அமைச்சர் டக்ளஸ் விடுத்த நல்லிணக்க அறைகூவல்! | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் டக்ளஸ் விடுத்த நல்லிணக்க அறைகூவல்!

இலங்கைத் தேசம் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது முதல், கடந்த சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். சுதந்திர இலங்கையில் தமிழினத்தின் சாத்விகப் போராட்டம் சுமார் அரைவாசிக் காலம் நீடித்தது. அதன் பின்னர் மீதியான காலப்பகுதியில் மூன்று தசாப்த காலம் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழினத்தின் அத்தனை போராட்டங்களும் மௌனித்துப் போய் விட்டன. இருவிதமான போராட்டங்களாலும் எதுவித நன்மையும் விளையவில்லையென்பதே உண்மை. அழிவுகள் மட்டுமே எஞ்சின. இதற்கான காரணம் பெரும்பான்மையினத்தின் இனவாதப் பிடிவாதம் மாத்திரமல்ல. தமிழினத்தின் அரசியல் தலைமைகளுக்கிடையில் நல்லிணக்கமும், ஒற்றுமையும் இல்லையென்பதுதான் அரசியல் போராட்டங்களின் தோல்விகளுக்கான பிரதான காரணம்!

ஆயுதப் போராட்டம் வேருடன் ஒழிக்கப்பட்டு விட்டதென்பதை தமிழ்த் தரப்பிலுள்ள பிரிவினைவாத எண்ணம் கொண்ட சிறுபிரிவினர் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். சாத்விகப் போராட்டமென்பதன் பேரில் மீண்டும் கண்ணுக்கெட்டாத தொலைவை நோக்கி வீண்பயணம் தொடங்குவதற்கு தமிழ் மக்களுக்கு இனிமேல் திராணி கிடையாதென்பதையும் ஒட்டுமொத்த தமிழ்த்தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறென்றால், தமிழினம் மண்டியிட்டபடி, அரசியல் அநாதைகளாக வாழவே தயாராக வேண்டுமென்று அர்த்தம் கொள்ளலாகாது!

‘ஒற்றுமையே பலம்’ என்பதை தமிழ் அரசியல் தரப்புகள் அத்தனையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் கோட்பாட்டுரீதியில் தங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டுமென்பதே இங்கு முக்கியம். உலக வரலாற்றை நோக்குவோமானால், ஒற்றுமையினாலேயே பெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையின் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருக்கும் பகிரங்க அறைகூவலானது, தமிழ் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கின்றது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டுக்கு வந்து இடைக்கால நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தத்தை ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் தரப்புகள் இனிமேலும் முரண்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்காமல் ஒன்றுபட வேண்டுமென்றும், இந்த முயற்சிக்காக எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாராக இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ‘கடந்த கால தவறுகளுக்கான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு இனிமேலாவது ஒற்றுமையுடன் பயணிப்போம்’ என்பதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அழைப்பின் சாராம்சம்.

தமிழினத்தின் அரசியல் உரிமைகள் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரிசனையின் வெளிப்பாடு தற்போது தென்படுவதால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பு இவ்வேளையில் பொருத்தமானதாகும். இன்றைய சாதகமான அரசியல் சூழலை தமிழ் அரசியல் தரப்புகள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதே விவேகமானதாக அமையும்.

Comments