாகங்களும்தான். கடந்த மழை வெள்ள அனர்த்தங்களில் இரு தரப்பினரும் பெரும்பாலும் பாரா முகம் காட்டியது உறுத்தலாக இருப்பதாலேயே இந்தக் கட்டுரை'

இலங்கையின் பொருளாதார பின்னடைவு காரணமாக மிகவும் பாதிப்பை சந்திருக்கின்ற இந்த நாட்டு மக்கள் அதில் இருந்து எவ்வாறு மீண்டு வெளியில் வருவது என்பது தொடர்பாக சிந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் அவர்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்குகின்ற வகையில் காலநிலை மாற்றமும் அவர்களை  வாட்டி வதைக்கின்றது.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் மோசமான  காலநிலையே நிலவி வருகின்றது. வெள்ள அனர்த்தம்,  மண்சரிவு போன்ற காரணங்களால் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு உடமைகள் சேதமடைந்த அதே சமயம் சில பகுதிகளில் மிகவும் பாரதூரமான அளவில் பாதிப்புகள் எற்பட்டிருக்கின்றன.

மலையக பகுதிகளில், குறிப்பாக, நாவலப்பிட்டி, ஹட்டன், நுவரெலியா பகுதிகள் மழை  வெ ள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. அநேகமான மக்களுடைய வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தன.

ஒரு சில வீடுகளில் எந்தவிதமான பொருட்களையும் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. உயிர் தப்பினால் போதும் என்ற மனநிலையுடன் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக கோயில்களிலும் பாடசாலைகளிலும் சனசமூக நிலையங்களிலும் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு தஞ்சமடைய வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.

இவ்வாறு தஞசமடைந்தவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருந்தாலும் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை சரியாக நடைமுறைபடுத்த முடியாத ஒரு நிலைமையே உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது?

இலங்கையர்கள் என்ற வகையில் அனைத்திற்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கும் மனநிலை நம் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. எங்களுடைய அரசாங்கம்,  நாங்கள் வாக்களித்தவர்கள் என்றெல்லாம் நாம் கதை பேசிக்கொண்டிருப்போம். அவர்கள் செய்ய வேண்டும் இவர்கள் செய்ய வேண்டும் என்று விவாதிப்போம்.

ஆனால் நாம் ஒரு முறையேனும் சிந்திக்க முனைவதில்லை. என்னால் என்ன செய்ய முடியும் என்று சிலர் தங்களுடைய உழைப்பை கொடுக்கலாம். ஒரு சிலர் தங்களுடைய செல்வத்தையும், வசதியையும் கொடுத்து உதவி செய்யலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

அப்படி உதவி செய்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். முற்றாக இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் இது போதுமானதா? யார் இந்த உதவிகளை செய்தார்கள் யார் ஒன்றுமே செய்யவில்லை  என்ற கேள்வி எம் முன்னே நிற்கின்றது.

இக்கட்டான நேரங்களில் யார் உதவக் கூடும் என்றால் எப்போதும் அது வர்த்தக சமூகமாகத்தான் - செல்வந்தர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே இந்த விடயத்தில் எங்களுடைய வர்த்தக சமூகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் முன்நின்று உதவிகளை செய்தார்கள் என்பது ஒரு கேள்விக்குறியே! உதவி செய்தவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் உதவி செய்யாதவர்களே அதிகம் என்பதுதான் எமது கவலை.

மலையக வர்த்தக சமூகம் இதே மலையக மக்களிடமிருந்துதான் வருமானத்தைத் தேடுகிறது. எனவே கஷ்டம் என வரும்போது அம் மக்களுக்கு உதவ அவர்கள் கடமைப்பட்டவர்கள். எனவே தான் இந்த மன நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா தொற்றின் பொழுது எத்தனையோ  கோடீஸ்வரர்கள் யாருமே பக்கத்தில் போக முடியாத நிலையில், தங்களுடைய குடும்பம், ஜாதி, சமய, சடங்குகள் எதனையுமே நிறைவேற்ற முடியாமல் வெறுமனே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறிவோம்.

ஒரே குழியில் பணக்காரனும் கோடீஸ்வரனும் பரம ஏழையும் புதைக்கப்பட்ட சம்பவங்களை நாம் நேரில் பார்த்தோம். இதற்கு முன்பு சுனாமி ஏற்பட்ட பொழுதும் இதே நிலையே ஏற்பட்டது. இவற்றை பார்த்தும் நாம் இன்னும் எங்களுடைய மன நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் நாம் மனிதர்களாக வாழ தகுதியற்றவர்களே!

