சட்டத் திருத்தங்கள் செய்யப்படுவதன் மூலம் காணி உரிமை சாத்தியமே! | தினகரன் வாரமஞ்சரி

சட்டத் திருத்தங்கள் செய்யப்படுவதன் மூலம் காணி உரிமை சாத்தியமே!

'இலங்கைப் பிரஜைகளாக இருந்தும், அத்தோடு சட்டங்கள் ஊடாக பிரஜைகளின் வீட்டுக்கானகாணியுரிமையை உறுதி  செய்வதற்கான ஏற்பாடுகள் இருந்தும் அவ்வுரிமையை மலையக மக்களுக்கு உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்ற நிலையில் அவற்றை களைவதற்கு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' 

சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்களால் மலையக மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்களும், ஒப்பந்தங்களும் இம்மக்களின் குடியுரிமை, வாக்குரிமை மற்றும் சனத்தொகை குறைப்பு போன்ற விடயங்களால் இவர்கள் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தொடர்ந்து காணி உரிமை மறுக்கப்பட்ட சமூகமாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டு அதே நிலையில் வேறு தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். உதாரணமாக, கல்லோயா, மகாவலி அபிவிருத்தி திட்டம், கீழ் கொத்மலை, மேல் கொத்மலை போன்ற திட்டங்களாகும்.  

இலங்கையில் 1935ம் ஆண்டு 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டதை அன்றைய இடதுசாரி தலைவர் கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்க அரச சபையில் குறிப்பிட்டார்.  

இங்கு 600,000தொழிலாளர்கள் (இந்தியத் தமிழர்கள்) இருக்கின்றார்கள்் ஆனால் இவர்களில் ஒருவருக்கேனும் ஒரு அங்குலம் நிலமேனும் உடைமையில்லை. 300,000இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இந்தியாவோடு தொடர்பு முற்றாகவே இல்லை. அவர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவே பேசுவதில்லை” என சுட்டிகாட்டினார்.  

அத்தோடு மலையக மக்களுக்கு காணி வழங்குவதற்கு தடையாக உள்ள சில சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தும்போது அது இன்னும் முடிவில்லாத அல்லது தீர்க்கப்படாத விடயமாக உள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  

* மலையக மக்கள் கூலித் தொழிலாளர்களாக அழைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு காணியுடனான வீட்டுரிமையை வழங்க பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் முன்வரவில்லை. 

* பிரித்தானிய காலனிய அரசாங்கம் பெருந்தோட்ட உடமையாளர்களை சார்ந்திருந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடனான வீட்டுரிமையை வழங்க தலையீடு செய்யவில்லை. 

* 1942ஆம் ஆண்டு வரை பெருந்தோட்ட மக்களின் குடும்பங்களுக்கான வீட்டுரிமை உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை. 

* 1942ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பமொன்று ஒரு லயன் அறையை பெருந்தோட்ட உடமையாளர்கள் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 

* 1970களின் ஆரம்பம் வரை பெருந்தோட்டக் காணிகள் ஏக பெரும்பான்மை தனியாருக்கு சொந்தமாகவே காணப்பட்டன. 

* 1975ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டக் காணிகளும் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புக் காணிகளும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாகின. 

* 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1980வரை பெருந்தோட்டக் காணிகளும் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புக் காணிகளும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சில பொது கூட்டுத்தாபனங்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டன. 

* 1980ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பெருந்தோட்டக் காணிகளும் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புக் காணிகளும் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்வகிப்பதற்காகவும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு ஒப்படைப்பும் செய்யப்பட்டன. 

* 1990களின் ஆரம்பத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்வகித்து வந்த மற்றும் தோட்ட அபிவிருத்தி சபைக்கு ஒப்படைப்பும் செய்யப்பட்டு அச் சபை நிர்வகித்து வந்த பெருந்தோட்டக் காணிகளும் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புக் காணிகளும் 21பொதுக் கம்பனிகளுக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டன. 

* 1995கள் தொடக்கம் ஏழு பேர்ச்சஸ் காணித் துண்டில் வீடுகள் வீட்டுக்கடன் அடிப்டையில் கட்டிக்கொள்ளப்பட்ட போதும் அல்லது அரச அல்லது வெளிநாட்டு உதவியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட போதும் அக்காணிகள் தொடர்ந்தும் அரசுக்கு சொந்தமான காணிகளாகவே உள்ளன. 

* பெருந்தோட்டங்களில் வீடமைப்பு அதிகார சபையினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு உரிய காணி உரித்தாவனம் வழங்கப்பட்டுள்ளன. 

* பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் பெருந்தோட்டக் காணிகளில் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது அரச காணியை மீட்டல் என்ற நீதிமன்ற நடவடிக்கை மூலம் மற்றும் தண்டனைச் சடடக்கோவையின் குற்றமுறையான அத்துமீறல் குற்றத்தின் மூலம் அம்மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தோட்ட நிர்வாகங்களினால் எடுக்கப்படுகிறது.  

