நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி ரணில் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி ரணில்

நாடு தற்பொழுதுஎதிர்கொண்டிருக்கும்சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கான திறன் வாய்ந்த சரியான அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்பதை பாராளுமன்றம் அடையாளம் கண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார். நாட்டின்தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயேஅவர் இதனைக் கூறினார்.

கே: பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இது பாராளுமன்றத்தின் பெரும்பான்மையின் பிரதிபலிப்பாகும். இது பற்றியே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்புச் செயல்முறைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 225பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் உறுதிமொழியளித்துள்ளனர். தற்போது இந்த செயல்முறை முடிந்து, பெரும்பான்மையானவர்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

கே: பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறு த்துவதற்கு தீர்மானம் எடுத்திருந்த போது, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்க என்ன காரணம்?

பதில்: உண்மையில் அது பொதுஜன பெரமுன எடுத்த முடிவு அல்ல. அடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் படித்தவர்கள். எனவே, இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் உணருகின்ற சூழ்நிலையை சிந்திக்கவும் அடையாளம் காணவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, அவர்கள் சொந்தமாக ஒரு முடிவை எடுத்தார்கள், இப்போது நாம் அதை மதிக்க வேண்டும். இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்று சிலர் நினைத்தனர். மேலும் சிலர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை முக்கியம் என்று நினைத்தனர். பொருளாதாரம் முக்கியம் என்ற எண்ணத்தில் சிலர் இருந்தனர்.

இறுதியில், பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சரியான அரசியல் தலைவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். நாம் அதைத் தொடர வேண்டும் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவருக்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கே: ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது பொதுஜன பெரமுன எடுத்த ஒருமனதான தீர்மானமா?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடி அவ்வாறு முடிவெடுக்கவில்லை. ஆனால் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் முன்னுரிமை என்ன என்பது தெரியும்.

இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் போது, மூன்று வரிகளைக் கொடுத்து இப்படித்தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. எனவே, பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். நாம் இப்போது அதை மதித்து முன்னேற வேண்டும்.

கே: பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், உங்களது சொந்த அரசாங்கத்தை அமைக்க நீங்கள் திட்டமிடுகிறீர்களா அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க மற்ற எதிர்க்கட்சிகளை அழைக்கிறீர்களா?

பதில்: இது பற்றிக் கட்சித் தலைவர்களும், ஜனாதிபதியுமே கலந்துரையாட வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு எதிர்ப்புகள் குறையும் வகையில் அவர்கள் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இப்போதைய நிலைமை ஜனாதிபதி யார், பிரதமர் யார் என்பதில் இல்லை. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே உண்மையான நிலை. பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு கூட எங்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைப்பதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று பெரும்பான்மையானவர்கள் நினைத்தார்கள். எனவே, அந்த வகையில் சர்வகட்சி ஆட்சி அமைவது நல்லது என நான் கருதுகிறேன்.

கே: பாராளுமன்றத்திற்கு வெளியில் நிலவும் யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது எனவும் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். நீங்கள் இது பற்றிக் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: அது மிகவும் வெளிப்படையானது. அந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் கனவு உலகில் வாழ்கிறீர்கள். மக்கள் அவதிக்குள்ளாகி தெருவில் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கையை அராஜகத்தை நோக்கிக் கொண்டு செல்ல ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அதை நாம் அனுமதிக்க முடியாது. அதேநேரம், எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள், உணவுப் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதிக உணவு விலைகள் மற்றும் மின்வெட்டு போன்றவற்றை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்பதும் உண்மை. இவை பற்றியே நாம் பேச வேண்டியுள்ளது. மக்களுக்கு உண்மையை விளக்கிக் கூற வேண்டியுமுள்ளது.

உதாரணமாக, எரிபொருளை இறக்குமதி செய்ய எமக்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். எனவே, அதற்குள் நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக செயற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வரும்போது விநியோகச் சங்கிலி மீட்டெடுக்கப்படும். அதே நேரத்தில் நமது அண்டை நாடுகளின் நண்பர்களும் சர்வதேச சமூகமும் இந்த நிலையை மாற்ற உதவுவார்கள். அடுத்த ஆறு முதல் 12மாதங்களுக்குள் ஓரளவுக்கு நிலைமையை சீர் செய்ய முடியுமாக இருக்கும்.

கே: பாராளுமன்ற முறைமையின் மீது தற்பொழுது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: வெளியே நடக்கும் விடயங்களுக்கும், பாராளுமன்றத்தில் உள்ள சிலர் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கும் இடையே தொடர்பற்ற நிலை இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே, களத்தில் உள்ள மக்களுடன் தொடர்ந்து கலந்து பேசி அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இதற்கிடையில், ஊழலை அகற்றவும், நிலையான தன்மையை ஏற்படுத்தக் கூடிய வகையில் வினைத்திறனான கட்டமைப்பு மற்றும் நிதி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச ஊழியர்கள் உட்பட நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: சவால்கள் மிகப் பெரியவை. ஒன்று அல்லது இரண்டு பேர் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று கருதவில்லை.

நாட்டில் உள்ள சிறந்த மூளைகள் ஒன்றுகூடி தங்கள் அரசியலை மறந்து எமக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

கே: 19ஆவது திருத்தத்துக்கு மீண்டும் செல்ல வேண்டியதன் அவசியத்தை சிலர் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு என்ன?

பதில்: 19ஆவது திருத்தச் சட்டம் முழு பலத்துடன் மீண்டும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அதன் பிறகு, அமைச்சரவை இது குறித்து முடிவெடுத்து முடிக்க வேண்டும்.

அர்ஜூன்

Comments