மக்கள் மத்தியில் எழுந்துள்ள தவிர்க்க முடியாத சந்தேகம்! | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் மத்தியில் எழுந்துள்ள தவிர்க்க முடியாத சந்தேகம்!

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் உருவெடுத்து ஆறு மாத காலத்துக்கு மேலாகி விட்டது. நாட்டில் கொவிட் தொற்று தணிவுநிலைமைக்கு வந்ததன் பின்னர், பொருளாதார நெருக்கடி உருவெடுத்ததையடுத்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் இரசாயன உரப்பசளை வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இவ்வாறு நாடெங்கும் வியாபித்த போராட்டங்கள், காலப்போக்கில் உச்சநிலையை அடைந்தன.

அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அத்தனை பேருமே வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனக் கோஷமெழுப்பினார்கள். அவ்வாறான போராட்டம் தீவிர நிலையை அடைந்ததையடுத்து, ஜனாதிபதியை வீடு செல்லுமாறு வலியுறுத்தி அவர்கள் போராடினர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து கொழும்பு காலிமுகத்திடலுக்கு வந்து சேர்ந்த போராட்டக்காரர்கள் அங்கேயே முகாமிட்டுக் கொண்டனர். காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பெருந்தொகையானோர் அங்கு ஊர்வலமாக வந்து சேர்ந்த பின்னர் இடம்பெற்ற சம்பவமானது எமது நாட்டின் வரலாற்றில் முன்னர் ஒருபோதுமே நிகழாததாகும். நாட்டின் ஆட்சித் தலைவரே தனது பதவியைத் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அது மாத்திரமன்றி, ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் இதுவரை இடம்பெற்றுள்ள வன்முறைகளும் சட்டமீறல்களும் எண்ணிலடங்காதவை ஆகும். ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், அலரிமாளிகைக்குள்ளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய வன்முறைகள் இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த சம்பவங்களாகும்.

சாத்விக முறையிலான ஆர்ப்பாட்டமென்பது வேறு, சட்டத்துக்குப் புறம்பான வன்முறையென்பது வேறு. ஆர்ப்பாட்டக்கார்கள் விளைவித்த சேதங்கள் விபரிக்கக் கூடியவையல்ல. போராட்டம் ஒருபுறத்தில் தீவிரமடைந்து கொண்டிருக்கையில், சட்டத்தை உதாசீனம் செய்கின்றதொரு சுபாவம் வேகமாகவே நாட்டில் வளர்ந்து கொண்டு போனது. அதாவது ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் எத்தகைய சட்டமீறலிலும் ஈடுபடலாமென்ற அசாத்திய துணிச்சல் பலரிடம் குடிகொண்டு விட்டது.

இவ்வாறான ‘பலாத்கார கலாசாரம்’ நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை கற்றோரும் புத்திஜீவிகளும் நன்கறிவர். ஆனாலும் அவர்கள் வாய்திறந்து கருத்துக் கூற அஞ்சுகின்றனர். சட்டமும் ஒழுங்கும் உதாசீனம் செய்யப்படுகின்ற நாடு ஜனநாயக நாடு அல்ல. 

ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேறி விட்டது. முன்னைய அரசாங்கம் பதவியிலிருந்து நீங்கியுள்ளது. புதிய ஆட்சித் தலைமையும் உருவாகியுள்ளது. நாட்டின் அரசியலமைப்புக்கு ஏதுவாக புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். அமைச்சர்களும் நிருவாகத்துக்குப் பொறுப்பான புதிய அதிகாரிகள் பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு கியூவரிசைகள் பெரிதும் குறைந்து விட்டன. பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைவடைந்து செல்கின்றன.

ஆனாலும் போராட்டங்கள் முடிவடையவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்ப்பது என்ன? அவர்களது உள்நோக்கம் யாது? அவர்களது மறைமுக நிகழ்ச்சித் திட்டம் என்ன? அவர்களின் பின்புலத்தில் அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் இயங்குகின்றனவா?

ஆர்ப்பாட்டங்கள் இன்னுமே முடிவின்றித் தொடர்கின்ற போது, இவ்வாறான சந்தேகங்கள் தவிர்க்க முடியாமல் எமக்குள் எழுகின்றன.

Comments