புலம்பெயர் சமூகமும் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர் சமூகமும் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்

புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசு எடுத்த ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகும். எது நடைபெற வேண்டும் என இவ்வளவு காலமாக உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்களோ அதை ஜனாதிபதி செய்திருக்கிறார்.

தன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்லாட்சியின் போது மறைந்த மங்கள சமரவீர உலகத் தமிழ் அமைப்புகளை இலங்கைக்கு வரவழைத்து பேசப்போகிறேன் என்றும், அவர்களுடன் அரசு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிர்த்தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர். வழமை போலவே, நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்பதாக இனவாத ரீதியான கோஷங்கள் எழுப்பப்படவே மங்கள சமரவீர அம் முயற்சியை கைவிட நேர்ந்தது. புலம் பெயர்த் தமிழ்ச் சமூகத்துடன் அப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அதை பொருளாதார ரீதியாக அணுகியிருந்தால் இன்றைய மோசமான நிலையை பெருமளவில் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். தற்போது 316தனி நபர்கள் மற்றும் 6நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டிருப்பதற்கு பரந்த அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லையாயினும் புலி இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா? என்ற கேள்வியை சிங்கள தீவிரவாத அமைப்புகள் எழுப்பவே செய்யும். ஏனெனில் இதில் குளிர்காயக்கூடிய ஒரு அரசியல் இருக்கவே செல்கிறது.

எனினும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் படியே இந்தத் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீதான தடை அகற்றப்பட்டுள்ளது என்பதும் தடை செய்யப்பட்டிருந்த 577தனி நபர்கள் மற்றும் 18அமைப்புகளில் பாதுகாப்பானவை எனத் தீர்மானிக்கப்பட்ட 316நபர்கள் மற்றும் ஆறு அமைப்புகள் மீதான தடையே தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

புலம் பெயர்த் தமிழ்ச் சமூகம் சக்தி வாய்ந்த ஒரு பிரிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந் நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் ஆணி வேர் இலங்கையிலேயே பதிந்துள்ளது. தற்காலிக காரணங்களின் பேரில் அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கையைத் தான் தாய் நாடாகக் கருதுகிறார்கள். தொடர்ந்து இலங்கையுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே இப் புலம்பெயர்த் தமிழர்களை பழைய காரணங்களைச் சொல்லி ஒதுக்கி வைக்க முனையாமல் புதிய காண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம். அப் புதிய கண்ணோட்டம் தான் தற்போது தடை நீக்கமாக வெளிப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழ்ச் சமூகம் இலங்கையின் சொத்தாக இருக்கும் போது அதை கௌரவித்து பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது.

புலம்பெயர்த் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைக்கும் ஒரு முயற்சியே இத் தடை நீக்கம் என்று தரப்படும் வியாக்கியானம் சரியானது அல்ல. புலம் பெயர்த்தமிழர்களின் தாய்நாடு இலங்கை. அவர்களின் சொத்துகள் மட்டுமின்றி உறவினர்களும் இலங்கையில் தான் உள்ளனர். இவர்களை தாய்நாடு அரவணைப்பதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது.

இந்தியாவைத் தாய் நாடாகக் கொண்ட உலகெங்கும் வாழும் இந்தியர்களை ஒன்றுபடுத்த ஒரு உலகளாவிய அமைப்பு இயங்கி வருகிறது. இவர்களுக்கு இந்தியா குடியுரிமையை அளித்துள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறிய இந்தியர்களின் வாரிசுகளை இந்தியாவுடன் இணைக்கும் ஒரு முற்சியே இது. இதன் கீழ் வாக்களிக்கும் உரிமையைத் தவிர அனைத்து உரிமைகளையும் இவர்களுக்கு இந்தியா வழங்குகிறது.

புலம்பெயர்த் தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களில் ஒரு பிரிவினருக்கு இலங்கை அரசு தடை விலக்கி இருப்பதை மீள் அரவணைப்பாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அமைச்சினால் தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புகள் இதன் மூலம் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணலாம். இது பல் பரிமாணங்களைக் கொண்ட உறவாக மேம்படும் என நம்பலாம். இலங்கை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

Comments