17 வயது ரமணியின் துயர் மரணம்; மற்றொரு சிறுமியின் மரணமாக மறக்கப்பட்டுவிடுமா? | தினகரன் வாரமஞ்சரி

17 வயது ரமணியின் துயர் மரணம்; மற்றொரு சிறுமியின் மரணமாக மறக்கப்பட்டுவிடுமா?

மஸ்கெலியா மொக்க கீழ்ப்பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 17வயதுடைய ஆர். ரமணி என்ற சிறுமியின் சடலம் கடந்த 21ஆம் திகதி கம்பகஹா நைவல வீதியில் மீட்கப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்காக சென்ற சிறுமியின் சடலம் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுமி வேலைக்காக சென்ற வீடு நாட்டின் பிரபல அரசியல்வாதியொருவரின் உறவினர் வீட்டிலிருந்து மீட்ப்பட்டதாகவும் நீச்சல் தடாகத்தினை சுத்தம் செய்வதற்கு சென்றபோது நீரில் மூழ்கியே குறித்த சிறுமி உயிரிழந்ததாகவும் ஆரம்பத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.   இவ்வாறு வீட்டு வேலைக்காக சென்ற சிறுமி கடந்த ஆறு மாதங்களில் மஸ்கெலியாவில் உள்ள வீட்டுக்கு வரவில்லை என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளன. இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.  

சம்பவ தினத்தன்று இந்த வீட்டில் சிறுமி மாத்திரமே இருந்துள்ளதாகவும், அன்றைய தினம் வர்த்தகரான வீட்டின் உரிமையாளர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருடன் தன் மகனின் றகர் விளையாட்டை பார்வையிடுவதற்காக கொழும்பு சென்றிருந்ததாக தெரிய வந்துள்ளது. 

அன்றைய தினம் மாலை இந்த வீட்டின் விளக்குகள் ஒளிராததன் காரணமாக அயல் வீட்டிலிருந்த வர்த்தகரின் 75வயது மதிக்கத்தக்க தந்தை வீட்டை நோட்டமிட்டபோது இந்தச் சிறுமியின் உடல் நீச்சல் தடாகத்தில் மிதப்பதைக் கண்டிருக்கிறார். உடனே உடலை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். அனுமதிக்கும் போதே அவரின் உயிர் பிரிந்திருந்ததாகவும் நீச்சல் தடாகம் ஐந்து அடி ஆழமுடையது என்றும் சிறுமியி; உயரம் 4அடி எட்டு அங்குலம் என்றும் இவர் இந்த ஆழமான பகுதிக்கு சென்றபோது உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுவதாகவும் தேசிய சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

எது எவ்வாறிருந்த போதிலும் இது இன்று ஊடகங்களினதும் அரசியல் வாதிகளினதும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட இவ்வாறு எமது நாட்டில் எங்கோ ஒரு சிறிமி வீட்டு வேலைக்கு சென்று மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. 

மரணம் சம்பவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிராக போராட்டங்கள் செய்வதும் வீதி நாடகங்கள் போடுவதும், விழிப்புணர்வு ஊட்டுவதும் துண்டு பிரசுரங்கள் வெளியிடுவதும் ஒரு வாடிக்கையான விடயமாக மலையகப் பகுதியில் காணப்படுகின்றன. 

மலையகப் பகுதியில் ஒவ்வொரு சிறுமியின் இறப்பின் போதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் காலப்போக்கில் இவை அனைத்தும் மறைந்து போய்விடும். 

இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எமது நாட்டின் சட்டத்திலோ அல்லது சமூத்தில் உள்ள அரசியல் தலைவர்களிடமோ அல்லது புத்திஜீவிகள் என்று கூறப்படும் அல்லது சமூக ஆர்வலர்கள், குறிப்பாக படித்த சமூகத்திடமோ முறையான வழிநடத்தல்கள் வேலைத்திட்டங்கள் இல்லை என்றே கூற வேண்டும். 

