இ.தொ.காவும் த.மு.கூட்டணியும் இணைந்து செயல்பட வேண்டிய காலம் இது! | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.காவும் த.மு.கூட்டணியும் இணைந்து செயல்பட வேண்டிய காலம் இது!

தனியார் தொலைகாட்சி ஒன்று அண்மையில் நடாத்திய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன் பங்கேற்றிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தமிழின பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமை பற்றி தமது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியபோது குறித்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் குறுக்கீடு செய்து ஒரு கேள்வியை முன்வைத்தார். அக்கேள்வி இதுதான். தமிழராய் பிறந்த ஒரே காரணத்துக்காக தமிழர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக எப்படி கூறுகிறீர்கள்.?  

சற்று சூடாகிப்போன சுமந்திரன் 30வருடகால யுத்தமே அதைத்தானே நிரூபிக்கிறது. ஊடகவியலாளராக இருந்தும் இது தெரியாதா? என்று ஒரு போடு போட்டார்.  

பெரும்பான்மை சமூகத்தினர் பலரின் எண்ணப்பாட்டின் விளைவுதான் அந்த ஊடகவியலாளரின் வெளிப்பாடு. எம்மைப் போலத்தானே தமிழர்களும் வாழ்கிறார்கள். வீடிருக்கிறது, நிலமிருக்கிறது. தொழில் இருக்கிறது. அரசாங்க சேவைகள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் எம்மைப் போலவே அனுபவித்துக் கொண்டு இனப்பாகுபாடு என்று கூப்பாடு போடுவது ஏன்?  

மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான கேள்விதான். ஆனால் உள்ளே நுழைந்து தமிழராய் வாழ்ந்து பார்த்தால் மட்டும்தான் உண்மையை உணரமுடியும்.  

இன ரீதியிலான நெருக்குவாரங்களின் யதார்த்தங்களை புரிந்து கொள்ளாத நிலையில் வேறு பிரித்து பார்க்க வழியில்லைதான். வடக்கு கிழக்கு தமிழர்களின், தமிழ் பேசுவோரின் உரிமைக் குரல்கள் எப்படி அங்கீகரிக்கப்படாமலே அலட்சியப்படுத்தப்படுகிறதோ அதுபோலவே பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்வியல் முரண்களை இனங்கண்டு கொள்ளவும் பலர் விரும்புவதில்லை.  

தமிழ் - சிங்கள அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளில் அவ்வப்போது எழும் சுயநலப்போக்கும் சந்தர்ப்பவாத தீர்மானங்களுமே இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதற்கான ஏதுநிலை. இது மலையக சமூகத்துக்கும் பொருந்தும். சராசரி ஒரு தமிழ் கிராமத்தவரைப் போல, ஒரு சிங்கள கிராமத்தவரைப் போல வாழ்க்கையை அனுபவிக்க இச்சமூகத்தால் முடியாமல் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.  

ஏனெனில் சலுகைகள் மட்டுமே சாதனை சமாச்சாரங்களாக பெற்றுத் தந்த தலைமைகளை தன்னகத்தே கொண்டது இந்த மலைபுூமி. 200வருடகால பல அத்தியாவசிய சங்கதிகள் இன்னும் பேசப்படுபவைகளாக மட்டுமே இருக்கின்றன. தீர்வுகள்தான் கிட்டவில்லை. இதில் முக்கியமானது நிலவுடமை. சுதந்திர வாழ்வின் அடையாளமே நிலத்துக்கான நிரந்தர சொந்தம்தான். அடுத்து லய வாழ்க்கையிலிருந்து பூரண விடுதலை. தனித்தனி வீடுகளின் தேவை. முன்னைய நல்லாட்சி காலத்தில் பிரதமராயிருந்தவர் தற்போதைய ஜனாதிபதி. இவர் மலையகத்தில் தேர்தல் பரப்புரை செய்யும்போதெல்லாம் “மலையக மக்கள் ஏனைய சமூகங்களுக்கு சமதையாய் வாழ உரிமை பெற்றவர்கள். அவர்களுக்கும் நிலத்தின் மீதான உரிமை, வசதியான தனி வீடு, நிறைவான சம்பளம் கிடைப்பதே நியதி” என்று கூறி வந்திருக்கிறார்.  

பொதுவாக தற்போதைய ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் குறிப்பாக மலையக மக்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள். நீண்டகாலமாக அவர் பால் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். அவரை இனவாதி என்று எவரும் முத்திரை குத்தவில்லை. முன்னைய நல்லாட்சியில் அவரின் சேவையை தமிழ் முற்போக்குக் கூட்டணி சில அத்தியாவசிய காரணங்களுக்காக பெற்றுக்கொள்ளவே செய்தது. பிரதேச சபைகள் சட்டதிருத்தம், மலையகத்துக்கான அதிகார சபை, காணி உரிமை வழங்கல், பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு, தனிவீட்டுத் திட்டம் என்று ஆரோக்கியமான சில காரியங்கள். ஆனால் சம்பள விடயத்தில் மட்டும் சறுக்கல்.  

