இருளுக்கு சாபமிட்டுக் கொண்டிருப்பதால் நன்மை எதுவும் விளையப் போவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

இருளுக்கு சாபமிட்டுக் கொண்டிருப்பதால் நன்மை எதுவும் விளையப் போவதில்லை!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவதுகூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமுன்வைத்த கொள்கைப் பிரகடன உரையில், தேசிய அரசாங்கத்தை அமைக்க அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பை மீண்டும் ஒருமுறைவலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தைப் பின்தள்ளி விட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒன்றிணைவதற்கு தான் நேசக்கரம் நீட்டுவதாகவும், இந்தச் சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்குப் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த 28ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை முடிவுக்குக் கொண்டு வந்து ஓகஸ்ட் 03ஆம் திகதி புதிய கூட்டத்தொடருக்கான ஆரம்பத் திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு எளிமையான முறையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு அமைய மரியாதை நிமித்தமான பீரங்கி வேட்டுக்கள் தீர்த்தல், குதிரைப்படை உள்ளிட்டவற்றின் வாகனத் தொடரணி போன்ற அம்சங்கள் நிறுத்தப்பட்டு, சாதாரணமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகல் 10.15மணியளவில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரொன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புதிய கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு ஜனாதிபதியே தலைமை தாங்குவார். அது மாத்திரமன்றி, அன்றைய தினம் சபாநாயகருக்கான அக்கிராசனத்தில் ஜனாதிபதி அமர்ந்து சபை அமர்வுகளுக்கும் அவரே தலைமை தாங்குவார்.

இதற்கமைய பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பற்றிய உரையை நிகழ்த்தியிருந்தார். நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி தனது உரையில், 'நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப் பிரச்சினை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்தக் கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுக் கொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்.

நாம் இன்று நவீன வரலாற்றிலே ஒருபோதும் எமது நாடு முகம்கொடுத்திராத கடுமையான பிரச்சினையொன்றுக்கு முகம் கொடுத்துள்ளோம். நாம் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்.

 அதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணையும் சவாலை வெற்றி கொண்டால் மாத்திரமே முடியும். இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் கௌரவ உறுப்பினர்களும், அதுபோன்றே நாட்டு மக்கள் அனைவரும் நாட்டினைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு தத்தமது சக்திக்கு உட்பட்டவாறு பங்களிப்புச் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும், இது பற்றிய பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியின் தனி விருப்பத்திற்கேற்ப செயற்படுகின்ற அரசாங்கமொன்றல்ல. அது பொதுவான கொள்கை வட்டத்தினுள் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களின் பிரகாரம் பயணிக்கும் அரசாங்கமொன்றாகும். அனைவரினதும் கருத்துக்களின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அரசாங்கமாக அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்குத் தனது உரையில் நன்றி தெரிவித்திருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். இது தவிரவும் கடந்த காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகள் விமர்சிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் அவர் தனது உரையில் பிரஸ்தாபித்திருந்தார்.

'யாரேனும்  சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது. ஊழல் மற்றும் மோசடி ஊடாக நாட்டின் நிதி மற்றும் வளங்களைக் களவாடியதனால் நாட்டுக்கு ஏற்பட்ட  இழப்புகள்பற்றி மக்கள் அறிவார்கள்.  ஆனாலும் பொய்ப்பலிக்கடாக்களை எடுத்துக்காட்டி  வெளிநாட்டு முதலீடுகளைத்  தடைசெய்து நாட்டுக்கு ஏற்படுத்திய இழப்பு கணக்கிட முடியாத அளவுக்கு விசாலமானதாகும்.

இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித் திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த் தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் இன்று மக்கள் எரிபொருள் வரிசைகளில்  நீண்ட நாட்கள்  அலைவதற்கு  அவசியம் ஏற்பட்டிருக்காது.

சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும் போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள்  வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக் கூறி சில வைத்தியர்கள்  ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான  உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை  வழிதவறி நடத்தி  தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு  அழிவடைந்தது.

இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக் காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3பில்லியன் டொலருக்கு அதிகமான அளவு  கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி  ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால  நட்பு சிதறிப் போனது' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் தெரிவித்திருந்தார்.

கடந்தகால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு 25வருடங்களுக்கான திட்டமொன்றைத் தயாரிக்கவிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர், 2025ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது தமது முயற்சியாகும் என்றார்.

பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

'நான் இந்தப் போராட்டக்காரர்களை வேட்டையாடப் போவதாக பாரிய பிரசாரத்தை சில குழுக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஆயினும் அது உண்மையல்ல. நான் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எந்தவொரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை.  அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்வருவதற்கும் நான் விசேட செயலணியொன்றை தாபிப்பேன்.

அமைதியான போராட்டக்காருக்கு அநீதி விளைவித்தால் அந்தச் செயலணிக்கு 24மணித்தியாலத்தில் எந்த ஒரு நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான அறிவித்தல்கள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை தாபிப்பேன்.

ஆயினும், திட்டமிட்டு சட்டத்தை மீறி, வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறி செயல்பட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. சட்டம் எனக்கும், உங்களுக்கும், அனைவருக்கும் ஒன்று' எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதுபோன்று பல்வேறு விடயங்கள் குறித்து தனது உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் உரை அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக் கூடியதாகவிருந்தது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் கோரிக்கையைப் பெரும்பாலான கட்சிகள் சாதகமாகப் பார்த்திருப்பதாகவே தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்ற சிறுபான்மைத் தலைவர்கள், விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சியின் அதிருப்திக் குழுவினர் சர்வகட்சி அரசாங்க அழைப்புத் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாட்டை சவால்களிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுவதாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

சம்யுக்தன்

Comments