
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்துமீட்சி பெற்று 2048ஆம் ஆண்டாகும் போது முழுமையானஅபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான திட்டம்தயாரிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதிப் பதவியை ஏற்ற பின்னர்ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரைஆரம்பித்து வைத்த ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
அவருடைய இந்த அறிவிப்புக்கான அடித்தளம் போடப்பட்டிருப்பது அண்மையில் அவரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டில் எஞ்சிய காலப் பகுதிக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த நாட்டை ஆட்சி செய்த ஏனைய தலைவர்களுக்குச் சவாலாக இருந்த விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தும் அளவுக்கு அவர் தனது துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான முழுமையான யோசனைகள் எதிர்வரும் சில மாதங்களில் முன்வைக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள போதும், அதற்கான ஒரு முன்னோடியாக தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
அந்நிய செலாவணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களிலிருந்து வெளியே வருவதை நோக்காகக் கொண்டு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் ஒருபக்கமிருக்க, நாட்டில் நிலவும் நெருக்கடி நிறைந்த சூழ்நிலையால் ஏற்கனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் மென்மேலும் வீழ்ச்சியடைந்து விடாதிருக்கும் நோக்கில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களும் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.
பல தசாப்தங்களாக நஷ்டத்தில் இயங்கி வரும் அரசாங்க நிறுவனங்களின் ஊடாக வருமானத்தை ஈட்டும் பொருட்டு அவற்றை தனியார் கூட்டாண்மையுடன் வினைத்திறனாக்கும் யோசனைகள் குறிப்பாக 50அரசாங்க நிறுவனங்களை அரச-தனியார் கூட்டாண்மையின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இவ்வாறான யோசனைகள் பல்வேறு தரப்பினராலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு இது ‘ஸ்மார்ட்’ யோசனைகளாகத் தற்பொழுது பார்க்கப்படுகின்றது.
பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களைத் தூக்கியெறிந்து விட்டு அடிமட்ட மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளின் யதார்த்தங்கள் பற்றி புறநிலையாக சிந்தித்தல் வேண்டும் எனத் தனது உரையில் குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹந்துன்நெத்தியினால் அண்மையில் தெரிவிக்கப்பட்ட கூற்றொன்றினையும் மேற்கோள் காட்டியிந்தார்.
அதாவது, 'அரசாங்கம் கொள்கைகளை உருவாக்குதல் வேண்டும். அரசாங்கம் தொழில் முயற்சிகளை செயற்படுத்தக் கூடாது' என்பதாக அது அமைந்தது. புதிய உலக ஒழுங்கின் புதிய எண்ணக்கருக்கள் பற்றிய புதிய சிந்தனைகளை நாம் கொண்டிருப்போமாயின், பொருளாதார நெருக்கடியினைத் தீர்ப்பதற்கு எம்மால் முடியுமாகவிருக்கும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் தமது நோக்கங்களிலிருந்து வேறுபட்டு வணிக நிறுவனங்கள் போன்று செயற்பட்டமையால் உரிய இலக்கை அடைய முடியாது போயுள்ளது. இதனாலேயே பல தசாப்தங்களாக பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டன என்பதை அவர் இதன் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கத்தின் பிரதான ஆதாய மார்க்கமாக வரி அறவீடு காணப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எடுக்கப்பட்ட வரிக் குறைப்புத் தீர்மானம் நாட்டை எந்தளவு வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லக் காரணமானது என்பது கண்கூடு.
எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வரி வருவாய் அதிகரிப்புக் குறித்து அக்கறையுடன் உள்ளது என்பதை இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் ஒரு அங்கமாக இதுவரை 12வீதமாகக் காணப்பட்ட பெறுமதி சேர் வரி 15வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15வீதமாக் காணப்பட்ட பெறுமதி சேர் வரியானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் எவ்வித சாத்திக்கூற்று ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாது 8வீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. இதனால் அரசாங்கத்துக்குப் பல பில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டமையும் நாடு தற்பொழுது எதிர்நோக்கும் நெருக்கடிக்கு ஒரு காரணம் எனலாம்.
