நாட்டை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கைக்குரிய தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கைக்குரிய தெரிவு

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதேசமயம் நாட்டின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியையடுத்து மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, நாட்டின் அரசியலமைப்பு விதிமுறைகளுக்கேற்ப பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ரணில் விக்கிரமசிங்க மிகப்பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈட்டியிருக்கும் அவ்வெற்றியை இலங்கையர்கள் மாத்திரமன்றி சர்வதேசமே வியப்புடன் உற்றுநோக்குகின்றது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற மொத்தம் 225உறுப்பினர்களில் இருவர் வாக்களிக்கவில்லை, நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டு விட்டன. எனவே அளிக்கப்பட்ட 219வாக்குகளில் 134எம்.பிக்களின் ஆதரவு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

நாட்டின் ஜனாதிபதியாக அவர் தெரிவானதையிட்டு ஆதரவுத் தரப்பிலும், எதிரணித் தரப்பிலும் எதிரும்புதிருமான விமர்சனங்கள் இருக்கக் கூடும். ஆனாலும் நாட்டின் அரசியலமைப்பு வரையறைகளுக்கு உட்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் அதிகூடிய உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளுடனும் ஜனாதிபதியாக அவர் தெரிவாகியிருக்கின்றார். என்பதே இங்கு நோக்கத்தக்கது. அதாவது சட்டவாக்கசபையில் அதிகூடிய பெரும்பான்மையுடன் அவர் தெரிவாகியுள்ளார். அதுவே ஜனநாயக முறைமையும் ஆகும்.

அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்ததற்கான வலுவான காரணிகளை ஆராய்வது முதலில் முக்கியம். மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியினால் முழு இலங்கையுமே முடங்கிக் கிடக்கின்ற வேளையிலேயே புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இன்றைய வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை மிகுந்த தலைவராக அவர் மீதே பாராளுமன்றம் நம்பிக்கை வைத்துள்ளதென்பதே இதன் வெளிப்படையான அர்த்தமாகும். அதாவது அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவர் மீது எம்.பிக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனரென்றும் குறிப்பிடலாம்.

ஆசிய பிராந்தியத்தில் நிறைந்த கல்வித் தகைமையும், ஆற்றலும், அரசியலில் ஆழ்ந்த அனுபவமும் கொண்ட அரசியல் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மதிக்கப்படுகின்றார். சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்களுடனும், உயர் அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பும் நம்பகத்தன்மையும் கொண்டவர் அவர். எனவே எமது நாட்டின் இன்றைய நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்காக சர்வதேசத்திடமிருந்து ஆதரவையும் உதவிகளையும் அவர் பெற்றுக் கொள்வாரென்ற நம்பிக்கையை பொருளாதார நிபுணர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இன்றைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இருந்து நாட்டை முன்கொண்டு செல்வதாயின் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்ட பயணமே முதலில் அவசியம். ஜனாதிபதியாக வெற்றி பெற்றதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய சுருக்கமான உரையிலும், ஒற்றுமைப் பயணத்தின் அவசியத்தையே வலியுறுத்தியிருக்கின்றார்.

நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பில் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தமொன்று உள்ளது. அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களின் பேரில் செயற்படுவதற்கான தருணம் இதுவல்ல. முதலில் எமக்கெல்லாம் சுமுகமானதொரு நாடு அவசியம். அதன் பின்னரே அரசியல் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது!

 

Comments