மீண்டும் ஆரம்பமாகும் சம்பளப் போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் ஆரம்பமாகும் சம்பளப் போராட்டம்!

தற்போதைய நிலையில் 1000ரூபா சம்பளம் போதுமானதல்ல எனும் கருத்தியல் மேலோங்கி வருகின்றது. 1000ரூபா சம்பள அதிகரிப்பு கோரிய இ.தொ.காவே இப்போது குறைந்தபட்சம்2500ரூபாவாவது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கொடுக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது. ஆயினும் இதுவரை இ.தொ.கா. புதிய சம்பளத் தொகையை நிர்ணயிக்கவில்லை என்கிறார் அதன்தலைவர் செந்தில் தொண்டமான் 

புதிய சம்பள அதிகரிப்பு சம்பந்தமான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி தொழில் திணைக்களத்தில் இடம் பெறவுள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறுகிறார் 

தற்போதைய பொருளாதார நெருக்கடி முக்கியமானதொரு கேள்வியை எழுப்பியுள்ளது. சம்பள அதிகரிப்பா? அல்லது மேலதிக வருமானத்துக்கான முயற்சியாண்மையா? தொழில்சார் சமூகம் என்னும் ரீதியில் வேதனம் பெறும் பிரிவினர் இந்த தோட்டத் தொழிலாளர்கள். அந்த வேதனம் வாழ்க்கையை நடாத்திச் செல்ல போதாவிடத்து அதற்கான போராட்டங்களை நடாத்த உரிமையுள்ளவர்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இன்று நாளாந்த ஊதியமாக 1000ரூபா நிர்ணயமாகியுள்ளது.  

சம்பள நிர்ணய சபையின் தலையீட்டின் பேரில் இச்சம்பள அதிகரிப்பு சாத்தியமானது.  இதற்கெதிராக 20பெருந்தோட்டக் கம்பனிகள் தடையுத்தரவு வேண்டி நீதிமன்றம் சென்றன. ஒரு வருடம் 4மாதங்களுக்கு பின் இப்போது அந்த வழக்கின் முடிவு தொழிலாளர்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இனி 1000ரூபா சம்பளத்தை வழங்கியாக வேண்டிய கட்டாயம் கம்பனி தரப்புக்கு. இதன்படி தொழிலாளர்கள் மாதாந்தம் 30ஆயிரம் ரூபா சம்பளம் பெறுவதில் தடையில்லை என சிலர் சொல்கிறார்கள். ஆனால் வழங்கப்படும் வேலை நாட்களைப் பொறுத்தே கிடைக்கும் சம்பளத் தொகை தீர்மானமாகும் என்பதை அந்தச் சிலர் மறந்து விடுகிறார்கள். 

குறைந்தது மாதம் 25நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதில் தோட்ட நிர்வாகங்கள் உடன்பாடு கொண்டுள்ளன.  இது கூட்டு ஒப்பந்தத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஒரு விடயம். எனினும் காலநிலை மாற்றத்தையொட்டி விளைச்சளைக் கொடுப்பதுதான் தேயிலை, இறப்பர் துறைகள். குறிப்பாக ஆகக்கூடிய மழைக்காலம், கடும் வெயில், பனி போன்ற இயற்கை நிகழ்வுகள் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான காலகட்டங்களில் மாதாந்தம் 20நாட்கள் வேலை கிடைப்பதே பெரிய காரியம். எனவேதான் தேயிலைப் பயிர் நிலையான விளைச்சலை வரையறை செய்ய முடியாத ஒரு துறையாகக் காணப்படுகின்றது.  

இதனைக் காரணம் காட்டியே இத்தொழிலாளர்களுக்கு கம்பனிகள் மாதச் சம்பளம் வழங்க முன்வருவதில்லை.

இதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே பலரும் மாதச் சம்பளம் பற்றி குரல் எழுப்புவது கிடையாது. உற்பத்திச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் மாதச் சம்பள முறைமை சவாலை ஏற்படுத்தும் என்பதில் சிலர் இணக்கம் கொண்டுள்ளார்கள். நிர்வாக ரீதியில் இழுபறி நிலைமை தோற்றுவிக்கப்படும் என்பதால் இந்த மாதச் சம்பள விவகாரம் மறக்கப்பட்ட விடயமாக உள்ளது. 

ஆயினும் சட்டப்பிரகாரம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நாட் சம்பளத்தை நியாயப்படி வழங்கியாக வேண்டிய கடப்பாடு கம்பனி தரப்புக்கு இருக்கின்றது.

அதை அவர்கள் முறையாக செயற்படுத்தாத காரணத்தாலே பிரச்சினைகள் உருவாகின்றன. இதுவரை வேலை நாட்களை குறைப்பதன் மூலமும் மேலதிக கொழுந்து பறிப்பதற்கான கொடுப்பனவை கவ்வாத்து செய்வதன் மூலமும் தொழிலாளர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது போல் தோட்ட நிர்வாகங்கள் நடந்து கொள்வதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். இவ்வாறான நடவடிக்கை களால் 1000ரூபா சம்பள உயர்வின் சாதகத் தன்மையை உரிய முறையில் அனுபவிக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது. 

தவிர தற்போதைய நிலையில் 1000ரூபா சம்பளம் போதுமானதல்ல. என்னும் கருத்தியல் மேலோங்கி வருகின்றது. 1000ரூபா சம்பள அதிகரிப்பு கோரிய இ.தொ.காவே இப்போது குறைந்தபட்சம் 2500ரூபாவாவது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கொடுக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது.   ஆயினும் இதுவரை இ.தொ.கா. புதிய சம்பளத் தொகையை நிர்ணயிக்கவில்லை என்கிறார் அதன் தலைவர் செந்தில் தொண்டமான். இதற்காக சம்பள நிர்ணய சபையின் உதவியை நாடப் போவதாக இ.தொ.கா. பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்.                                                  

ஆக, சம்பள சமாச்சாரம் இலேசில் முடிவுக்கு வரப்போவதில்லை என்பது என்பது மட்டும் புரிகின்றது. சம்பள அதிகரிப்பு இப்படி சடுகுடு ஆடும் அதேநேரம் அதற்கு மாற்று ஏதாவது இருக்கின்றதா என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது. அதாவது மேலதிக வருமானத்துக்கான வழிதேடல் அவசியமாகின்றது.

