சீர்மை பெறாத திட்டங்கள், சீரமைக்கப்படாத கால்வாய்களினால் சீறிப் பாய்ந்த ஆடி மழை வெள்ளம் | தினகரன் வாரமஞ்சரி

சீர்மை பெறாத திட்டங்கள், சீரமைக்கப்படாத கால்வாய்களினால் சீறிப் பாய்ந்த ஆடி மழை வெள்ளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடந்த 31ம் திகதி முதல் கனத்த மழை பெய்துவருகிறது. சீறிப்பாய்ந்த வெள்ளத்தால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.  

இவ்வருடம் பெய்த ஆடி மழையின் கோரப் பிடியில் சிக்கிய நுவரெலியா மாவட்டத்தில் 04பேர் பலியானதுடன் கண்டி மாவட்டத்தில் மூவர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்திற்கே பாதிப்பு அதிகம் என்று கூற வேண்டும். இந்த இயற்கை அனர்த்தங்களினால் பல பாடசாலை கட்டடங்கள் சேதமடைந்து பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பட்ட காலிலே படும் என்பார்களே, அதுதான் மலையகக் கல்விக்கும்!  

கடந்த முதலாம் திகதி கினிகத்தேனை பொல்பிட்டிய ஹிம்டிகேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை பாலர் பாடசாலைக்கு கூட்டிச் சென்ற 60வயது பாட்டி இடையில் குறுக்கிட்ட ஓடையை கடக்க முற்பட்டபோது வெள்ளத்தில் சிக்குண்டு இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.  

இதே போன்று நோட்டன் விதுலிபுர டெப்ளோ ஜனபத பகுதியில் மண்சரிவில் வீடு ஒன்று முற்றாக மண்ணில் புதையுண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். இந்த அனர்த்தத்தின்போது குறித்த வீட்டின் குடும்பத் தலைவி மற்றும் மகள் வெளியில் சென்றிருந்த வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் அதனால் அவர்கள் இருவரும் உயிர்தப்பியதாகவும் தெரிய வருகிறது. இப்பகுதியிலிருந்து மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுமாறு அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் மண்சரிவு அபாயம் காணப்பட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு காணி வீடு போன்றவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் காணிகள் பெற்றுக்கொடுத்தாலும் வீடுகளை மீண்டும் அமைத்துக்கொள்வதற்கான வசதிகள் எல்லோரிடமும் காணப்படுவதில்லை. கட்டடம் அமைப்பதற்கு முன் வரைபடங்கள், மற்றும் மண்சரிவு பற்றிய ஆய்வு அறிக்கைகள் என்பன காலதாமதத்தை ஏற்படுத்துகின்றன. கட்டட ஆராய்ச்சி நிலையத்தால் அனுமதிக்கப்பட்டவாறே பெரும்பாலும் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் தொடர்பாக உரிய சட்டநடவடிக்கைகளை பொலிஸாரும் உள்ளூராட்சி அதிகார சபைகளும் எடுக்காதிருப்பது இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன என்றால் அது மிகையாகாது.  

இதேவேளை கடந்த 02ம் திகதி நாவலபிட்டிய கெட்டபுல அக்கரகந்த தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்ததால் கயிறு ஒன்றின் உதவியுடன் பாலத்தைக் கடக்க மனித சங்கிலி அமைத்து சென்றபோது அதில் கைநழுவி மூன்று தொழிலாளர்கள் மிகவும் பரிதாபமான முறையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்கள்.  

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இப்பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் எதுவும் கிடையாது. இந்த பாலத்தை அபிவிருத்தி செய்யும​ைபோது நீரின் அளவை கருத்தில் கொண்டு பாலத்தின் உயரத்தை மதிப்பிட்டிருக்க வேண்டும். மதகு போன்று அமைக்கப்பட்டமையும் இந்த அனர்த்தத்துக்குக் காரணம் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இதேநேரம்  கலபொட நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக தனது காதலனுடன் சென்றபோது காதலி வழுக்கி விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் உயிரினை துச்சமாக மதித்து பாதுகாப்பற்ற முறையில் கவனமின்றி செயற்படுவதனையே எடுத்து காட்டுகின்றது.  

எது எவ்வாறான போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக 7649பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 25வீடுகளுக்கும் மேல் சேதமடைந்துள்ளன. 643குடும்பங்களுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளன. 16இற்கும் மேற்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.  

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல சேதங்களை எதிர்கொண்டுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை ஹைட்ரி தோட்டத்தை ஊடறுத்து செல்லும் ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக அத்தோட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து 25குடும்பங்களைச் சேர்ந்த சுமார் எண்பது பேர் வரை பாதிக்கப்பட்டனர்.  

இப்பகுதி இவ்வருடத்தில் மாத்திரம் இரண்டு தடைவைகள் பாதிப்புக்குள்ளாகியது. வீடுகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உடைமைகளும் சேதமடைந்துள்ளன.  

ஹட்டன் பகுதியில் வடிகால்வாய்கள் முறையாக அமைக்கப்படாத நிலையே காணப்படுகிறது. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய மழையில் கூட மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பு உள்ள பிரதான வீதி நீரில் மூழ்குவது இதனால்தான்.  

இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். மழை நேரங்களில் இவ்வீதியில் நடந்து செல்லும் பலரின் பாதணிகள் நீரில் அடித்துச்செல்லப்படுகின்றன பெறுமதிமிக்க பொருட்கள் நீரில் வீழ்ந்து அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதற்கு பல வருடங்களுக்கு முன் ஹட்டன் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 09வயது மாணவி பாடசாலை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது வீதியில் நீர் நிரம்பி இருந்ததால் கால்வாயில் வீழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தில் இப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்படுகின்றது.  

ஹட்டன் டிக்கோயா நகர சபை இவை எதனையும் கண்டு கொள்வதில்லை. அவ்வப்போது தற்காலிகமாக எதனையாவது செய்து கண்டும் காணாததுபோல் இருந்து விடுகிறது.  

மக்கள் அடையும் பாதிப்புக்கள் பற்றி எவ்வித கவலையும் குறித்த சபைக்கு கிடையாதென்றே கூறவேண்டும். குறித்த நகரசபை பிரதேசத்தில் பல சட்டவிரோத கட்டடங்கள் காணப்படுகின்றன. இந்த கட்டடங்களில் ஆபத்து குறித்து நகரசபை அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  

கட்டடங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொடுக்கும் போது அந்த சபையில் ஒரு தொழிநுட்பவியலாளர் மற்றும் கட்டட அமைப்புக்குழு இருந்தும் முறையாக எதற்கும் அனுமதி வழங்குவதாகத் தெரியவில்லை. இதனால் அண்மைக்காலமாக பல கட்டடங்கள் தாழிறக்கத்திற்குள்ளாகி தற்போது அவற்றிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இம் மழையின் போது ஹட்டன் எம்,ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்று தாழிறக்கத்திற்கு உள்ளாகி 04.08.2022திகதி கட்டட ஆராச்சி நிலையத்தின் அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அக்கட்டத்திலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நகரப்பகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாக திருத்தியமைக்காததன் காரணமாகவும் சுத்தமாக வைக்கப்படாததாலும் மழை நேரங்களில் நகரத்தின் பல இடங்களில் நீர் வீதியில் பெருக்கெடுப்பது வழமை. இது கண்டு கொள்ளப்படவில்லை.  

இது குறித்த அதிகாரிகளின் கவனத்திற்கு சமூக வலைத்தளங்களின் மூலமாகவும், ஊடகங்களின் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.  

இதே நேரம் வெள்ளம் காரணமாக கொட்டகலை வட்டவளை உள்ளிட்ட பிரதேசங்களில் பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்து பொது மக்கள் மிக சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். இதைத் தடுப்பதற்கான முறையான தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை.  

ஹட்டன் கொழும்பு, ஹட்டன் கண்டி, ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட பல வீதிகள் பல தடவைகள் மண்சரிவால் பொதுப்போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளன.  

கொழும்பு பதுளை பிரதான புகையிரத மார்க்கத்தில் சுமார் 15கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல நாட்கள் புகையிரத சேவைகள் தடைப்பட்டன. விவசாய காணிகள் நீரில் மூழ்கி பல விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  

இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று கூட முறையாக இல்லை. ஏனைய மாவட்டங்களில் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கப்போகிறது என்று அறிந்த உடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மலையகத்தின் பல பகுதிகள் வருடாவருடம் பாதிக்கப்படுகின்ற போதிலும் அவ்வாறான ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. 

இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுவது நாட்டின் பொருளாதாரமே. எனவே இத்தகைய சேதங்கள் ஏற்படாதிருக்கும் வகையில் உடனடியாக தீர்வுகள் காண்பது மிகமுக்கியம்.  

மேலும் இந்த இயற்கை அனர்த்தங்களில் பெரும்பாலானவை மக்களின் தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகவும் இடம்பெறுகின்றன என்றால் அது மிகையாகாது. ஆற்றை மறித்து வீடுகளையும் கடடங்களையும் அமைப்பதுவும், குப்பைகளை கால்வாய்களிலும் ஆறுகளிலும் வீசுவதும், மரங்கள் பாதுகாப்பற்ற முறையில் தறிப்பதுவும், அபிவிருத்தி என்ற போர்வையில் பல்வேறு முறைகேடான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதும் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமையும் பெரும்பாலான இயற்கை அனர்த்தங்களுக்கு காரணமாகின்றன.  

எனவே நாட்டில் உள்ள சட்டத்திட்டங்களுக்கேற்ப உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவை முறையாக அமுல் படுத்தப்பட வேண்டும். தேவை கருதி பல புதிய சட்டங்களும் கொண்டு வருதல் வேண்டும். அரசியல் இலாப நோக்கத்திற்காக செயற்படுவதனை தவிர்த்து பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்கள் நலம் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்டவர்களாக ஆட்சியாளர்கள் என்றைக்கு மாறுகிறார்களோ அன்றுதான் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து நாம் விடுபட முடியுமே தவிர வேறு எந்த மாற்றீடும் இதற்கு தீர்வாகாது.  

மலைவாஞ்ஞன்  
(படங்கள் : ஹட்டன் விசேட நிருபர்

Comments