இவ்வாறு வீட்டு வேலைகளுக்கு செல்லும் சிறுமிகள் எவ்வாறானவர்கள் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். குறிப்பாக, மஸ்கெலியா மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அண்மையில் மரணமடைந்த சிறுமி ஆர். ரமணி தரம் 10வரை கல்வி கற்றவர். இவரின் தந்தை ரமணியின் சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார். தாய் இன்னுமொருவரை திருமணம் செய்து கொண்டார். எனவே சிறுமி தனது மாமாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார். ஆறு மாதத்திற்கு முன்னரேயே இந்த வீட்டில் வேலை செய்யச் சென்றிருக்கிறார். இவை அயலவர் சொல்லும் தகவல்கள். இச்சிறுமியின் உறவினர்கள் தகவல்கள் தருவதற்கு மறுப்பதுடன் நடந்து முடிந்துவிட்டது இனி அதைப்பற்றி பேசுவதில் பயனில்லை என்று கைவிரிக்கின்றனராம்.  

மலையகப் பகுதியிலிருந்து பணக்காரர் வீடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் தந்தை அரவணைப்பின்றி தங்களது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிறுமி தரம் 10வரை கல்வி பயின்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடி, கல்வி நிலையில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாகவும்.கற்பதற்கான உதவி கிடைக்காமை போன்ற காரணங்களினால் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.  

அத்தோடு வீட்டு சூழலில் ஏற்பட்ட நெருக்கடிகளும் சிறார்களின் மனதை பெரிய அளவில் பாதிக்கலாம். அது மாத்திரமின்றி, கவனிப்பாரற்ற நிலையும், அன்பு அரவணைப்பின்மையும் இவ்வாறான சிறுவர்கள் வாழ்க்கையில் பிடிப்பின்றி தறிகெட்டுப் போகிறார்கள். இறுதியில் இவர்கள் பாடசாலை கல்வியை இடை நடுவே கைவிட வேண்டியதாகிறது.  

பாடசாலைகளில் பெறுபேறுகளை மாத்திரம் இலக்கு வைத்து கல்வி கற்பித்தல் நடத்தப்படுவதால் பெருமளவு மாணவர்கள் தங்கள் கல்வியை இடை நடுவே கைவிட நேர்கிறது. பொருளாதார வசதி குறைவு காரணமாக ஏனைய மாணவர்களுடன் போட்டி போட்டு படிக்க முடிவதில்லை.  

வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டு திருவிழாவுக்காகவோ அல்லது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்காகவோ வரும்போது இந்த இளைஞர்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிந்து அலைபேசியை வைத்து கொண்டு சுதந்திரமாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாக வெளிக்காட்டும்போது இந்த சிறுவர்கள் கொழும்புக்கு வேலைக்கு போனால் சந்தோஷமாக வாழலாம் என்று கருதத் தொடங்குகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமே. 

பெருந்தோட்டப் பெற்றோர்களில் பலர் கல்வி அறிவு குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை வறுமை சார்ந்தது. இவ்வாறு வறுமையில் வாடும் குடும்பங்களையே இடைத் தரகர்கள் இலக்கு வைக்கிறார்கள். அவர்கள் படும் துயரங்களைக் கண்டு முதலை கண்ணீர் வடிப்பதாக நடித்து இவர்களின் மனதை மாற்றி இந்த சிறுவர்களுக்கு மிகவும் ரம்மியமான சூழலில் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தப்போவதாக கதையளந்து சிறுவர்களை செல்வந்தர்களுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். தாம் எத்தகையோர் வாழும் வீட்டுக்குப் போகிறோம் என்பதை அறியாத அப்பாவி சிறார்கள், அது தவறான வீடாக அமையும்போது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமாகின்றது. 

கொஞ்சம் பின்நோக்கி 2003ஆண்டுக்கு செல்வோம். கொழும்பு மிரிஹான பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று 11வயது சிறுவன் அர்ச்சுனன் லோகநாதன் உயிரிழந்தார். 2004ஆண்டு காலப்பகுதியில் வெலிஓயா பகுதியில் விக்ணேஸ்வரன் கிருஷ்ணவேணி (வயது 16) இதே பிரதேசமான மஸ்கெலியா முள்ளுகாமத்தைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி, ஒரே வீட்டில் வேலை செய்து உயிரிழந்தனர். 

கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டு வேலைக்கு சென்று எரிகாயங்களுடன் மிகவும் மர்மமான முறையில் கடந்த 2021ஜூலை 15திகதி ஜூட்குமார் ஹிசாலினி என்ற சிறுமி உயிரிழந்தார். இதனைக் கேள்விப்பட்டு முழு நாடே கொந்தளித்தது. இதற்கு நீதி கோரி நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன. 

ஜூட்குமார் ஹிசாலினிக்கு சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றன. பல பிரதேசங்களில் பேரணிகள் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் வாய்கிழிய அறிக்கை விட்டனர். எனினும் உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.  

சிறுவர்கள் வீட்டு வேலைக்கு செல்வதைத் தடுப்பதற்கு மூன்று தலைமுறைகளாக அரசியல் செய்பவர்கள் இவர்களின் வாழ்க்கையினை ஒளிமயமாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? வறுமை மிக்க குடும்பத்து மாணவர்களுக்கு சிறு வயது முதல் சிறந்த கல்வியும் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? 

பெருந்தொகையான சிறுவர்கள் பசி பட்டினியுடனும் சத்துணவு குறைபாட்டுடனும் பொருத்தமற்ற சூழலிலும் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் கூட இத்தகைய குடும்பங்களுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு எந்தவித வேலைத் திட்டமும் இல்லை. தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி. கோயில்களுக்கு நாட்காலி, செம்பு, சட்டி பானை, சேகண்டி, சங்கு சக்கரம் என்று வழங்கி இந்த மக்களை மாய வலைக்குள் வீழ்த்தி தலைமுறை தலைமுறையாக ஏமாற்றி வருகிறார்கள். 

ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி ஊடக சந்திப்புக்களை நடத்தி அதனை அரசியல் லாபம் தேடும் நிலைமையே காணப்படுகின்றன. 

இந்த சம்பவங்கள் முற்றாக நிறுத்துவதற்கோ, அல்லது கல்வியினை மேம்படுத்துவதற்கோ, அல்லது. பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கோ எந்த ஒரு திட்டமும் மலையக அரசியல் தலைவர்கள் முன்வைக்காமையும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதற்கு பெரும் காரணிகளாக அமைந்துள்ளன. 

இது இவ்வாறிருக்க எமது நாட்டில் சிறுவர் பாதுகாப்புக்கு என்று அமைச்சு உள்ளது. சிறுவர் பாதுகாப்பதற்காக எத்தனையோ அமைப்புகள் உள்ளன. எனினும் சிறுவர்களை வேலைககு அமர்த்தும் செல்வந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  

உயிரிழந்த எந்த ஒரு சிறுமிக்காவது நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்.  

இந்த நாட்டில் மலையகம் மாத்திரமே வறுமையில் வாடும் பிரதேசமல்ல. ஏனைய பிரதேசங்களிலும் வறுமை நிலை காணப்படவே செய்கிறது.

எனினும் அப்பிரதேசங்களில் இவ்வாறு அடிக்கடி சம்பவங்கள் பதிவாவதில்லை. அப்படி என்றால் இதற்கு பிரதான காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியதே. 

அதே நேரம் படித்தவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள், அவர்களிடமிருந்து நீதி நேர்மையினை எதிர்பார்க்கலாம் என்றொரு போலியான நம்பிக்கை எம்மிடையே உண்டு. ஆனால் அது தவறு என்பதை முன் உதாரணங்கள் மூலம் இப்போது புரிந்து கொண்டிருக்கிறோம். 

எது எவ்வாறாயினும் பிள்ளைகள் தொடர்பான பொறுப்புணர்வு பெற்றோர்களுக்கே அதிகமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறும் போது ஒவ்வொரு பெற்றோரும் அந்த பிள்ளையின் வாழ்க்கை தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும்.  

இதற்கான விழிப்புணர்வு சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தோடு மக்கள் பிரதிநிதிகளும் சமூக அக்கறை கொண்டவர்களும் பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார மேம்பாடு சட்டத்திட்டங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டிய அவசியத்தை ரமணியின் துயர்மிக்க மரணம் மறுபடியும் உணர்த்தியுள்ளது.   

மலைவாஞ்ஞன்   
(
படங்கள் : ஹட்டன் விசேட நிருபர்) 

 

Comments