ஜனநாயகத்தின் பெறுமானம் கட்டிக்காக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஜனநாயகத்தின் பெறுமானம் கட்டிக்காக்கப்பட வேண்டும்

உலகில் ஜனநாயக பாரம்பரிய ஆட்சிமுறையை பிறழ்வின்றி அடியொற்றி வருகின்ற நாடுகளில் இலங்கைத் தேசமும் ஒன்றாகும். பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் எமது நாடு 1815ஆம் ஆண்டு முழுமையாக ஆட்பட்டுக் கொண்ட பின்னர் பல தசாப்த காலம் அடிமைத்தனத்திலேயே ஆட்சி தொடர்ந்தது.

ஆனாலும் காலப்போக்கில் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தின் போது, பிரித்தானிய ஆட்சியாளர்கள் எமது நாட்டில் படிப்படியாக ஜனநாயக ஆட்சிமுறையைப் புகுத்தத் தொடங்கினர். 1948இல் இலங்கைக்கு அவர்கள் முழுமையான சுதந்திரத்தை வழங்கிய போது, பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி விட்டே சென்றனர்.

அதன் பின்னர் ஜனநாயக ஆட்சிமுறையை வழுவாமல் பின்பற்றி வருகின்ற நாடென்ற பெருமையை எமது நாடு பெற்றுக் கொண்டது. 1978இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டதாக அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்ட போதிலும், ஜனநாயகப் பாரம்பரிய ஆட்சி முறையிலிருந்து எமது நாடு ஒருபோதுமே விலகிச் சென்றதில்லை.

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது நாட்டின் ஆட்சியாளர்களை தேர்தல் ஊடாக மக்களே தெரிவு செய்கின்றார்கள். அடாவடித்தனத்தினாலோ அன்றி தீவிரவாதத்தினாலோ பலவந்தமான முறையில் எந்தவொரு பிரிவினருமே புதிதான ஆட்சியதிகாரமொன்றை உருவாக்கிக் கொள்ள ஜனநாயக நாட்டில் இடமளிக்கப்படுவதில்லை. மக்கள் அளித்த ஆணைக்கு விரோதமாக அரசாங்கமொன்று செயற்படுமிடத்து, அந்த அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவது வன்முறையினால் அல்ல.

மக்கள் தங்களது தீர்ப்பை தேர்தலிலேயே வழங்க முடியும். அதுவரை மக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நாட்டின் பெரும்பான்மை மக்களின் தீர்ப்பிலிருந்தே ஆட்சியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். இவ்வாறான ஜனநாயக பாரம்பரியத்துக்கு மாறான விதத்தில் எந்தவொரு தரப்பினராவது ஆட்சியை மாற்றியமைக்க விரும்பினால் அது தீவிரவாதத்துக்கே ஒப்பானதாகும்.

இலங்கையின் இன்றைய நிலைமையை எடுத்து நோக்குவோமானால், ஜனநாயகப் பாரம்பரியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. நாட்டில் சமீப காலமாக இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் யாவும் ஜனநாயக வரம்புகளையே மீறிய செயல்கள் ஆகும். நாட்டின் ஆட்சித் தலைவரின் வாசஸ்தலம், அவரது உத்தியோகபூர்வ செயலகம், பிரதமரின் தனிப்பட்ட இல்லம் ஆகியவற்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அவற்றைக் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு விளைவித்துள்ள சேதங்கள் அநேகம். ஊடக அலுவலகமே ஆர்ப்பாட்டக்காரர்களால் அடிபணிய வைக்கப்பட்டது.

உலகில் எந்தவொரு ஜனநாயக நாடுமே இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையே ஆபத்துக்குள் தள்ளிவிடும்படியான காரியங்கள் அரங்கேறியிருக்கின்றன. அமைதியை விரும்புகின்ற மக்கள் அடைந்த அச்சத்துக்கு அளவேயில்லை. இவ்வாறான சட்டமீறல்களுக்கு ஆதரவளிப்பதோ அல்லது பரிந்து பேசுவதோ கூட முட்டாள்தனமான செயலாகும்.

மக்கள் எழுச்சி என்பதன் பேரில் புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இறுதியில் மக்களின் பாதுகாப்பையே முற்றிலும் இல்லாமல் செய்துள்ளதற்கு உதாரணங்களாக சில நாடுகள் உள்ளன. அந்நாடுகளில் பல வருடங்கள் கடந்தும் இன்னுமே அமைதி திரும்பவில்லை. அராஜகம் நிலவுகின்ற நாடுகளிலிருந்தாவது இலங்கை பாடம் கற்பது இப்போது அவசியமாகின்றது.

Comments