யார் இந்த திரௌபதி முர்மு? | தினகரன் வாரமஞ்சரி

யார் இந்த திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற திரௌபதி முர்மு யார்? எந்த இடத்திலிருந்து அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் ? 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் திகதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்றுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் திகதி பிறந்தார் திரௌபதி முர்மு. கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் 20ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றிய இவர், அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சாரத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.  பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000ஆம் ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் திரௌபதி முர்மு பதவி வகித்து இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் திரௌபதி முர்மு. நாளை 25 ஆம் திகதி இவர் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.   

Comments