'பாசப் பிரவாகம்'; அமரர் நீர்வை பொன்னையனின் இறுதிச் சிறுகதை தொகுதி | தினகரன் வாரமஞ்சரி

'பாசப் பிரவாகம்'; அமரர் நீர்வை பொன்னையனின் இறுதிச் சிறுகதை தொகுதி

தனது 90ஆவது வயதில் 26/03/2022ல் அமரர் ஆன நீர்வை பொன்னையன்  தான் இறப்பதற்கு இருபதே நாட்களின் முன் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த நூல் இது.

நீர்வையின் என்னுரையும் நீர்வைக்காக திருவன்னியகுலம் அளித்துள்ள இந்த நூலின் அணிந்துரையும் கூட 06.03.2020என்றே திகதியிடப்பட்டுள்ளன. இறக்கும் தருவாயிலும் 90வயதின் முதுமையிலும் அவருடைய உழைப்பும் சோர்வற்ற சுறுசுறுப்பும் வியப்புத் தருபவை.

அதைத்தான் டொக்டர் எம்.கே. முருகானந்தன் 'முதுவயதிலும் அவர் ஓயவில்லை. தொடர்ந்தும் தன் பணியை சிறப்புடன் செய்வதற்குத் தேவையான உடல்,  உள வல்லமையையும் ஆரோக்கியத்தையும் கொண்டிருந்தார்' என்று தனது முன்னுரையில் குறிக்கின்றார்.

'இத்தொகுதியில் உள்ள ஏழு கதைகளையும் நான் எனது 90ஆவது வயதிலேயே எழுதினேன். இலக்கியப் படைப்பு என்பது பொழுது போக்கிற்காக என்ற நிலையில் இருந்து ஆக்க இலக்கியம் மக்களது விடிவுக்காகவே என்ற கருத்து நிலையிலிருந்தே எனது ஆக்கங்களைப் படைத்துள்ளேன்' என்று இந்த நூலுக்கான தனதுரையில் குறித்துள்ளார் நீர்வை.

நீர்வை மறைந்து இரண்டே ஆண்டுகளின் பின் அவரது நினைவுகளுக்கான அஞ்சலியாகவும் இன்னுமொரு சிறுகதை நூலாகவும் வெளியிட்டுள்ள நீர்வையின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் பாராட்டுதல்களுக்குரியவர்களே. குறிப்பாக மகள் அருணா, மருமகன் சுரேந்திரன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சிவகுருநாதன் டொக்டர் முருகானந்தன் போன்றோர்.

இந்தப் பாசப் பிரவாதம் நீர்வையின் 13ஆவது சிறுகதைத் தொகுதி. 1961ல் வெளிவந்த முதல் தொகுதியான மேடும் பள்ளமும் தொகுதியைத் தொடர்ந்து 2019இல் வெளியிட்ட 'சாயல்' நீர்வையின் 12ஆவது தொகுதி. அவரது மரணத்துக்குப் பின் இந்த இறுதித் தொகுதி அவருடைய 13ஆவது தொகுதியாக வெளிவந்துள்ளது.

புனைவுசார் இலக்கிய வகைகளில், சிறு கதைகள் மாத்திரமே நீர்வையின் பிரதான தளம் என்றாலும் தனது 60ஆண்டுகால எழுத்துலக காலத்தில் 130சிறுகதைகளையே இவர் எழுதியுள்ளார். அந்த 130கதைகளும் இந்த 13தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். உழைக்கும் வர்க்கத்தினரை பிரதிநிதித்துவம் செய்பவர்களே நீர்வையின் சகல கதைகளினதும் பிரதான கதைமாந்தர்களாக இருந்துள்ளனர். ஒரு இலட்சிய வேட்கையுடன் எழுத்துலகில் தடம்பதித்து நின்றவர் நீர்வை பொன்னையன்.

புனைவுகளுக்கப்பாலான நூல்களாகவும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை நீர்வை எழுதியும் வெளியிட்டுமிருக்கின்றார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்ட காலத்திலும் அது உச்சத்தில் நின்று தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சிய காலங்களிலும் கூட அதனுடன் இணைந்து நெருக்கமான உறவுகளைக் கொண்டவராக அவர் இருக்கவில்லை. ஆனாலும் சகல முற்போக்கு எழுத்தாளர்களுடனும் நீர்வை மிக நெருங்கிய உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருந்தவர். எண்பதுகளின் பின்பான காலங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நலிவுற்று செயலிழந்ததைத் தொடர்ந்து 'இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்' என்னும் அமைப்பை உருவாக்கிப் பணியாற்றினார்.

தனது பட்டப் படிப்பிற்காக கல்கத்தாவுக்குச் சென்றிருந்த போது ஏற்பட்ட முற்போக்கு இலக்கிய உணர்வுகள் இவை.

இந்நூலின் அணிந்துரையில் இந்த உணர்வின் உருவாக்கம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார் சி.வன்னியகுலம். 'நீர்வையின் சிந்தனைக்களத்தில் ஒருபெரும் பாய்ச்சலை உருவாக்கியது அவரின் கல்விப் பின்னணியாகும். மேற்குவங்கத்தின் தலைசிறந்த கல்லூரியாகிய சரம்பூர் கல்லூரியில் கல்விகற்று பட்டம் பெற்றவர். மேற்குவங்க புரட்சியின் தொட்டில் மட்டுமல்ல. புரட்சிகர சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட நீர்வையை வளர்த்தெடுத்த தொட்டிலுமாகும்.

அந்நிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மேற்குவங்கம் புரட்சி கரமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையே கதிகலங்கவைத்தது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக கம்யூனிச அரசொன்றை உருவாக்கி அதனை முப்பது வருடங்களாக கண்ணிமை போலக் காத்த பெருமையும் வங்கத்திற்கே உரியது! நீர்வையின் ஒட்டுமொத்த ஆளுமை உருவாக்கத்தில் வங்கம் ஓர் பலமான அத்திவாரமாக அமைந்தது...' என்று தொடர்கிறது அணிந்துரை.

பாசப்பிரவாகம் என்னும் இந்த நூலில் அடங்கிய கதைகள் சமூகத்திலேற்படும் மாற்றங்களையும் அம்மாற்றங்களின் பின் விளைவுகளையும் சிலாகித்து நிற்பவை. பெரும்பாலான கதைகள் முப்பதாண்டுகால யுத்தத்தின் போது மக்கள் எதிர்கொண்ட துன்பதுயரங்களையும் யுத்தத்தின் பின்விளைவுகளையும் பேசுகின்றன. நிலவுடைமை சமூகத்தின் சீரழிவுகளையும், தொழிலாள மக்களின் அவல வாழ்க்கையையும் இவைபடம் பிடித்துக்காட்டுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் இக்கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் நீர்வை என்ற இலட்சியவாதியின் வலுவான கருத்து நிலை தேடல்களும் சமூக அரசியல் கண்ணோட்டமும் வியாபித்து நிற்பதைக் காணலாம்.

இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்ற வெளியீடாக வந்திருக்கும் இந்த 'பாசப்பிரவாகம்' சிறுகதைத் தொகுதியின் விநியோக மற்றும் விற்பனை உரிமைகளை பூபாலசிங்கம் புத்தகசாலை ஏற்றிருக்கிறது. நூலின் விலை ரூபாய் 350/= தொடர்புகள் 'பூபாலசிங்கம் புத்தகசாலை. தொலைபேசி 0112422321.

தெளிவத்தை ஜோசப்

 

 

 

Comments