பசுமை பூமி திட்டத்தை ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லுங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

பசுமை பூமி திட்டத்தை ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

நாட்டுக்கு புதிய தலைமைத்துவம் கிடைத்துள்ளது. நேரம், காலம் பார்க்காமல் சூட்டோடு சூடாக தனிவீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையிலான காய்நகர்த்தலுக்கு மலையக அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும்

'தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களால் பசளையைப் பயன்படுத்தும் விவகாரங்களில் விவசாயிகளைப் போலவே பெருந்தோட்டத்துறையினரும் சங்கடத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால் தேயிலை விளைச்சல் கணிசமான அளவு இழப்பைச் சந்திக்க வேண்டி நேர்ந்துள்ளது'

 

நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் அந்நியச் செலாவணி இல்லாமையே ஆகும். தொலைநோக்கற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு சிக்கலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் ஆடை தயாரிப்புத் தொழிலும் தேயிலைத்துறையும் இயங்காதிருந்தால் நிலவரம் மிகமிக மோசமாகிப் போயிருக்கும். எரிபொருள் நெருக்கடி காரணமாக இவ்விரு துறைகளுமே இன்று மந்தகதியை அடைந்திருப்பதாக சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவிக்கிறார்கள். 

இந்த வகையில் தேயிலை ஏற்றுமதியில் 8சதவீத சரிவு ஏற்பட்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர ரஷ்யா உக்ரைன் யுத்தம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி முற்றிலுமாக ஸதம்பிதமடைந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கேள்வி வழமை போலவே இருந்தாலும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஏற்றுமதிக்கான தேவையை ஈடுசெய்ய முடியாதுள்ளது. இதன் தாக்கமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதிப்பதாகவே அமையும். 

தொழிற்சாலைகள் இயங்குவதற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லை. இதேபோல தேயிலையை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருள் பிரச்சினையால் இயங்க முடியாத நிலை. தோட்டப் பகுதிகளில் இருந்த பாரிய மரங்களை ஏற்கனவே வெட்டி வீழ்த்தி காசாக்கிக் கொண்டு விட்டன தோட்ட நிர்வாகங்கள். இதனால் விறகுக்காக அலைய வேண்டியுள்ளது. அதற்கும் வாகனங்கள் ஓட வழியில்லை. இதனால் நடப்பது நடக்கட்டும் என்று ஆனமட்டும் ஆலைகளை இயங்க வைக்கும் போக்கை கைக்கொள்கின்றது கம்பனி தரப்பு. 

இதன் காரணமாக வேலை நாட்கள் குறைக்கப்படுகின்றன. தோட்ட நிர்வாகங்கள் குறிப்பிட்டளவு கொழுந்து பறித்தாலே போதும் என்னும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு மேலதிக கொழுந்துக்கான வருமானத்தில் வெட்டு விழுந்துள்ளது. கொழுந்து பறிப்பதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கின்றது. வாரம் ஒருமுறை பறித்த தேயிலைச் செடியிலேயே மீண்டும் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற சுற்றுமுறை வழக்கத்தில் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் Rounds என்று குறிப்பிடுவார்கள். இந்த சுற்று முறைமை சரியாக பின்பற்றப்படாவிட்டால் தேயிலைத் தளிர்கள் முற்றிப்போகும். முற்றாத அரும்புகளோடு முறையாக பறிக்கப்படும் தேயிலையே சுவையான தேயிலையாகி கூடிய விலைக்குப் போகும். 

தற்போது இரசாயன பசளை, கிருமிநாசினியை பெருந்தோட்டங்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களால் பசளையைப் பயன்படுத்தும் விவகாரங்களில் விவசாயிகளைப் போலவே பெருந்தோட்டத்துறையினரும் சங்கடத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால் தேயிலை விளைச்சல் கணிசமான அளவில் இழப்பைச் சந்திக்க வேண்டி நேர்ந்துள்ளது. இதனிடையேதான் எரிபொருள் பற்றாக்குறை சமாச்சாரம். 

எனினும் இத்துறையின் அபிவிருத்திப் பற்றி பேசுவோர் அத்துறைச்சார் சமூகத்தின் வாழ்வியல் பற்றி சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

சர்வதேச சமூகம் கூட தேயிலை உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையுமே கருத்திற் கொள்கின்றது.

ஆயினும் இத்துறைச்சார் தொழிலாளர்களின் பொருளாதார தேடலின் பின்புலத்தில் இத்துறை அபிவிருத்தியடைய வேண்டியது அவசியம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 

எரிபொருள் விநியோகத்தில் தேயிலைத் தொழிற்றுறைக்கும் முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தப் போதிலும் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை. அந்நியச் செலாவணி அவசியப்படும் பட்சத்தில் அதற்கான வழிவகைகளை முடக்கிவிட வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். 

பலவருடங்களாக தேயிலைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தவர்கள், வருபவர்கள் பலர். இவர்கள் பணியாற்றும் பிரிவுகள் சார்ந்த தொழில் அறிவைப் பெற்றவர்களாக மட்டுமே பழக்கப்பட்டுள்ளார்கள். இது தவிர தேயிலைத் தயாரிப்பு சம்பந்தமான நுட்பங்கள் எதுவுமே இவர்களுக்கு தெரியாத வகையிலேயே நடத்தப்படுவது அவதானிக்கத்தக்கது.

