ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்தில் பாராளுமன்றம் கொண்டுள்ள நம்பிக்கை | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்தில் பாராளுமன்றம் கொண்டுள்ள நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஅரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டமற்றுமொரு பலப்பரீட்சை வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க பதில்ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட அவசரகாலநிலைப் பிரகடனம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தின்அங்கீகாரத்துக்காக விடப்பட்டது.

அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான விவாதம் கடந்த புதன்கிழமை முற்பகல் 10.00மணி முதல் பிற்பகல் 5.20மணிவரை நடைபெற்றது.

இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்களிப்பில் அவசரகால நிலை பிரகடனத்துக்கு ஆதரவாக 120வாக்குகளும், எதிராக 63வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி 57மேலதிக வாக்குகளால் அசரகால நிலை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியிலிருந்தவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்குகளை அளித்திருந்தனர் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்குக் காணப்படும் பெரும்பான்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், அவசரகால நிலைமைப் பிரகடன வாக்கெடுப்பிலும் அவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அதேநேரம், விமல் வீரவன்ச உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள ஒரு சிலர் அவசரகால நிலைமைப் பிரகடனத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த போதும், ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டாலும், அரசாங்கம் என்ற ரீதியில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலத்துடன் அக்கட்சி உள்ளது என்பதே நிதர்சனம். நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களிலிருந்து மீள்வதற்கான திட்டங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி முன்கொண்டு செல்லக் கூடிய அனுபவம் மிக்க அரசியல் தலைவர் ஒருவரின் தேவையை அறிந்தே பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் வேறுபாடுகளையும் மறந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தனர்.

நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் அரசியல் வேறுபாடுகள் மற்றும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்பதே காலத்தின் தேவையாகும்.

அதேநேரம், ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியைத் துறந்து வீடு செல்ல வேண்டும் எனப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள், தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் தமது கருத்துகளை சுதந்திரமாக முன்வைப்பதற்கும், தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கும் உரிமை காணப்படுகின்ற போதும், வெறுமனே மக்களை உருவேற்றி வீதியில் இறக்கித் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்பது நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றங்களைக் கொண்டுவர இடமளிப்பதாக அமையாது.

சவால் மிக்க சந்தர்ப்பத்தில் நாட்டைப் பெறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருத்தமான அளவு கால அவகாசத்தை வழங்கி அதற்குள் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருப்தி அடையாவிட்டால் அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தால் அதில் நியாயம் இருக்கும். இதனை விடுத்து, வெறுமனே அனைத்துக்கும் வீதியில் இறங்கிப் போராடுவதானது போராட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பை தற்போது இழக்கச் செய்து விட்டது என்பதே உண்மை.

சவால்களிலிருந்து நாட்டை மீட்பதற்கும், அரசாங்கத்தைப் பெறுப்பெற்று முன்கொண்டு செல்வதற்கும் முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் எவரும் அதனைப் பொறுப்பேற்கத் தவறியிருந்தனர்.

அதேநேரம், போராட்டக்காரர்கள் எல்லைமீறி நடந்து கொண்டமைதையும் காணக் கூடியதாகவிருந்தது. அரசாங்க நிறுவனமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து அங்கு பணியாற்றியவர்களை அச்சுறுத்தி, நிகழ்ச்சி நிரல்களை மாற்றுமாறு சில போராட்டக்காரர்கள் வற்புறுத்தியிருந்தனர்.

இதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசாங்க நிறுவனங்கள் அரசியல் நிலைப்பாடுகள் இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை என்றாலும், இவ்வாறான நிறுவனங்களுக்கு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதை நியாயப்படுத்த முடியாது.

அதேபோல ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் ஆகிய அரசாங்க கட்டடங்களுக்குள் நுழைந்தவர்கள் பொதுச்சொத்துக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சேதங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கும் அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை தீயிட்டு எரித்து, அங்கிருந்த பல பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டவர்கள் உண்மையில் போராட்டக்காரர்களா என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களால் போராட்டங்கள் திசைமாறிப் பயணித்து நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

இவை போன்ற நிகழ்வுகள் நாட்டை பல வருடங்கள் பின்னோக்கித் தள்ளி விடுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக மே மாதம் 09ஆம் திகதியின் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் போராட்டத்தின் வன்முறை முகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

அரசியலில் மோசடிக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவதை விடுத்து அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்துவதில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதை போராட்டக்காரர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வது அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மென்மேலும் முரண்பாடுகளையே ஏற்படுத்தும். அது மாத்திரமன்றி நாடு தற்பொழுது பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து எமக்குக் கிடைக்கக் கூடிய உதவிகளைத் தடுப்பதாகவும் அமைந்து விடலாம்.

விசேடமாக நாட்டை மீட்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல ஜனாதிபதி எடுத்திருக்கும் கடும் பிரயத்தனங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், ஒரே இரவில் அனைத்து விடங்களையும் சுமுகநிலைக்குக் கொண்டுவந்து விடலாம் என்றும் எதிர்பார்க்க முடியாது. உரிய காலப் பகுதியை அவருக்கு வழங்கி அனைவரும் ஒத்துழைப்பைக் கொடுத்த இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

சம்யுக்தன்

Comments