வருகிறார் தர்ஜினி | தினகரன் வாரமஞ்சரி

வருகிறார் தர்ஜினி

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கான இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்திருக்கிறார். ஆசியாவின் அதிக உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி இலங்கை அணிக்கு இன்றியமையாதவராக இருந்து வருகிறார்.

இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மாத்திரமன்றி சர்வதேச வலைப்பந்தாட்டத்திலும் மிகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் தர்ஜினி இலங்கை அணியில் இடம்பெற்றிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது. அவர் உலகின் மிகச் சிறந்த சூட்டர் என்ற பெருமைக்கும் உரியவர்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை சிங்கப்பூரை 69–50என்ற புள்ளிகளில் வீழ்த்தி சம்பியனானபோதும் அந்த வெற்றிக்கு தர்ஜினியின் பங்களிப்பு மிகப் பெரியது.

தனது அபார ஆக்கிரமிப்பு ஆட்டம் காரணமாக அவர் அந்தத் தொடரின் நாயகியாக விருது வென்றார். அப்போது அவர் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னரே தேசிய அணியில் இணைந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

இந்த ஆண்டு மாலைதீவுகளில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருதினை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பாவான் சனத் ஜயசூரியவுடன், தர்ஜினி சிவலிங்கமும் வென்றது இலங்கை விளையாட்டில் அவரது இடத்தை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி 2020ஆம் ஆண்டு நடப்படவில்லை. அந்தப் போட்டியை தென் கொரியா நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும் கொவிட் பெருந்து தொற்று தடங்கலாகிவிட்டது. இந்த நிலையில் இப்போது மீண்டும் அந்தத் தொடர் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறது.

1985ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவரும் ஆசிய சம்பியன்ஷிப்பில் இதுவரை அதிக கிண்ணங்களை வென்ற அணி என்ற சாதனையையும் இலங்கையே படைத்திருக்கிறது. இலங்கை இதுவரை ஐந்து தடவைகள் சம்பியனாகி இருக்கிறது.

இம்முறை போட்டிகள் செப்டெம்பர் 3ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெறும். 11நாடுகள் பங்கேற்கும் தொடரில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடத்தப்படும். ஏ குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உடன் மோதுகிறது.

தர்ஜினியும் இருப்பதால் இலங்கை இம்முறையும் சம்பியன் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Comments