இதை ஏன் பதிவிடுகின்றோம் என்றால் தொழிலோடு உங்கள் தொடர்பு சரி. அதற்கு மேல் எந்தப் பாாத்தியதையும் உங்களுக்கு இல்லை என்ற ரீதியிலேயே இவ்வளவு காலமும் இச்சமூகம் நடத்தப்பட்டு வந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதற்குதான்.  

தவிர பெருந்தோட்டத் துறையில் ஆதிக்க மேலாண்மைப் போக்கு தலைதூக்கி இருப்பதால் பெருந்தோட்டச் சமூகம் ஒரு பொருட்டாக கருதப்படுவதே இல்லை. இதுவே யதார்த்த நிலைமை. முக்கியமாக கிராமத்தவர்கள் போல தோட்டப் புறங்களில் வாழ்வதற்கான வசதிகள் இல்லை. பெரும்பாலும் லயத்து வாழ்க்கை என்பது துயரங்கள் சூழ்ந்த அவலம். ஒரு சிலர் வசதியினாலும் கல்வி விழிப்புணர்வுகளாலும் இந்த இரும்புப் பிடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்திருக்கலாம். அவ்வாறு வந்தவர்கள் தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை மறந்துபோயிருக்கலாம்.

ஆனால் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் லயத்துக்குள் முடங்கிப்போய் கிடக்கவே செய்கின்றார்கள். குறிப்பாக வசதியில்லாத வதிவிடம், வாழ்வாதாரம் குறைந்த தொழிற்துறை, ஆரோக்கியமற்ற சூழல் என்று ஆட்டிப்படைக்கப் படுகின்றார்கள்.

நிலவுரிமை என்பது நிச்சயப்படுத்தப்படாத பின்புலத்தில் தற்காலிக குடிகள் போலவே தர்க்கரீதியான விமர்சனத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் இருக்கின்றது. இச்சமூகத்தின் வாழ்வாதார உரிமைசார் பிரச்சினையை இச்சமூகம் சாராதோரே கையாள வேண்டியுள்ளது என்பது அவதானிகளின் கருத்து.

அதனால்தான் புறக்கணிப்புகள் ஏராளம். 24மணி நேரங்களில் இந்திய வம்சாவளி மக்களை நாடற்றவர்களாக மாற்றிய பெருமை இந்நாட்டுக்கு உண்டு. அது 1948ஆம் ஆண்டுகால சங்கதிதானே என்று யாரும் அவசரப்பட்டு விடக்கூடாது. குடியுரிமை இன்றைக்கும் இல்லை! 

இச்சமூகம் சாராதவர்களின் கரங்களில் தீர்வு தேங்கிக் கிடப்பதால் இந்த ஓரங்கட்டல்.

அதற்கான அழுத்தம் முறையாக பிரயோகிக்கப்படாது மலையக பிரதிநிதிகளின் காய்நகர்த்தல் யுக்தி மலுங்கடிக்கப்பட்டுக் கிடக்கிறது. இத்தனைக்கும் இடையில் இச்சமூகம் இன்னும் தாம் பிறந்து வாழும் தோட்டங்களை நேசிக்கவே செய்கின்றது. அதுவும் நாலைந்து தலைமுறைகளாக தஞ்சமடைந்து கிடக்கின்றார்கள். கோப்பிக்கும் தேயிலைக்கும் இறப்பர் மரங்களுக்கும் உரமாகிக் கொண்டு வாழ்க்கைக்காக ஏங்கும் ஓர் நிலைமை இன்னும் இங்கு நீடிக்கவே செய்கின்றது.  தவிர பெருந்தோட்டச் சமூகம் இந்நாட்டின் மீது விசுவாசம் கொண்டது அல்ல என்னும் கண்ணோட்டத்துடனேயே அரசியல்வாதிகள் பிரச்சினைகளைக் கையாண்டு வந்ததன் பின்விளைவுகளே இன்றைய நிலைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்று கூறினால் வியப்பல்ல.

சொந்த வீடு, சொந்தக்காணி, கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு, சமவுரிமை கிடைக்காமையினால் தமக்கு தாமே ஓர் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டு வாளாவிருந்ததன் சாபக்கேடுதான் இன்னும் விடிவுக்காக ஏங்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது.  

அண்மைக்கால தனிவீட்டுத் திட்டம் விழிப்புணர்வுக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இருக்க வேண்டும். ஆயினும் அது இடைநடுவில் நின்று போயிருக்கின்றது.

நாட்டுக்கு புதிய தலைமைத்துவம் கிடைத்துள்ளது. நேரம், காலம் பார்க்காமல் சூட்டோடு சூடாக தனிவீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் காய்நகர்த்த மலையக அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும்.

அதேநேரம் தேயிலைத்துறை நலிந்து போய்விடாமல் தக்கவைக்கும்படியான ஏற்பாடுகளையும் புதிய ஜனாதிபதியிடம் முடுக்கிவிட வேண்டும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரலாம். அடிக்கும் அடியின் வலிமையும் சாமார்த்தியத்தையும் சார்ந்த சங்கதி! இது. 

ஜனாதிபதி பிரதமராக இருந்த காலத்தில்தான் பசுமை பூமி திட்டம் கொண்டுவரப்பட்டது. பொதுஜன பெரமுன ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டது.

அன்றைய பிரதமர் இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அவரிடம் பசுமை பூமி திட்டத்தை எடுத்துச் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா! 

பன். பாலா

Comments