உண்மையில் பெருந்தோட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை ஒளி மலையகமெங்கும் பிரகாசித்தது. எனினும் எண்ணியவை அப்படியே நடந்து விடவில்லை. செயற்பாட்டில் ஒரு மந்தநிலை காணப்பட்டது. அது அரசியல் ரீதியாக அவ்வப்போது தோன்றியிருந்த அசாதாரண நிலைமையின் பிரதிபலிப்பு. நல்லாட்சி தோல்வியடைந்த பின் மலையக அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் முடக்கம் கண்டண. குறிப்பாக வீடமைப்புத் திட்டம், 1000ரூபா தினச்சம்பள அதிகரிப்பு எனும் விடயத்தைத் தவிர இற்றைவரை பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை. கொரோனா தொற்றின் அலைவீச்சு, அதனைத் தொடர்ந்த அரசியல் தளம்பல் நிலை, பொருளாதார நெருக்கடி, இளைய சமூகத்தினரின் எழுச்சிப் போராட்டம், ஸ்திரமற்ற கள நிலவரம் என்று நாடே பிரக்ஞை இழந்து தவிக்கலானது.  

தற்போது சூடு தணிந்திருக்கிறது. அரசியல் ஸ்திரநிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதி தொிவின்போது இ.தொ.கா. தமது இரண்டு வாக்குகளையும் அவருக்கே வழங்கியுள்ளதாக தெரிகின்றது. தவிர த.மு கூட்டணிக்கும் தற்போதைய ஜனாதிபதியுடன் எவ்வித முறுகலும் இல்லை. இது நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித்தரவே செய்யும். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் அவர் பொறுப்பிலேயே இருந்தது. ஆனால் ஒரு வீடுதானும் கட்டப்படவில்லை. தற்போது அது அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.  

பெருந்தோட்ட மக்களுக்கான காணி விவகாரத்தில் எப்பொழுதுமே பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் தலையீடு இருந்து வந்துள்ளது. இவ்விடயத்தை இன ரீதியிலான ஒரு கண்ணோட்டத்துடனையே அவர்கள் கையாள முற்பட்டுவந்துள்ளமை ஒன்றும் பரம இரகசியமல்ல. குறிப்பாக தரிசு காணி விநியோகத்தில் இவர்கள் தமது மேலாதிக்கப் போக்கை பிரயோகிக்கவே செய்வார்கள். இதனால் பெருந்தோட்டச் சமூகம் தமக்கான காணியுரிமை சங்கதி நியாயபுூர்வமாக கையாளப்படுமா என்று ஐயப்பாட்டுடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

இதேவேளை 14ஆயிரம் வீடுகளுக்கான இந்திய நிதியுதவி தற்போதைய நிலையில் பற்றாக்குறை சமாச்சாரமாகியுள்ளது. முன்பு 12இலட்சம் ரூபாவை தலா ஒரு வீட்டுக்கு இந்தியா ஒதுக்கியிருந்தது. ஆனால் நடைமுறைச் செலவு 15இலட்சமாக காணப்பட்டது. இந்திய நிதி போதுமானதாக இல்லாததால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அப்போதைய அமைச்சர் பழனி திகாம்பரமும் அவரின் பின் இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமானும் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான எஞ்சிய தொகையை தமது அமைச்சிலிருந்து பெற்றுக்கொடுத்ததாக கூறியிருந்தார்கள்.  

தற்போதைய நிலையில் வீடொன்றை நிர்மாணிக்க 25இலட்சம் வரை தேவைப்படும். இந்திய நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எஞ்சிய தொகையை ஈடுசெய்வது என்பது பிரச்சினைக்குரியதாகவே இருக்கப்போகிறது. இந்திய அரசாங்கத்துடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்தி நிதியை அதிகரிக்க வேண்டுகோள் வைப்பது ஒன்றுதான் வழி என்றால் அதற்கான முயற்சிகளை த.மு. கூட்டணியும் இ.தொ.காவும் மேற்கொள்வதே உசிதமானது.  

இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் அண்மைக்காலமாக ஒரு புரிந்துணர்வு காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படியொரு சுமூக நிலைக்கான தேவை இருக்கவே செய்கின்றது.

நல்லாட்சியின் போது த.மு.கூட்டணியின் சில நடவடிக்கைகள் மலையக சமூகத்துக்கு இன்றியமையாததாகவே அமைந்தன. இதை யாரும் மறந்துவிட முடியாது. இனிவரும் காலங்களில் அதன் தொடர்ச்சியான முனைப்புகளே முக்கியமாகிறது. அதற்கு இவ்விரு கட்சிகளின் இணக்கப்பாடு அவசியம் என்பதே பலரது எதிா்பார்ப்பாக உள்ளது.  

அத்துடன் இதயசுத்தியுடன் அணுகப்படாத எந்தவொரு விவகாரமும் இங்கிதமாக முடிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நாம் மறந்துவிட கூடாது. இம்மக்களின் யதார்த்த வாழ்வியலை சரியாக உள்வாங்கிக் கொள்ளாதவர்கள் மத்தியிலே தேவைகளை ஈடேற்றிக் கொள்வது என்பது சாதுரியமான முன்னகர்வுகளிலேயே தங்கியுள்ளது. சாணக்கியமான வழி நடத்தல் காலத்தின் தேவை.   

பன். பாலா  

Comments