நாட்டின் மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கமே சரியான மருந்து! | தினகரன் வாரமஞ்சரி

நாட்டின் மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கமே சரியான மருந்து!

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் சந்திப்பு

'நாடு தற்பொழுதுஎதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கம் சரியான ஒரு மருந்தாக இருக்கும். இதற்கு அனைவரும் இதயசுத்தியுடன் ஒன்றிணைவது அத்தியாவசியமாகும்' என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கதெரிவித்தார். நாட்டின் தற்போதையநிலைவரம் மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கே: தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக் கட்சி அரசாங்கம் மட்டுமே ஒரே வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளுடன் கூட்டணியோ அல்லது ஏதாவது புரிந்துணர்வுகளையோ தேர்தல்களில் ஏற்படுத்திய போதெல்லாம், அது அவர்களை அதிகாரத்தில் வைத்திருந்தது. 2015இல் பொதுவேட்பாளருடன் சுதந்திரக் கட்சி தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரத்தைச் சுற்றி அணிவகுத்தன. தற்போது நமக்கு ஏற்பட்டிருப்பது மிக மோசமான நெருக்கடி. நமது பிரச்சினைக்கு சர்வகட்சி ஆட்சியே மருந்தாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குப் பாராளுமன்றம் ஒன்றாக இருக்க வேண்டும். பாராளுமன்றம் ஒற்றுமையின்றி பிரிந்து நிற்பதையே நாம் இதுவரை கண்டுள்ளோம். ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இது பற்றி வெறுமனே விவாதம் நடத்தி மக்களின் பணத்தை வீணடிப்பதை விடுத்து வேலையில் இறங்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இதை ஏன் நமது சட்டமன்றம் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

கே: எவ்வாறாயினும், எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காமல் முழுமனதுடன் அரசாங்கத்திற்கு உதவத் தயாராக இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சி எந்த பதவியையும் ஏற்கவில்லை என்றால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது சாத்தியமாகுமா?

பதில்: அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்ளமல் இருப்பது அல்ல விடயம். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதே அனைவரினதும் தேவையாகும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஆசீர்வாதமாக அமையும். 2008மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் முழு நாடும் அரசாங்கத்தின் பின்னால் இருந்ததை நாங்கள் அவதானித்தோம். அதனால்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எங்களால் வெற்றி பெற முடிந்தது. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் ஓரளவுக்கு இருந்தது. இப்போது இதற்கு மேலும் தேவை. அரசியல்வாதிகள் 'முழுமனதுடன் ஆதரிக்கலாம்' என்று சொல்வார்கள். ஆனால் அதைக் காண்பிக்க வேண்டும். உதாரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுள்ளனர்.

கே: ஆரம்பத்தில் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அல்லது போராட்டக்காரர்கள், பின்னர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சில அரசியல் கட்சிகளால் தவறாக வழிநடத்தப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான போராட்டம் உள்ளது. போராட்டங்கள் இந்த நாட்டுக்குப் புதியவையும் அல்ல. எங்கள் அன்றாட வாழ்க்கையிலும் ஆரம்பத்தில், அப்பாவி மக்களின் தேவைகள் ஒடுக்கப்பட்டதால், அவர்கள் தெருக்களுக்கு வந்தனர், அது நன்றாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அரசின் செயல்பாடுகளில் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், எதிர்ப்பு தெரிவிக்கவும், அதிருப்தியை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசியல் தலையீடு காரணமாகப் போராட்டம் தோல்வியடைந்தது. பின்னர் அஹிம்சை இயக்கம் வன்முறையை நோக்கித் திரும்பியது. அதனால்தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டனர். மேலும் பல வீடுகள் தீயிடப்பட்டு சூறையாடப்பட்டன. அது அஹிம்சை அல்ல.

கே: உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 20ஆவது திருத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழியாக அமையும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: அரசியலமைப்புச் சட்டம் மக்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை மட்டுமல்ல, நாட்டை எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கான விதிகளும் வழிமுறைகளும் அரசியலமைப்பில் உள்ளன.

தற்போதைய அரசியலமைப்பு போன்ற அடிப்படை பலவீனமான சட்டம் உங்களிடம் இருந்தால், இந்த பணியை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். 22ஆவது திருத்தம் கூட இப்போது எங்கள் மேசையில் உள்ளது. அரசியல் அறிவியலின்படி, பொதுவாக ஒரு அரசியலமைப்பு 25முதல் 30ஆண்டுகள் வரை இருக்கும்.

உண்மையில், இது ஒரு தலைமுறைக்கானது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு திருத்தம் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த அரசியலமைப்பு 1978இல் நடைமுறைக்கு வந்தது. இது பலவீனமான அரசியலமைப்பு என்பதை இது காட்டுகிறது. நாட்டின் அடிப்படைச் சட்டம் பலவீனமாக இருந்தால், மற்ற சட்டங்கள் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, நாம் மிகவும் வலுவான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும், அது அவர்களின் தேசியம், மதம், இணைப்புகள் மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும். ஒரு பிரிவினருக்காக மட்டும் அரசியலமைப்பை உருவாக்க முடியாது. அது முழு நாட்டிற்கும் இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் வற்புறுத்தி வருகிறோம், அதுதான் தயாரிப்பில் இருக்கிறது.

தற்போது, அரசியலமைப்பு வரைவு உள்ளது. எனவே, அந்த வரைவை நாங்கள் பரிசீலிப்போம். அதன் பிறகு, வரைவு குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அது பகிரங்கப்படுத்தப்படும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகின்றேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. 13ஆவது திருத்தம் போன்ற விடயங்கள் உள்ளன. அதனை நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.

தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும், அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் வர வேண்டும். அதைத்தான் அரசியலமைப்பில் இருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.

அர்ஜூன்

Comments