ஓடி ஒடி உழைக்கின்றார்கள்.  பணத்தை தவிர ஒரு சிலருக்கு வேறு எதுவுமே ஞாபகத்தில் வருவதில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை பணம் தனது வியாபாரத்தை பார்ப்பதும் தவிர வேறெந்த ஏனைய எந்த ஒரு விடயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. எதனையும் அனுபவிப்பதும் இல்லை.

ஒவ்வொருவரும் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பகுதியில் ஒரு அனர்த்தமோ அல்லது ஏதோ ஒரு பிரச்சினையோ மக்களுக்கு எற்பட்டால் முதலில் சென்று பார்க்க வேண்டியவர்கள் அந்த பகுதியில் வசிப்பவர்களே! குறிப்பாக இளைஞர் யுவதிகள். ஆனால் இவர்களிடம் பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடியாது. தங்களுடைய உழைப்பையே வழங்கலாம்.

பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியவர்கள் வர்த்தகர்களே. நீங்கள் செய்கின்ற அனைத்து உதவிகளும் உங்கள் பகுதியில் இருக்கின்ற மக்களிடம் இருந்து இலாபமாக நீங்கள் பெற்றுக் கொண்டவையே. அதனை அவர்களுக்காக செய்தால் நிச்சயமாக இது திரும்பி உங்களிடமே வரும். எதை நீ கொடுக்கின்றாயோ அதுவே உனக்கு திரும்ப கிடைக்கும் என்பது அருள் வாக்கு மட்டுமல்ல, உண்மையும் கூட!

எனவே வர்த்தகர்கள் இந்த விடயத்தில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த எழுத்தின் எதிர்பார்ப்பு வேறு எதுவும் கிடையாது.

அதே நேரத்தில் இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும். ஆலயங்களின் நிர்வாகிகளுக்கும் பாரிய ஒரு பொறுப்பு இருக்கின்றது. தங்களுடைய பகுதி மக்களை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. கடவுள் மீது பொறுப்பை போட்டுவிட்டு சும்மா இருந்துவிட முடியாது.

பல ஆலயங்களில் நிர்வாக சபை நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை. ஆலய நிர்வாகங்கள் திருவிழா செய்வதும் பூஜைகள் செய்வதும் மாத்திரமே தங்களுடைய செயற்பாடுகள் என்றால் அது தவறான ஒரு புரிதலாகவே இருக்கும்.

ஏனெனில் ஒரு சமூகத்தின் முன்னேற்றம், அதன் நன்மை தீமைகள், கஷ்ட நஷ்டங்கள் அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தங்களுடைய சமூகத்தின் கல்வியை மனதில் கொள்ள வேண்டும். அப்படி செய்கின்ற ஆலயங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவை எண்ணிக்கையில் மிகவும் குறைவு.

பல ஆலயங்களில் நிதி அறிக்கைகளே இல்லை. ஒரே பொருளாளர் பல வருடங்களாக பதவியில் இருக்கின்றார். அவர்கள் இருப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் நேர்மையானவர்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றது. எனவே இந்த இரண்டு தரப்பினரும் சிந்தியுங்கள்.

வாய் திறந்து பசி என்று கேட்காதவன் இறைவன். ஆனால் வாய் திறந்து பசி என்று கேட்கின்றவன் மனிதன். அந்த மனிதனின் பசியை உங்களால் ஆற்ற முடியுமானால் நிச்சயமாக அந்த இறைவனும் உங்களை ஆசீர்வதிப்பான். சிந்திப்போம் செயல்படுவோம்.

இன்னும் ஒரு விஷயம். எதிர்வரும் நவம்பரின் பின்னர் நாட்டின் பொருளாதார கஷ்டநிலை மேலும் உக்கிரமடையலாம் என அரசே கூறி வருகிறது.

அரிசி, மா விலை மேலும் அதிகரிக்கலாம் அல்லது தட்டுப்பாடு எழலாம். இவை பங்கீட்டு முறைக்கு செல்லவும் கூடும் இவ்வாறான நெருக்கடி நிலை குறைந்த வருமானம் பெறுபவர்களையும் தோட்டத் தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர முடிகிறது.

1974ஆம் ஆண்டில் பஞ்ச நிலை தோன்றி தொழிலாளர்கள் வீதிக்கு வந்தபோது வர்த்தக மற்றும் ஆலய சமூகங்கள் பாராமுகமாக இருந்து விட்டதைப் போன்று இம் முறையும் இருந்து விடலாகாது என்பதை முன் கூட்டியே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நூரளை எஸ். தியாகு

 

 

Comments