இருபதாவது அகவையில் தடம் பதிக்கும் மலையக சிறுவர் இல்லம் | தினகரன் வாரமஞ்சரி

இருபதாவது அகவையில் தடம் பதிக்கும் மலையக சிறுவர் இல்லம்

மலையகத்தை சேர்ந்த, சட்டத்தின் முன் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சிறுமியர்களாக இனம் காணப்பட்ட பெற்றோரை இழந்த, பாதுகாவலர்களை இழந்த, அரவணைப்பற்ற, சமூகப் பாதுகாப்பற்ற பல்வேறு சிறுமியர்கள் நீதிமன்றத்தின் மூலம் அரவணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்து மத அமெரிக்க துறவி சுவாமி தந்திரதேவா அவர்களின் முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட மலையக சிறுவர் இல்லம் பதுளை மாநகரில் தமது இருபதாவது அகவையில் தடம் பதித்திருக்கிறது.  

மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும், லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபை மற்றும் அறங்காவலர் சபையினரின் ஆரம்ப கட்ட 1/3நிதி உதவியுடனும் மலையக சிறுவர் இல்லம், பதுளை,  இல. 168, மஹியங்கனை வீதியில்,  2001ஜுன் 6ஆம் திகதி ஆறு சிறுமியருடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகத் தலைவர் ஆர். எம். கிருஷ்ணசாமி ஆவார். 

பல சாதனைகளுடன் வெற்றி இலக்கை நோக்கி தனக்கென சொந்தமான கட்டிடத்தில் இன்று செயல்பட்டு வருகின்றது. சில தினங்களுக்கு முன் நிரந்தர சொந்த கட்டிடத்தில் இவ்வில்லம் அமைந்ததுடன் இருபதாவது அகவையையும் கொண்டாடியது. இவ் இல்லத்தில் இருந்து வெளியேறிய மாணவிகள் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை திறம்பட ஆரம்பித்துள்ளதுடன் அநேகர் அரசு தொழில் வாய்ப்புகளையும், தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளையும் அவர்களிலும் சிலர் மணம் முடித்து நிறைவான திருமண வாழ்வை வாழ்பவர்களாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அன்றைய நிர்வாக சபை தலைவர் செ. கருணைலிங்கத்தின் பங்கேற்புடன் பதுளை பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களின் பங்கேற்புடன் இச்சிறுவர் இல்லம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மலையக சிறுவர் இல்லம் முழுமையாக சமூக உதவி ஸ்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. அதன் நிர்வாக குழுவினரின் ஆலோசனைகளின் பெயரில் மலையகத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வறுமை காரணமாக தங்களின் பிள்ளைகளின் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவிகள் நல்கும் இடமாக இருந்து வருகின்றது.  

மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர், யுவதிகளுக்கு இலவசமான கணனி அறிவு மற்றும் தையல் முதலான தொழில்சார் பயிற்சி நெறிகளை வழங்கி கைதேர்ந்தவர்களாக மாற்ற பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் நோக்கத்தை ஏற்புடையதாக அனைவரின் சம்மதத்துடன் இவ்வில்லம் இயங்குகிறது. 

ஆறு பெண் பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மலையக சிறுவர் இல்லத்தில் 14, 23, 31என்றவகையில் சிறுமியர்களினுடைய எண்ணிக்கை அதிகரித்து வந்தன. தற்போது 35சிறுமியர் இவ்வில்லத்தில் தற்போது பராமரிக்கப்படுகின்றார்கள். 

சுயாதீனமான இல்லமாக ஆரம்பிக்கப்பட்ட மலையக சிறுவர் இல்லத்தின் சேவைகளை உணர்ந்த அரசாங்கம் 2001ஆம் ஆண்டு தொடக்கம் ஊவா மாகாண சபையின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு சிறுவர் இல்லமாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மகளிர் பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு முதலான முற்றும் முழுமையான அரச கண்காணிப்பின் கீழ் சமூக உதவி ஸ்தாபனத்தின் மேற்பார்வையில் சிறுவர் இல்லம் அமையப் பெற்றுள்ளது. 

இரண்டு தசாப்த காலமாக நிரந்தர கட்டிடம் இன்றி 13க்கும் மேற்பட்ட குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடங்களிலேயே, இவ்வில்லம் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. 

இவ்வில்லத்திற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைக்கும் பணியில் அதன் ஸ்தாபக தலைவர் ஆர். எம். கிருஷ;ணசாமி மேற்கொண்ட முயற்சிகளுக்கு, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் தெய்வத்திரு. பிரேமச்சந்திரன் அவர்களின் முழு முயற்சியில் காணி ஒன்றை பெற்றுக்கொள்ள முடிந்தது.  

