மனித நேயன் மு. பஷீர் சிறுகதைகள் | தினகரன் வாரமஞ்சரி

மனித நேயன் மு. பஷீர் சிறுகதைகள்

மு. பஷீர் 1968ல் எழுத ஆரம்பித்த இலங்கையின் முன்னணி எழுத்தாளர். எழுத்தையும் இலக்கியத்தையும் வாழ்க்கையாக வகுத்துக் கொண்டவர். இறுதிமூச்சு வரை எழுதினார். சிறுகதை, கவிதை, நாவல், இலக்கிய உரையாடல் என இலக்கிய வட்டத்திற்குள்ளேயே பஷீர் காலத்தை செலவிட்டார். நீர்கொழும்பு மினுவாங்கொடையைச் சேர்ந்த மு.பஷீரை மேல் மாகாண எழுத்தாளராக இனங்காணலாம். 

ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை மு.பஷீர் எழுதி உள்ளார். 2013ஆம் ஆண்டளவில் மினுவாங்கொடை கிராமத்தில் நடந்த அவரின் நூல் வெளியீட்டில் அவரைக் கடைசியாகச் சந்தித்தேன். அவரது மறைவை நினைவு கூர்ந்து இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இலக்கிய மஞ்சரியில் அவரது புனை கதைகளை அறிமுகம் செய்தேன். அதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்காக புத்தளம் நகரில் நாங்கள் நடத்திய சிறுகதை எழுதும் பயிற்சி வகுப்பில் ஒரு வளவாளராக வந்தபோது அவரை முதலில் சந்தித்தேன். கலைவாதி கலீல், எம்.எச்.எம் ஷம்ஸ், ஏ.எம். ஜவாத் மரைக்கார் உட்பட பல எழுத்தாளர்கள் வளவாளர்களாக பங்கேற்றிருந்தனர். அதில் சிறுகதையின் கட்டமைப்பு பற்றி அவர் பேசியதாக ஞாபகம். 

மு. பஷீர் இடதுசாரி அல்ல. ஆனால் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களையும் தொழிலாளிகளையும் தமது கதை மாந்தர்களாக்கினார். பல கதைகளில் ஏழைப் பெண்களை பிரதான கதை மாந்தர்களாக்கி உள்ளார். 1960களின் இன்ஸான் பண்ணையின் 'புதிய அலை' முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கிய உணர்வுகளை பஷீரின் கதைகளும் பிரதிபலிக்கின்றன. எனினும் பஷீர் 'இன்ஸான்' பண்ணையைச் சேர்ந்தவரல்ல. 

சமூக விழிப்புணர்வும் செயலூக்கமும் பல்துறைக் கருத்தியல் ஈடுபாடும் சமூக யதார்த்தப் பார்வையும் கொண்ட அந்தக் குழுவினர் முஸ்லிம் புனை கதை உலகத்தில் மாற்றங்களை விளைவித்தனர். 

சக்திவாய்ந்த ஒரு பிரிவினர் 'இன்ஸான்' பத்திரிகைப் பண்ணை ஊடாக தமிழ் - முஸ்லிம் இலக்கியப் பரப்பிற்கு அறிமுகமாகினர். அடுத்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களை முஸ்லிம் புனைகதைப் பரப்பில் அவர்கள் தான் நாயகர்களாக விளங்கினர். தமக்கு ஊக்கமளித்தவர்களாக பஷீர் பட்டியலிட்டுள்ள கீழ்வருவோர் அந்தச் சாதனைக்குரிய எழுத்தாளர்கள்தான். எம்.எச்.எம் ஷம்ஸ், திக்குவல்லை கமால், மொயின் சமீம், எஸ்.எல்.எம் ஹனீபா, கலைவாதி கலீல், பண்ணாமத்துக் கவிராயர் என்று ஒரு எழுத்தாளர் குழுவினர் இதில் அடங்கி இருந்தனர். இவர்களில் பலர் சிறுகதை ஆசிரியர்கள். 'புதிய அலை' எழுத்தாளர்கள், 'இன்ஸான்' பண்ணைக்கு வெளியிலும் இருந்தனர். கருத்தியலிலும் இலக்கிய பார்வையிலும் அவர்கள் வேறுபட்டிருந்தனர். 