* பெருந்தோட்டக் காணிகள் மற்றும் மக்கள் வாழ்ந்து வரும் காணிகள் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமாக ஏற்றுக்கொண்டுள்ள போதும் அவை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமையினாலும் அவற்றை அக்கம்பனிகளிடம் இருந்து அவற்றின் அனுமதியின்றி மீளப்பெறுவதில் பாரிய சட்டத் தடைகள் காணப்படுகின்றன.  

* நடைமுறையில் நிலவும் சட்டங்கள் பிரஜைகள் என்ற வகையில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமையை உறுதி செய்வதில் தடைகளை கொண்டுள்ள நிலையில் அவற்றை களைவதற்கு புதிய சட்டங்களை நிறைவேற்ற அத்துடன் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய ஒப்பந்தங்களை அல்லது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரச தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

இலங்கைப் பிரஜைகளாக இருந்தும், அத்தோடு சட்டங்கள் ஊடாக பிரஜைகளின் வீட்டுக்கான காணியுரிமையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இருந்தும் அவ்வுரிமையை மலையக மக்களுக்கு உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்ற நிலையில் அவற்றை களைவதற்கு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனுௗடாக மலையக மக்கள் காணி, மற்றும் வீட்டுரிமை பிரச்சினையில் பராபட்சமாக தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றனர்.  

இவ்வாறான நிலையில் மலையக மக்களது காணி வீட்டுரிமையை வென்றெடுப்பதற்காகவே மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் (MPPLR) கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் அனைத்து மாகாணங்களில் வாழும் மலையக மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கல்வியளாளர்கள், தொழிற்சங்கங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோர் ஒன்றிணைந்து மலையக மக்களின் உாிமைகளுக்காக செயற்படும் ஒரு இயக்கத்தினை கட்டியெழுப்பி காணி மற்றும் வீட்டுரிமைக்காக குரல்கொடுத்து வருகின்றது. MPPLR கொள்கை ாீதியான கலந்துரையாடல்களை கடந்தகால அரசாங்கங்களுடன் அமைச்சு மட்டத்திலும், 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தல் வேட்பாளர்களிடமும் மற்றும் 2020ஆண்டு பொதுத் தோ்தல் வேட்பாளர்களிடமும் முன்னெடுத்துள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதுடன் காணி உாிமையை உறுதிப்படுத்தும் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மலையக மக்களுக்கான நில உரிமையை உறுதிசெய்து கொடுத்தல் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியின் மூலமாக கட்டியெழுப்பப்படும் வாழ்வாதார மார்க்கங்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அந்த மக்களின் உரிமைகளை மட்டுமன்றி நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தீர்வுத்திட்டத்தை நாம் முன்வைத்து செயற்படுகின்றோம். எனவே வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மேலும் கூர்மையாக்கி மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் மிகவும் அவசியம்.  

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே 1946ம் ஆண்டு ஜுன் மாதம் 21ம் திகதியிலிருந்து ஜுலை 9ம் திகதி வரை நடந்த கேகாலை பகுதியிலுள்ள உருளவள்ளிப் போராட்டமே மலையக மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய முதல் காணி உரிமை போராட்டமாக வரலாற்றில் பதியப்படுகின்றது.  

இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருந்த 400ஏக்கர் காணி பறிக்கப்பட்டு வெளியார் குடியேற்றத் திட்டத்திற்காக வழங்கப்பட்டபோது இலங்கை வாழ் இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென்று இலங்கை இந்திய காங்கிரஸ் தலைமையில் கேகாலை, களனி வெளி, ஹட்டன் போன்ற பகுதிகளில் 125000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து போராடியிருந்தமை தற்போதைய காணி உரிமை போராட்டங்களுக்கு மிகவும் முன்னுதாரணமாகும். 

மலையக மக்களுக்கான காணி உாிமைக்கான போராட்டங்களும், அழுத்தங்களும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டாலும் இதுவரை இவ்விடயம் சாதகமற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.  

எனவே தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இவ்விடயம் பேசு பொருளாக உருவாக வேண்டிய தேவை தற்போது காணப்படுவதுடன், தொடர்ந்து மலையக மக்களின் காணி உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நேச சக்திகளும் ஒன்றிணைத்து குரல் கொடுப்பதற்காக இந்நாட்டில் நிலமற்றோருக்கான நிலம் தொடர்பாக ஒரு தேசிய தினத்தினைப் பிரகடனப்படுத்த வேண்டியது அவசியம்.  

இதன் அடிப்படையில் நிலமற்றோருக்கு நிலம் (Land for the landless) என்ற தொனிப் பொருளுடன் மலையக மக்களால் தன்னெழுச்சியாக முதலில் முன்னெடுக்கப்பட்ட உருளவள்ளி தோட்ட போராட்டம் தொடங்கப்பட்ட ஜுன் 21ஆம் திகதியை 'காணி தினமாக' இவ்வியக்கம் முன்மொழிந்து இதனை கடந்த 21.06.2022அட்டன் மாநகரில் பாரிய மக்கள் அணிதிரல்வுடன் அங்குராப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

எமது கோரிக்கைகள் சாதகமாக நடைபெறுவதற்காக சில முன்னெடுப்புக்கள் பற்றிய முன்மொழிவுகளை  பரிந்துரைக்க மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் முனைகின்றது. 

01. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றுள்ள காணிகள் தொடர்பில் மேற்கொள்ள வேன்டிய முக்கியமான செயற்பாடுகள்.  

1.பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றுள்ள அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) பெருந்தோட்டக் காணிகளை காணி கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் கையகப்படுப்படுத்தி அவற்றினை அரசக் காணிகளாக பிரகடனப்படுத்தி அரச காணிகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் சுதந்திர அளிப்புகளாக ஜனாதிபதியினால் மலையக மக்களின் வதிவிடத்திற்காக வழங்கப்பட முடியும்.  

2. அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்துள்ள குத்தகை ஒப்பந்தத்தில் மலையக மக்களின் குடும்பங்களுக்கு குடியிருப்பு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக காணி வழங்குவதற்கு ஏற்ற வகையில் திருத்தத்தை செய்து அக்காணிகளை அக் கூட்டுத்தாபனங்களிடமிருந்து மீள காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பெற்று விற்பனை உறுதி மூலம் அல்லது காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியினால் அளிப்புகள் மூலம் மலையக மக்களுக்கு வழங்க முடியும்.  

3. தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் நிர்வகிக்கும் காணிகளை காணி கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவ் வதிகார சபை பெற்று வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி காணி உறுதிகளை வழங்க முடியும். சிறு தனியார் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருக்கும் மலையக மக்களின் காணி, வீட்டுரிமையை உறுதி செய்ய தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டத்தின் கீழான வீட்டுரிமைத் திட்டமே ஏற்புடையதாகும்.  

4. காணி சீர்த்திருத்தச் சட்டத்திற்கு விசேட திருத்தமொன்றை செய்வதன் மூலம் (பிராந்திய கம்பனிகள் உடன்படும் போது இதனை இலகுவாக செய்யமுடியும். உடன்பாடு இல்லாத போது அவ்விசேட சட்டத்தின் நோக்கங்களில் பிரிவு 3(3) (ஆ) அடிப்படையில் மலையக மக்களுக்கு காணி வழங்குவதன் நியாயப்பாடு அவ்விசேட சட்டத்தில் துல்லியமாக வெளிப்படுத்தப்படுமாயின் பிராந்திய கம்பனிகள் அச்சட்டம் தமது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கும் வாதங்ளை முறியடிக்க ஏதுவாக இருக்கும்) மலையக மக்களின் குடியிருப்பு பிரதேசத்தை வரையறுப்பதற்கு குடியிருப்பு காணிகள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட முடியும். அத்தோடு அவ்வாறு ஒதுக்கப்பட்ட காணியில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழு விற்பனை உறுதி மூலம் அல்லது காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியினால் அளிப்புகள் மூலம் மலையக மக்களுக்கு வழங்க முடியும். 

02. அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் ஏனைய கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் செய்யப்பட வேண்டியது. 

5. அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) காணிகளின் மலையக மக்களின் குடும்பங்களுக்கு குடியிருப்பு மற்றும் விவசாயத்திற்கு காணி வழங்குவதற்கு ஏற்றக் காணிகளை மீள காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு பெற்று விற்பனை உறுதி மூலம் அல்லது காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியினால் அளிப்புகள் மூலம் மலையக மக்களுக்கு வழங்க முடியும். தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்திற்கு சொந்தமான காணிகள் அரச காணிகள் தொடர்பிலும் இதே நடைமுறையை பின்பற்ற முடியும்.  

6. பெருந்தோட்டக் காணிகள் தொடர்பாக (பிராந்திய கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் நிர்வகிக்கும் காணிகள் இரண்டும் உள்ளடங்கும் வகையில்) தனிச் சட்டமொன்றை கொண்டுவந்து அச்சட்டத்தினுௗடாக மலையக மக்களின் குடியிருப்பு பிரதேசத்தை வரையறுப்பதற்கு குடியிருப்பு காணிகள் மற்றும் விவசாயப் பயிர்ச்செய்கை காணிகள் பிரிக்கப்பட்டு குடியிருப்பு காணிகள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு அக்காணிகளில் இருந்து காணி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் அளிப்புகளைச் செய்யக்கூடிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.  

மேற்குறித்த நடைமுறைகளில், பிரயோகம் மற்றும் நடைமுறைச் சாத்தியத்தன்மை என்ற விடயத்தில், அவற்றுக்கே உரித்தான பலம் பலவீனங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏற்புடைய ஒன்றை (6ஆவது பரிந்துரையை) அல்லது சிலவற்றை பயன்படுத்தி மலையக மக்களுக்கு வீட்டுக்கான காணி உரிமையையும் விவசாயத்துக்கான காணியுரிமையையும் சட்ட ரீதியில் உறுதி செய்வதற்கான சட்ட அடித்தளத்தை வழங்க முடியும் என சட்டம் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள குழுவினர் தமது முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.  

எஸ்.டி. கணேசலிங்கம் J.P
பிரதான ஏற்பாட்டாளர், 
மலையக மக்களின் காணி
உரிமைக்கான இயக்கம்.  

Comments