இந்த நிலையில் பெறுமதி சேர் வரியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் யோசனை தற்பொழுது அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வரி வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இது இவ்விதமிருக்க, 18வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய வரிப் பதிவொன்றினை மேற்கொள்வதற்கான முன்மொழிவும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு விடயமாக இருந்தாலும் வரி அறவீடுகள் தொடர்பில் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். விசேடமாக அதிக வருமானம் ஈட்டுபவர்களிடம் அறவிடப்பட வேண்டிய வரிகள் உரிய முறையில் அறவிடப்படுகின்றவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். சாதாரண மக்கள் தமக்கான வரிகளை சரியாகச் செலுத்தினாலும், அதிக வருமானம் ஈட்டுபவர்களே பெரும்பாலும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக் கொள்வார்கள். இந்த நிலைமை தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தி அனைவரும் நியாயமாக நடத்தப்படுவதும் முக்கியமாகும்.
அரச வரி வருவாய் அதிகரிப்புக்கு அப்பால் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது அல்லது முகாமைத்துவம் செய்வது என்பதும் தற்பொழுது அத்தியாவசியமான விடயமாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது,
'அரசாங்க செயன்முறை சிறந்த முறையில், அது செயற்பட வேண்டிய வகையில் செயற்படுவதனை உறுதிப்படுத்துகின்ற பொறுப்பினைக் கொண்ட, ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்ற கண்காணிப்பாளர் நாயகம் போன்ற முறைமையொன்றினை தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன். அரசாங்க நிறுவனங்களில் மோசடி, வீண் விரயம் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதனை தடுப்பதுடன் அவற்றினை இனங்காண்பதன் மூலம் அரசாங்கத்தின் நன்மதிப்பினைப் பாதுகாப்பதற்கு இந்த கண்காணிப்பாளர் நாயகம் அதிகாரமளிக்கப்படுவதுடன் தீவிரமாக செயற்படுதலும் வேண்டும்' என்பதாக அமைந்தது.
ஜனாதிபதியின் முன்மொழிவுகளில் மற்றுமொரு விடயமாக அரசாங்க ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ஆக மீண்டும் குறைக்கப்பட்டமை பெரிதும் பேசப்படுகிறது. ஒய்வுபெறும் வயது எல்லை இதுவரை காலமும் 60ஆகக் காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வயது எல்லையை 65ஆக அதிகரித்திருந்தார்.
இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் காணப்பட்டன. இந்த நிலையில் 60வயது நிரம்பிய அனைத்து அரசாங்க ஊழியர்களும் இவ்வருடம் டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற வேண்டும் என இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்கத் துறையை மறுசீரமைக்கும் யோசனையின் ஓர் அங்கமாகவே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிரவும் தற்போதை எரிபொருள் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க நிறுவனங்களில் மின்சார வாகனங்களின் (எலக்ரிக் வாகனங்கள்) பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முன்மொழிவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடிகளினால், பெரும்பாலா னோர் எதிர்நோக்குகின்ற சிரமங்களை நன்கு அறிந்திருப்பதால், மூலதனச் செலவினத்தினைக் குறைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிகரித்த சலுகையினை வழங்குவதற்கும் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த வகையில், வேலை இழப்பு, விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவியாக மேலதிக மாதாந்தக் கொடுப்பனவினை வழங்குவதற்கு 2022மே முதல் யூலை மாதம் வரை மேலதிகமாக ரூபா 31,000மில்லியனை அரசாங்கம் செலவிட்டுள்ளது.
மேற்குறித்த பாதிப்புகளுக்குட்பட்டவர்கள் மீதான பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் அழுத்தத்தினைக் குறைப்பதற்கு 2022ஆம் ஆண்டில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு இந்நிகழ்ச்சித் திட்டத்தினைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 20,000ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2,500ரூபாவினை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்குவது, போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2022ஆம் ஆண்டில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு குடும்பமொன்றுக்கு 10,000ரூபாவினை வழங்குவது போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் ஜனாதிபதியின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
இதுபோன்ற பல்வேறு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மாற்றங்கள் குறித்தும் இவ்வரவுசெலவு முன்மொழிவில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தவிரவும் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு அனைத்துத் தரப்பினரதும் உதவியை ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை கோரியிருந்தார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வருமாறு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவர் மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார். நாட்டை பிரச்சினைகளிலிருந்து மீட்பதற்கான கூட்டுப்பொறுப்பு அனைத்துத் தரப்பினருக்கும் இருப்பதால் ஒவ்வொருவரும் தமது வகிபாகத்தினை நன்கு உணர்ந்து அதற்கான ஒத்துழைப்பை வழங்குவது காலத்தின் தேவையாகக் கருதப்படுகிறது.
சம்யுக்தன்