மு.பஷீர் வித்தியாசமானவர்களில் வித்தியாசமானவர். ஒரே வகைக் கலை அணுகுமுறைக்குள் அவர் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளவில்லை. புதியதாக கதை மாந்தர்களை அவர் அறிமுகப்படுத்தினார் என்ற கே.எஸ் சிவகுமாரனின் கூற்றையும் இங்கு நோக்கலாம். புதிய கருப்பொருள்கள் கதை மாந்தர்கள் எவ்வாறாக வேறுபட்டாலும் மனித நேயம் அவரது கதைகளில் தொனிப்பொருளாக உள்ளது. மனித வாழ்வை ஆராய்வது அவரது நோக்கமாக இருந்தது என்றும் குறிப்பிட்டு கூறலாம். 

வாழ்வை அறியும் அவரது பயிற்சியில் ஆழ்ந்த வாசிப்பு ஒன்றிணைந்திருந்தது. மலையாள எழுத்தாளர்களான வைக்கம் பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, பொற்றேகாட், கோவிந்தன் நாயர் போன்றவர்களால் மிகவும் கவரப்பட்டிருந்தார். புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, லா. சா. ரா போன்ற தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளை அவர் அதிகம் படித்திருந்தார். அவர்களின் செல்வாக்கு அவரது கதைகளில் எழுத்துக்களில் இடம் பெற்றிருக்கலாம். 

ஆயினும் பஷீர் தனித்துவமான தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட எழுத்தாளர். அவரது கதைகளில் சம்பந்தப்படும் கதைமாந்தர்கள் வேறுபட்டிருந்தாலும் வாழ்க்கை பற்றிய விசாரமும், யதார்த்தப் பார்வையும் அவற்றைச் சாதாரண மாந்தர்களின் கதைகளாக்கின. அநேக கதைகள் அவர் வாழ்ந்த மாவட்டத்தைப் பிரதிபலித்தன. நீர்கொழும்பும், கொழும்பும், மினுவாங்கொடையும் அவற்றின் சுற்றாடலும், கதைகள் நிகழும் நிலப்பரப்பு எனலாம். பஷீர் தென்னிந்திய பிரயாண அனுபவங்களை வைத்தும் சில கதைகளை எழுதி இருந்த போதும் அவை எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது கேள்விக்குரியது.  

முஸ்லிம்கள் எழுதும் புனைகதைகள் இஸ்லாமிய (ஒழுக்கவியல்) வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் என்ற விவாதங்கள் நடந்த காலப்பிரிவில் இலக்கிய சுதந்திரத்தையும் பாதுகாத்து யதார்த்த இலக்கியப் பார்வைக்கு உயிரூட்டியவர்கள் இந்தக் குழுவினர்தான். மு.பஷீரும் அந்த மரபுக்குரியவர். வாழ்க்கை வசீகரமாயினும் சங்கடங்கள் நிறைந்ததாயினும் பஷீர் வாழ்வின் உண்மைகளைத் தரிசிக்க விரும்பினார். மேலோட்டமான படைப்புக்கு அப்பால் வாழ்வில் இருந்த கடினமான பகுதிக்குள் அவர் பிரவேசிக்க விரும்பினார். அவரது நண்பரும் எழுத்தாளருமான எம்.எச்.எம் ஷம்ஸ் கூறிய வார்த்தைகளை இங்கு பார்க்கலாம். 