ஏலவே மரக்கறி விவசாயம், பால் உற்பத்தி போன்ற ஆதாயம் தேடும் முயற்சிகளில் தோட்ட மக்கள் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள். சிலர் முழுநேர தொழிலாகவும் சிலர் பகுதிநேர முயற்சியாகவும் இறங்கியுள்ளார்கள். ஆனால் இதன்மூலம் முழுமையான பலனை அடைய முடியாதுள்ளது. ஏனெனில் யானைப் பசிக்கு சோளப் பொரி போல இவர்களது உழைப்பின் வலிமைக்கு உரிய காணி வசதி கிடைப்பதில்லை.

நிலம் கிடைத்தால் விவசாயத் தொழில் மூலம் நாட்டுக்கு மேலும் பாரிய பங்களிப்பினை வழங்க இவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.

இதேவேளை தற்போது விவசாய முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தோட்டக் காணிகளைக் சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் சில தோட்ட நிர்வாகங்கள் முன்னிற்கின்றன. அதற்காக பிரதேச செயலகங்களின் உதவியினை பெறவும் இந்த நிர்வாகங்கள் முனைகின்றன. இதன் பின்னணியில் தோட்ட தரிசு காணிகள் விவசாய முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் தாம் ஓரங்கட்டப்படலாம் என்னும் அச்சம் தொழிலாளா்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

ஏற்கனவே பெருந்தோட்டக் காணிகள் காணியற்ற கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதை மக்கள் மறக்கவில்லை.

அதே இனவாத அரசியல் சக்திகள் அதே அதிகாரிகள் தான் இனியும் இவ்விவகாரத்தில் தமது அதிகாரத்தை பயன்படுத்தப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக தரிசு காணிகள் விநியோகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாயின் முறையான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்படுவது முக்கியம். குறிப்பாக தமது விவசாய முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான உள்ளீடு கட்டாயம் தேவையாகின்றது. ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல சங்கிலித் தொடர் முயற்சிகள் அவசியமாகின்றன. உழைப்பை மூலதனமாக வைக்க தொழிலாளர்கள் தயாராகியிருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான விளை நிலங்கள், உபகரணங்கள், விதைகள், பசளை இவற்றுடன் தேவையான பயிர் உற்பத்தி பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டியுள்ளது. மரக்கறி பயிர்ச் செய்கை, வளர்ப்பு, பாலுற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான பட்டிகள், கறவை மாடுகளை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி, புல் நிலங்கள் என்று பல சங்கதிகள் இருக்கின்றன.

இத்துடன் உற்பத்தியாளர்களுக்கும் அது தொடர்பான சேர்க்கையாளர், சில்லறை மொத்த விற்பனையாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு தொடர்பாடல் அத்தியாவசியம். கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காளாண் உற்பத்தி உள்ளிட்ட பல முயற்சிகளில் சிலர் ஏற்கனவே ஈடுபட்டுள்ள போதும் அதை விரிவாக்கம் செய்து கொள்ள வழி இல்லாது குறுகிய வட்டத்துக்குள்ளேயே இயங்க வேண்டியுள்ளதாக கவலைத் தெரிவிக்கின்றார்கள். அதேநேரம் தமது உற்பத்தியை விநியோகம் செய்ய உரிய சந்தை வாய்ப்பைத் தேடிக் கொள்வதில் கால விரயம், பொருள் இழப்பு ஏற்படுவது ஒரு குந்தகமே. இவ்வாறன பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மரக்கறி சேர்க்கையாளர் நேரில்வந்து மலிவான விலைக்கு கொள்வனவு செய்ய முற்படுகின்றாா்கள்.

இதேவேளை விவசாயத்தில் செய்யும் முதலீடு திரும்பக் கிடைக்காத போது எந்தவொரு காப்புறுதிக்கும் வழி இல்லாததால் கையைச் சுட்டுக் கொள்ளும் அநுபவமும் பலருக்கும் உண்டு. கிராமத்தில் வாழ்பவர்களைப் போல காணி உரிமத்தை அடகு வைத்துக் கடன்பெற முடியாது. இதனால் வங்கிக் கடனுக்கு வழியே இல்லை. எனவேதான் பெருந்தோட்டத்துறை தரிசு காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் தோட்ட மக்களுக்கென விசேட வேலைத் திட்டங்கள் அவசியமாகின்றன. இவை ஆறப்போட்டு விடக்கூடிய காரியமல்ல. நாட்டின் நலனுக்கும் பெருந்தோட்ட மக்களின் குடும்ப நலனுக்கும் இது அவசரமான சங்கதி. புதிய சம்பள அதிகரிப்பு சம்பந்தமான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி தொழில் திணைக்களத்தில் இடம் பெறவுள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறுகிறார். சம்பள பிரச்சினை அப்படியே நடக்கட்டும். சம்பள நிர்ணய சபை அங்கீகரித்தாலும் மீண்டும் நீதிமன்றம் என்று கம்பனி தரப்பு ஏறி இறங்கலாம். அதனால் பெருந்தோட்டப் பிரதேசங்களில் விவசாய முயற்சிகளை முடுக்கி விடுவதே புத்திசாலித்தனம்.

பன். பாலா

Comments