அதன் பின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களுடன் இல்ல கட்டுமான பணிகளை ஆரம்பிக்க முடியாமல் சுமார் ஐந்து வருட காலம் கடந்து சென்றாலும் அடித்தளத்துக்கு தேவையான பண உதவிகளை ஸ்தாபக தலைவர் ஆர். எம். கிருஷஷணசாமி பெற்றுக்கொடுத்து ஆரம்பித்து வைத்தார். இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் கௌரவ டாக்டர் பரமநாதன் அவர்களின் முழு முயற்சியுடனும் கௌரவ அறங்காவலர் ஸ்ரங்கன் மற்றும் அன்றைய நிர்வாக சபை தலைவர் கௌரவ செ.கருணைலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் முதலாவது மாடிக்கான அமைப்பு வேலைகள் நிறைவு பெற்றது.  

இரண்டு மாடி கட்டிடத்திற்கான அமைப்பு வேலைகள் பூரணப்படுத்தல், நிறைவு வேலைகளை செய்வதில் பாரிய சவால்கள் காணப்பட்ட சூழ்நிலையில் கட்டுமான பணிகள் 6மாதங்களுக்கு பின் போடப்பட்டிருந்தது. 

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் திரு ரஞ்சன் சிவஞானசுந்தரம் அவர்களின் தலைமையிலான வன்னிஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தார் கனடாவில் வசிக்கும் எம்.டி செல்லையா மற்றும் மனோன்மணி ஞாபகார்த்த நிதியத்தின் ஊடான தொடர்புகளை ஏற்படுத்தி நிறைவு வேலைகளுக்கு ஒத்துழைப்பு நல்கியமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். 

மேலும் ஒரு சில குறைவேலைகள் புதிய கட்டிடத்தில் காணப்படினும் அவை இவ்வாறான கொடை வள்ளல்களினால் மலையக சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு நிவர்த்தி செய்து தரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மலையக சிறுவர் இல்லத்தில் இதுவரை 450க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுடைய வாழ்வாதார தேவைகளை, இவ்வில்லத்தின் ஊடாக நிறைவு செய்துள்ளார்கள். 

சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு அனேகமாக உள்ள பிரச்சினை 'பிறப்புச் சான்றிதழ்கள்' பெற்றுக் கொள்வதாகும். அவற்றுக்காக நாம் அனுமான பத்திரங்களை பெற்று அதன் ஊடாக அவர்களுக்கான பாடசாலை அனுமதிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். அதன் பெறுபேறாக க. பொ. த. சாதாரண பரீட்சைக்கு தோன்றி 2007ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சிலரைத் தவிர அநேகர் உயர்தரம் கற்று, தமது பாடசாலை கல்வியை முழுமைப்படுத்தியுள்ளனர். இதிலும் பலருக்கு பல்கலைக்கழக தெரிவுகள் கிடைக்கப்பெற்ற பட்டதாரிகளாக தங்களுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள்.   விசேட தேவை உடைய எமது பெண் பிள்ளைகளை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான இயல், இசை, நடனம், தமிழ் மொழி, ஆங்கில மொழி, கணிதம் முதலான வகுப்புகளும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த மனிதநேய பணிக்கு அன்று தொடக்கம் இன்று வரை மனமுவந்து உதவி செய்யும் சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், நிறுவனத்தினர், வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்கள் என அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர். இவ்விலத்தில் தங்கி தனது வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும் சின்னஞ்சிறார்களுக்கு உணவு உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என இவ் அனைத்தையும் இவ்வில்லம் பெற்றுக் கொடுக்கின்றது. 

மேலும் இம் மலையக சிறுவர் இல்லம் மாகாணத்திலேயே சிறுவர் நன்நடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் 19இல்லங்களில் ஆன்மீகம், கற்றல், கலாசாரம், ஒழுக்கம், பண்பாடு, கட்டுப்பாடு, விளையாட்டு, மனையியல், தையல் ஆகிய துறைகளிலும் முதன்மை நிலையில் இருப்பதினால் சிறுவர் இல்லங்களுக்கு இடையிலான மதிப்பீட்டில் அரசு முதன்மை சான்றிதழ்களையும் இம்மலையக சிறுவர் இல்லமே தொடர்ச்சியாக தமதாக்கி கொண்டு வருகின்றது. 20வருட கால இருளுக்கு ஒளி வீச முன்வந்து உழைத்த சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களுக்கும், ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து பெருந்தகைகளுக்கும் இவ்வில்லம் தமது பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றது.  

தகவலும் படங்களும்
பதுளை எம். செல்வராஜா

Comments