பொருளாதாரப் பாதிப்பினால் உண்டான வலியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரப் பாதிப்பினால் உண்டான வலியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்!

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்துமீட்டெடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு ஒப்புதல்வழங்கப்பட்டிருப்பது ஓரளவுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் (Extended Fund Facility) பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் குழு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் அறிவித்திருந்தது.

புதிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடு, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், ஊழல் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சித் திறனைத் அதிகரிப்பதுடன், பேரண்டப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, கடன் மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வரிவருவாயை அதிகரித்தல், செலவீனங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் செலவீனங்களை ஈடுசெய்யக் கூடிய வகையில் கட்டண அதிகரிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியிருக்கும்.

குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளிட்ட தரப்பினரைப் பாதுகாக்கும் சமூக நலன்புரி பாதுகாப்பு வலைகளை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் இந்தக் கடனுதவித் திட்டம் அமையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மென்மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடி அதனால் ஏற்படக் கூடிய விளைவு மிகவும் பாரதூரமானதாக அமையும்.

இதுவரை நடைபெற்ற போராட்டம் மத்திய தர மக்களால் மாற்றம் வேண்டி நடத்தப்பட்ட போராட்டம். எனினும், வாழ்வதற்கு வழி இன்றி குறைந்த வருமானம் பெறும் தரப்பினரால் போராட்டம் நடத்தப்படுமாயின் அது இரத்த ஆறு ஓடுவதற்கே வழிவகுக்கும். எனவே, அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லாதிருப்பதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே சமூக நலன்புரி பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிக அக்கறை காண்பிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பாராளுமன்ற விவாதங்களின் போது, நிதி தொடர்பான விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலூக்கப் பங்களிப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரப் பாதை குறித்து பயனுள்ள கலந்துரையாடலை ஏற்படுத்தும் நோக்கிலும், 'இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நோக்கு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வொன்று பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை ஒரு சில மாதங்களில் தீர்த்துவிட முடியாது. எனவே சர்வதே நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கக் கூடிய காலம் வரை, அதாவது எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நாட்டுக்கு மிகவும் கஷ்டமான காலமாக அமையும்.

இதனை அனைவரும் புரிந்து கொண்டு, கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார். அதேநேரம், பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படக் கூடிய வலியானது சகல தரப்பினராலும் சமமாக உணரப்பட வேண்டும். வருமானம் குறைந்த தரப்பினருக்கான வலி அதிகமாகவும், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் எதுவித வலியும் இன்றி இருப்பது சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்துக்கே வழிவகுக்கும்.

எனவேதான் அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை அறவிட்டு, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வசதிகளைச் செய்ய அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே வரி அதிகரிப்பும் காணப்படுகிறது என்ற விளக்கத்தை அவர் வழங்கினார்.

அதேநேரம், தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறக்குமதித் தடைகள் குறித்து விளக்கமளித்த அவர், தேவையற்ற இறக்குமதிகளை மேற்கொள்ளும்போது அந்நிய செலாவணி நாட்டைவிட்டு வெளியே செல்லும். இதனால் எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைக்காமல் போகும்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகளினால் வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்குப் பாதிப்புக்கள் இருக்கின்றன என்பதை மறுக்கவில்லை. அவர்களைப் பாதுகாப்பதாகக் கூறி இறக்குமதித் தடைகளை நீக்குவோமாயின் நாட்டில் மீண்டும் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான வரிசைகள் அதிகரித்து மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும்.

அதேநேரம், இறக்குமதிகளுக்கு இடமளித்தால் தேவையற்ற பொருட்களின் இறக்குமதி அதிகரித்து விடும். எனவே, இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சில தரப்புக்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

அதிகரித்த பணவீக்கம் காரணமாகப் பாதிக்கப்படும் தரப்பினராகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் தரப்பினரே அதிகம் காணப்படுகின்றனர். உதாரணமாக ஓட்டோ ஓட்டுபவர்கள் விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப தமது கட்டணத்தை அதிகரித்துக் கொள்வார்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விலைவாசிக்கு ஏற்ப தமது அறவீடுகளையும் அதிகரித்துள்ளனர்.

இருந்தபோதும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பணவீக்கம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு இல்லை, மாறாக விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கான பாதிப்பு அதிகம். எனவேதான் பொருளாதாரப் பாதிப்பினால் ஏற்படக் கூடிய வலியை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர் விளக்கமளித்தார்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானங்கள் நாடு மோசமான நிலைக்குச் செல்ல வழிவகுத்திருந்தன. இந்தத் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளைக் குறைகூற முடியாது. அரசியல்வாதிகளை வழிநடத்த வேண்டிய அரசாங்க அதிகாரிகளுக்கும் இதற்கான கூட்டுப்பொறுப்பு உள்ளது.

அதேபோல, அரசாங்க அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கும் போது அவற்றை அரசியல்வாதிகள் செவிமடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்ஹ வலியுறுத்தியிருந்தார்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்தியதன் ஊடாக கடந்த  வருடத்தில் செலவீனத்தை 2பில்லியன் ரூபாவரையிலும், இந்த வருடத்தில் 1.3பில்லியன் ரூபாவரை குறைக்க முடிந்திருப்பதாகவும், இதன் ஊடாக மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாகவும் அவர் விபரித்தார்.

விசேடமாக தற்பொழுது அரசாங்கத்தின் வருமானம் 1.2 பில்லியன் ரூபாவாக மாத்திரம் காணப்படுவதுடன், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்க முடிந்தால் அரசாங்கத்தின் வருமானத்தில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் அவருடைய கருத்தாக இருந்தது.

பி.ஹர்ஷன்

Comments