'இந்த அசாதாரண மனிதனுக்குள் எத்தனை வகை விசாரங்கள், எவ்வளவு ஆற்றல்கள் இலக்கிய அரைவேக்காடுகள் மத்தியிலே மு.பஷீர் ஒரு சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.' வாழ்க்கை அனுபவங்கள், ஏக்கங்கள், துயரங்களின் உள்ளக உணர்வுகளை கதைகளில் அவர் சித்திரமாக்கினார். 'நிஜங்களின் வலி' (2013) சிறுகதைத் தொகுப்பின் 'கைக்கெட்டும் தூரம்' கதையின் ஆரம்பத்தில் அவர் எழுதும் வரிகள் அவரது கதைகளைப் பற்றிய ஆய்வுகளாகவும் அமைந்து விடுகின்றன. அவர் தமது கதைகளை தன் பார்வையிலிருந்து வளர்த்துச் செல்வது தான் வழக்கம். 

'ஒரு பிடிப்பற்ற மன நிலையுடன் நடந்து கொண்டிருந்ததால் இவர் இருதயத்தினுள் சில தீர்மானங்கள் உள்ளுறைந்து வலுவேறியிருந்தன. இந்தச் சமூகமும் சுயவாழ்வும் கேள்விகளாய் அச்சுறுத்தின என்பது மட்டும் அல்ல ஒவ்வொரு தனிமனித வாழ்வு சார்ந்த காயங்கள் பிற மனிதனது பார்வையில் பெரிதாய் உறைக்கவில்லை என்பது யதார்த்தம். 

பஷீரின் பல கதைகளில் உள் மன விசாரணை அடிக்கடி தோன்றுவது ஏன் என்பதற்கு இந்தப் பந்தியும் ஒரு ஆதாரம்தான். கதை சொல்லும் நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள நீண்ட யாத்திரை செய்திருக்கிறேன். அவருக்குள் இருந்த உள்மன விசாரணை அவரைப் புடம் போட்டுள்ளது. 

ஆயினும் பஷீர் தனி மனித உணர்வுகளையோ சமூக யதார்த்தங்களையோ புறக்கணித்த எழுத்தாளரல்ல. நாளாந்த வாழ்க்கைத் துயரத்திற்குள் சிக்கி உழலும் பல பாத்திரங்களின் போராட்டங்களையும் கண்ணீரையும் பேசும் பல கதைகளையும் படைத்துள்ளார். 

'மொழிவளம், விவரிக்கும் ஆற்றல், பிறர் அதிகம் தேர்ந்தெடுக்காத பாத்திரங்கள், சமூக விமர்சனம், யதார்த்தச் சித்திரிப்பு, மனித நேயம் ஆகிய பண்புகள் அவர் கதைகளில் உள்ளன' என்ற புகழ்பெற்ற விமர்சகர். கே.எஸ் சிவகுமாரன் கூற்று அவரது கதைகளின் தனித்துவப் பண்புகளைச் சுட்டிக்காட்டுவதுதான். 

பொய் முகங்கள் மீது தாக்குதல் தொடுப்பது, மனித நேயத்தைப் பக்குவமாக்குவது, உலக பிரச்சினைகளைப் பேசுவது என்று தமது இலட்சியங்கள் பற்றி பஷீர் தமது முன்னுரை ஒன்றில் கூறி உள்ளார். எழுத்து வளமும் சமூக அநீதிக்கு எதிரான குரலும் ஒன்றிணையும் கதைகள் சமூகத்தின் ஆழத்தில் புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளை வெளியே கொண்டு வருகின்றன. 'சலனம்' அத்தகைய கதை. 

பஷீரின் முத்திரைக் கதைகளில் ஒன்று 'சலனம்' (1991). கம்பஹா மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த ரமீஸாவின் கதை 'சலனம்'. நாற்பது வயதுள்ள ரமீஸா ஒரு விதவை, அழகான பெண். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கூறும்கதை. ஒரு திரைப்படக்காட்சி போல் சலனம் கதையின் நாயகி ராமீஸாவை அவர் அறிமுகப்படுத்துகிறார், 'விரல்கள் மின்னல் வேகத்தில் பீடிகளை சுற்றினாலும் மனம் நினைவலைகளில் மிதந்தது. இடப்புறமாக நனைத்த இலை அட்டியும் நடுவில் புகையிலை தூளுமாக தட்டில் பீடிகள் குவிந்தன. வெறுந்தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி சுவரில் சாய்ந்த வண்ணம் வேலையில் ஈடுபட்டாள் ரமீஸா'.  

ஏழை ரமீஸா கடைமுதலாளி காசிம் வீசிய வலையில் வீழ்கிறாள். பண உதவி என்ற போர்வையில் இந்த உறவு ஆரம்பித்தாலும் ஊரில் ஆசை நாயகி என்ற பட்டத்தையும் பெற அது காரணமாகியது. 

தனது பீடி சுற்றும் தொழிலை அவள் விடவில்லை. அதில் தேர்ச்சிபெற்ற தொழிலாளி அவள். அவளது வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. ஆயினும் ஒரே மகள் ரிஸ்மியாவை ஒழுக்கத்தை ஊட்டி வளர்த்தாள். திருமணமும் செய்து வைத்தாள். சில மாதங்களில் ரிஸ்மியாவின் வாழ்விலும் சந்தேகப் பிரச்சினைகள் சூழ்ந்தன. ரிஸ்மியாவை கணவன் சந்தேகிக்கிறான் என்பதில் இருந்து பூகம்பம் உருவாகியது. கணவனுடன் சண்டை பிடித்துக் கொண்டு மகள் ரிஸ்மியா வீட்டுக்கு வந்திருந்தாள். 'அவரிடம் ஒரு வீண் சந்தேகம் ஒன்று இருக்கிறது. தான் அப்படிப்பட்ட பெண் அல்ல என்று ரிஸ்மியா அழுதாள். ரமீஸாவுக்குத் தெரியும் ரிஸ்மியா புடம்போட்ட தங்கம். மகள் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அவள் தலைவணங்க மாட்டாள். நீ அங்கு போக வேண்டியதில்லை. என்னுடன் இரு. காசீம் முதலாளியிடம் உதவிபெற்று புதிய குடும்பப் பாரத்தையும் சுமக்கத் தயாரானாள் ரமீஸா. 

மறுநாள் காசீம் முதலாளியைச் சந்தித்து குழந்தையும் கையுமாக வந்து நிற்கும் மகளின் பிரச்சினையைக் கூறினாள் ரமீஸா. 'ரமீஸா நீ ஒண்ணுக்கும் பயப்படாத, காதிக் கோட்டில் வழக்கைப் போட்டு ரிஸ்மியாவின் கணவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்.

உன்னைக் கைவிடாத மாதிரி மகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கும் வயதாகிவிட்டது. அவளை நான் விவாகம் செய்து கொள்கிறேன்'. மகளைத் தனது வலையில் சிக்க வைக்க காசீம் தீட்டிய திட்டத்தை ரமீஸா ஏற்க மாட்டாள். அவளது மகள் பத்தரைமாற்றுத் தங்கம். சீறிய நாகமாக வீட்டுக்கு வந்து மகளைப் பார்த்துக் கர்ஜித்தாள்.  

'குழந்தையை தூக்கிக் கொண்டு உன்னுடைய வீட்டுக் போ, ஒண்ட மாப்பிள்ளையோடு வாழ்க்கை நடத்து அல்லது அங்கேயே மௌத்தாகிப்போ, முதலில் இங்கிருந்து போ'. 

ஒவ்வொரு கதைகளிலும் பஷீரின் பார்வைகள் எழுத்துக்களின் மாயங்களால் ஈட்டி போல் பாய்கின்றன மனித உள்ளங்களில்.  

பேராசிரியர் :
எம்.எஸ்.எம். அனஸ்

Comments