காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள்

யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய படைவீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.

30ஆண்டு கால யுத்தத்தின் தியாகிகளை நினைவு கூரும் தினத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்காக ஒரு அருட் தந்தையும் தமிழ் இளைஞர்கள் குழுவும் காலி முகத்திடலில் நிகழ்வை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் பிரபாகரனுடன் இணைந்து போராடிய அருட்தந்தைகள் போராட்ட களத்தில் காணப்பட்டதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

புலம்பெயர் புலிகள் போராட்டத்தில் முன்னணியில் உள்ளதாகவும் அதன் உறுப்பினர் ஒருவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது வேலைத்திட்டத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு விட்டு நாடு தாவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் மக்கள் அறிவித்துள்ள போதிலும் பிக்குகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை வருந்தத்தக்கதென அவர் தெரிவித்துள்ளார்.

32 வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் 27,000 போர் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 64,500 பேரில் 14,500 பேர் தற்காலிக ஊனமுற்றுள்ளதாகவும் தர்மசிறி தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் அனைத்து கிளர்ச்சியாளர்களையும் கைது செய்ய வேண்டமென்றும், ஜனாதிபதி செயலகத்துக்குள் ஊடுருவி கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments