ஒரு வருட நிறைவைக் காணும் வவுனியா பல்கலைக்கழகம் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு வருட நிறைவைக் காணும் வவுனியா பல்கலைக்கழகம்

நிலையான தரமுள்ள உயர் கல்வியை வழங்குவதும், பிராந்தியத்தினதும், நாட்டினதும் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதும், சமூகம் சார்ந்த விடயங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதுமே பல்கலைக்கழகங்களின் தூரநோக்காகும். இந்த நிலையில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகம் அதன் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் தலைமையில் பல்வேறு விடயங்களில் சமூகத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது.  

முக்கியமாக நாட்டின் அவசியத் தேவையாகிய நல்லிணக்கம் நல்லுறவை நாட்டின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றச் செய்து அதன் ஊடாக சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்கான முயற்சியில் நல்லிணக்க நிலையம் ஒன்று அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.  

தென்னாசியப் பிராந்தியத்தில் நீண்டதொரு ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகக் கருதப்படுகின்ற இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவை வளர்த்தெடுப்பதற்கான தேவை நீண்டகாலமாவே நிலவி வருகின்றது. அதனை நிறைவேற்றும் வகையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க நிலையம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அதனையடுத்து. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய நல்லிணக்க நிலையத்தை உருவாக்குமாறு ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பல்வேறு மதத்தலைவர்கள், கலாசார மட்டத்திலான சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல நிலைகளில் பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக இந்த நல்லுறவுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அதன், ஓர் அம்சமாக பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசியலில் பெண்கள் என்றதொரு கல்வி நெறியை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்த நிலையம் குறித்து விளக்கமளித்த பேராசிரியர் மங்களேஸ்வரன் கூறினார்.  

முதலில் வடமாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியாக 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு வருடங்களில் 1997ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகமாக பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம் என இரண்டு பீடங்களுடன் இந்த உயர்கல்வி நிலையம் தரமுயர்த்தப்பட்டது. பின்னர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வவுனியா பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் தனது உயர்கல்விப் பயணத்தில் முதலாம் ஆண்டை நாளை ஆகஸ்ட் முதலாம் திகதி பூர்த்தி செய்கின்றது.  

பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம், தொழில்நுட்பப் பீடம் என மூன்று பீடங்களுடன் பல்கலைக்கழகமாகத் தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த உயர் கல்வி நிறுவனத்தில் நாட்டின் அனைத்து கலாசார, மதங்கள் மற்றும் இனங்களையும் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட கல்விசார், கல்விசாராத ஊழியர்கள் இங்கு பணியாற்றுகின்றார்கள்.  

இந்தப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புக்கான கட்டிட வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய வேண்டுகைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான முதலீட்டு நிதியொதுக்கீடுகள் அரசிடமிருந்து கிடைக்கவில்லை. பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, இங்கு அவசியமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் நாட்டைத் தாக்கிய கொவிட் 19நோய்ப் பேரிடர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துறைக்கு அவசியமான முதலீட்டு நிதியொதுக்கீட்டை அரசு செய்யவில்லை. இது பல்கலைக்கழகத்தினர் மத்தியில் கவலையை ,ஏற்படுத்தியுள்ளது.   

ஆயினும் பற்றாக்குறைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கடந்த ஒரு வருட காலத்தில் வவுனியா பல்கலைக்கழகம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றது. அவற்றில் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விநெறிகள் யாவும் ஆங்கில மொழிமூலமாகவே நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் உலக நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து அதன் ஊடாக கல்விசார் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு சர்வதேச அலகு ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஊடாக இப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும், கல்விசார் ஊழியர்களுக்கும் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கல்விசார் ஊழியர்களுக்கும் இடையில் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.   

பல்கலைக்கழகங்கள் பொதுவாக மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன் பட்டமளிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் வவுனியா பல்கலைக்கழகம் அதனின்று ஒரு படி முன்னோக்கிச் சென்று கடந்த ஒரு வருட காலத்தில் பல்கலைக்கழகத்திற்கும் வியாபார சமூகத்துக்கும் இடையிலான ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை ஒன்றிற்கமைய உலக வங்கித் திட்டத்தின் கீழ் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கின்றது.  

அத்துடன் சமூகச் செயற்பாடுகளில் அறிவுசார் நிலையில் ஈடுபடவும் நிறுவன ரீதியில் சமூகத்திற்கான பணிகள் சேவைகளை முன்னேற்றுவதற்கும் வசதியாக தனியார் நிறுவனங்கள் பலவற்றுடன் வவுனியா பல்கலைக்கழகம் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது.   விசேட தேவையுடையவர்களும் உயர் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு உதவும் வகையிலும், விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், உதவிகளின்றி ஒதுங்கியும் வாழ்கின்ற விசேட தேவைக்கு உட்பட்டவர்களும் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்து கொள்வதை உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது.   புதிய கல்வித்துறைக்கான பீடங்களை உருவாக்கும் முயற்சியில் மருத்துவம், சூழலியல், மானுடவியல் சமூகவியல், ஊடகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான கல்விநெறிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ பீடத்திற்கென 35ஏக்கர் காணியும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள வங்கியியலும் காப்புறுதியும் என்பதற்கான கற்கை நெறியில் 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தாராத உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொழில் முயற்சியாண்மை, ஊடகவியல் போன்ற துறைகளிலான கல்வி நெறிகளை ஆரம்பிப்பதற்கும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை உயர் டிப்ளோமா கல்வி நெறியாகத் தரமுயர்த்தித் தொடர்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப் பிரதேசத்தினதும்,வடமாகாணத்தினதும் உயர் கல்வித் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி இப்பிரதேசத்தின் உயர் அடையாளமாக வவுனியா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதே தமது நேக்கம் என வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் இந்த ஒரு வருட நிறைவு காணும் தருணத்தில் தெரிவித்தார்.

பி.மாணிக்கவாசகம்

Comments